கமல்- கவர்னர் மீட்டிங்! எஸ்.வி.சேகர் யோசனை!

விஜய் டி.வி நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே ‘பிக் பாஸ்’ ஆகிவிட்டார் கமல். “சொன்னது நீதானா, சொல்லாதே… சொல்லாதே…” என்று அதிமுக காரர்களும், “சொல்லுங்கண்ணே சொல்லுங்க…” என்று திமுக காரர்களும் கமலை நடுவில் வைத்து பம்பரம் ஆடிக் கொண்டிருக்க, ‘உருப்படியா ஒரு ஐடியா சொல்வோம். கேட்டா கேட்கட்டும். கேட்காட்டி போகட்டும்’ என்று நடுவில் ஒரு பாம்-ஐ பற்ற வைத்துவிட்டார் எஸ்.வி.சேகர். அப்படி மட்டும் நடந்துவிட்டால்? தமிழ்நாடு மேப், தானே முன் வந்து தலைகீழாய் தொங்கும்.

அதென்ன ஐடியா? தமிழக அமைச்சர்களின் பார்வைக்கு போகும்படி தாங்கள் கொடுத்த லஞ்ச பட்டியலை அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று கமல் கேட்டுக் கொள்ள, அடுத்த நாளே மேற்படி மின்னஞ்சல் பியூஸ் ஆகிப் போனது. இணையதளத்திலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரியையே நீக்கிவிட்டது தமிழக அரசு. இதுவே கமலின் முதல் வெற்றி என்று அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தாலும், வாட் நெக்ஸ்ட்? என்ற கேள்வி ரசிகர்களை வாட்டியது. மறுநாளே வேறொரு வழி சொன்னார் கமல். எல்லாரும் லஞ்ச ஊழல் விபரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்க என்றார்.

இந்த இடத்தில்தான் தன் மூக்கையும் அறிவையும் ஒரு சேர நுழைக்கிறார் எஸ்.வி.சேகர். “பேசாம எல்லா புகாரையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பினாலென்ன? அதையெல்லாம் அவரே கொண்டு போய் கவர்னரிடம் கொடுக்கலாமே.” இதுதான் அவர் கொடுத்த ஐடியா.

ஒருவேளை, கமல் கவர்னர் சந்திப்பு மட்டும் நிகழ்ந்துவிட்டால், கூவத்தூர் ரிசார்ட்டுக்கு எம்.எல்.ஏ க்களை கடத்தாமலேயே பரபரப்பை கிளப்பிவிட முடியும் கமலால்!

இன்றைய நாட்டு நிலவரப்படி அறிவாலயத்தின் அழுத்தத்தில் இருக்கும் கமலுக்கு, கமலாலயம் என்ன ஷாக் வைத்திருக்கிறதோ? பார்க்கலாம்…

Read previous post:
Making stills for Nibunan

Close