இமயமலையே சவுக்யமா? கிளம்பினார் புதிய பொலிட்டீஷியன் ரஜினி!
திருவோட்ல கருவாடு விழுந்த கதையாகி விட்டது தமிழ்நாட்டின் நிலைமை. வரலட்சுமி, வையாபுரியெல்லாம் கூட சொந்தமா கட்சி ஆரம்பிச்சு மிரள விடுகிற சூழ்நிலைதான் அன்றாடம். இந்த நிலையில், ரஜினி கமலின் வரவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்கிற நிஜ நிலரவம் புரியாமல் கலவரமாகிக் கிடக்கிறது ரெகுலர் அரசியல்வாதிகளின் மனசு.
நாட்டில் எந்த பிரச்சனை வந்தாலும், கமல் என்ன சொல்றாரு? ரஜினி என்ன சொல்றாரு? என்று கேட்டு வாங்கி கிளறுகிற அளவுக்கு இவ்விருவரையும் முக்கிய ஆட்களாக பார்க்க ஆரம்பித்திருக்கிறான் தமிழன். கமல் சுட சுட…. ரஜினி மட்டும் வழக்கம் போல வழவழ… அதிலும் எச்.ராஜாவின் பெரியார் கருத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து ரீயாக்ட் செய்தததெல்லாம் நெட்டிசன்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட சமாச்சாரம். அதென்னங்க சங்கராச்சாரியாரின் மூச்சு நிற்பதற்குள் ட்விட் போட்டீங்க. பெரியார்னா ரெண்டு நாள் கேட்குதா? என்றெல்லாம் வெளுத்தார்கள்.
எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், குரல்வளையில் கொசு புகுந்த மாதிரியாகிவிடும் என்பதால் சொந்த வேலையை கவனிக்க கிளம்பிவிட்டார் ரஜினி. வருஷத்துக்கு ஒரு முறையாவது இமயமலைக்கு கிளம்பிவிடும் அவர், நாளைக்கு கிளம்புகிறாராம். வடிகட்டப்பட்ட வல்லிய ஆக்சிஜன் அங்குதான் கிடைக்கும் என்பதும், அது இன்னும் ஆறு மாத காலத்திற்கு உடல் வலிமையை கூட்டித்தரும் என்பதும் சிலரது நம்பிக்கை.
புத்துணர்ச்சியோடு வந்து, பூந்து வெளாடுங்க ரஜினி சார்…