“ இப்பவே ஓடிடுங்க… ” ரஜினியின் எச்சரிக்கைக்கு முதல் பலி இவரா? மன்றத்திலே மனுசனுக்கு திண்டாட்டம்!

அவ்வளவுதான்… அரசியல் களத்தின் பிடறி மயிரை உலுக்கிவிட்டு பின் வாசல் வழியாக கிளம்பிவிட்டார் ரஜினி. இன்னும் நாலு மாசத்துக்கு அவரிடமிருந்து ‘உசுப்பல்’ வார்த்தைகள் நஹி கர்தாஹே! இந்த நாலு மாதங்களும் அவரது எண்ணம், செயல், துடிப்பு, நடிப்பு எல்லாமே ‘காலா’ வில்தான் இருக்கும்! ஆனால் “ஷுட்டிங் போவதற்கு முன் ஆத்தா இப்படி பலி வாங்கிட்டு போயிருச்சே?” என்பதுதான் ரசிக மகா கண்மணிகளின் ஒரே சோகம்.

இந்த முறை ரஜினி பேசியதில் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்ற நம்பிக்கையின் சதவீதக் கணக்கு சற்று ஜாஸ்தி இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பலத்த உற்சாகம். அரசியல் கட்சிகளும் வைரஸ் புகுந்த ஆன்ட்ராய்டுபோன்கள் போல ஜாம் ஆகிக் கிடந்தன. எந்த தொலைக்காட்சியை திறந்தாலும், ஒரு ரஜினி ரசிகர் குத்த வச்சு உட்கார்ந்து தாங்கள் பல வருஷங்களாக கோழி பிடித்த கதையை வர்ணித்துக் கொண்டிருக்கிற அளவுக்கு போனது நிலைமை.

இது எல்லாவற்றுக்கும்தான் ஒரேயடியாக தடை போட்டுவிட்டார் ரஜினி. “யாரை கழுத்தை பிடிச்சு தள்ளணுமோ, தள்ளு. அவ்வளவு அதிகாரமும் உனக்குதான்” என்று மன்றத்தின் தலைவர் சுதாகரனிடம் பொறுப்பை ஒப்படைக்க, “அறுக்க வேண்டியது விரல்களை அல்ல… தலையை!” என்று முதல் அறுப்பை போட்டார் அவர். வெட்டு விழுந்தது யாருக்கு தெரியுமா? சைதை ரவி என்ற ரஜினியின் பல கால விசுவாசிக்கு. சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் பூக்கடை நடராஜன் என்பவரை ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கியிருந்தார் ரஜினி. இப்போது சைதை ரவி.

ரஜினிக்கு எதிராக பேசிய சீமான், வீரலட்சுமி ஆகியோரின் கட் அவுட்டுகளை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்களுக்கு, ‘அடுத்த வெட்டு உனக்குதான் தம்பிய்…’ என்று எச்சரிக்கையும் போய் சேர்ந்தது. கிள்ளிவிட்டா அழணும். மூடச்சொன்னா படக்குன்னு வாயை மூடிக்கணும் என்கிற பால பாடம் தெரியாமல் அரசியலுக்கு வந்து என்ன பண்ணுவார்களோ என்று நினைத்த ரஜினி, இப்படியெல்லாம் ட்ரெயினிங் கொடுக்கிறாரோ என்னவோ?

அரசியலில் கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லுவார்கள். ரசிகர் மன்றத்திலேயும் அத்தகையை கட்டுப்பாட்டை கொண்டு வருவதன் மூலம், ஜெ. வாயால் அடிக்கடி சொல்லப்படுமே ‘ராணுவக் கட்டுப்பாடு’ என்ற வார்த்தை? அதை மறுபடியும் நினைவு படுத்தியிருக்கிறது ரஜினியின் கட்டளை.

சற்றே ஆக்டிவ்வாக இருக்கும் சைதை ரவி போன்றவர்களை நீக்குவதன் மூலம் முளையிலேயே வெந்நீர் ஊற்றிவிட்டு வெறும் ரசிகர் மன்றத்தை எப்படி கட்சியாக்குவார் ரஜினி?

ஒன்று மட்டும் புரிகிறது… சோழி உருட்டுவதை இன்னும் நாற்பது வருஷங்களானாலும் நிறுத்தப் போவதில்லை நம்ம சூப்பர் ஸ்டார்!

சோழியோட சோழியா நீங்களும் விழுந்து புரளுங்க ரசிகர்களே…

Read previous post:
Swathi Kolai vazhaku movie stills

Close