சிம்புவுக்கு ரெட் கார்டு! மாட்டிக் கொண்டு முழிக்கும் மணிரத்னம்!
இதுவரை தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் ஒரு வண்டியில் கட்டி (எ)உழவடித்த சிம்புவுக்கு, அதையெல்லாம் வட்டியும் முதலுமாக ரிட்டர்ன் வாங்குகிற நேரம் போலிருக்கிறது! ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் சுமார் 18 கோடி நஷ்டத்துக்கு ஆளாகியிருக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புலம்பல் சப்தம், இப்போது இடி சப்தமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. விளைவு? தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டிருக்கிறது.
காம்படிட்டிவ் கமிஷனில் புகார் செய்தால் என்னாவது என்பதால், இந்த தடையை வெளிப்படையாக அறிவிக்கவில்லை தயாரிப்பாளர் சங்கம். ஆனால் பெப்ஸி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு உத்தரவு போயிருக்கிறது. சிம்பு இந்த பணத்தை செட்டில் செய்து தனது மேலிருக்கும் குற்றச்சாட்டை போக்குகிற வரைக்கும் அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம் என்பதுதான் அந்த எழுதப்படாத உத்தரவு.
வரும் ஜனவரியிலிருந்து மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்திருந்தார் சிம்பு. இந்த நிலையில்தான் இப்படியொரு ரெட். முழுசாக 18 கோடியை எண்ணி வைப்பாரா? அல்லது தடையை உடைக்கும் விதத்தில் முஷ்டியை முறுக்குவாரா?
பொறுத்திருந்து பார்க்கலாம்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்தது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். படம் வெளியாகி தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. படம் நஷ்டமானதால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் அளித்த பேட்டியில்,’அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு கொண்டுதான் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை. படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. முதல் பாதி ஸ்கிரீப்டிலும் பல மாற்றங்களை செய்தார் சிம்பு. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார். சிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும். அவரை நம்பி படம் எடுத்ததற்கு தற்போது நான் நடுத்தெருவில் நிற்கிறேன்” என்று கூறினார்.