சில பல தொபுக்கடீர்கள்! சுதாரித்து எழும் சசிகுமார்!
நுணுக்கமாக படியேறி, உச்சிக்குப் போய் ‘பொதுக்கடீர்’ என்று விழுந்தால் எப்படியிருக்கும்? அப்படி விழுந்துவிட்டார் சசிகுமார். எல்லாப் புகழும் பாலாவுக்கே என்றால் கூட தப்பில்லைதான்! தாரை தப்பட்டைக்கு பின் வந்த படங்களில் கூட சசிகுமார் நாயனம் வாசிப்பது போலவே மாயத் தோற்றமளித்தது இவரின் தவறல்ல… அது பாலா செய்த வேலை!
விழுந்தது சிங்கப் பல்லோ, முன் பல்லோ…? ஓட்டையை அடைத்து ஓங்காரமாக சிரிக்க வேண்டியதுதான் சசியின் இப்போதைய தேவை. அதை நன்றாக உணர்ந்தும் இருக்கிறார் அவர். தனது ஆருயிர் நண்பன் சமுத்திரக்கனியுடன் இணைந்து நாடோடிகள் 2 பிளான் பண்ணிவிட்டார். அதற்கப்புறம் சுந்தரபாண்டியன் 2.
சசியின் பட வரிசையில் வெற்றிப் பதக்கம் போல் அமைந்த படங்களில் ஒன்று சுந்தரபாண்டியன். அப்படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும் இப்போது ஒரு ஹிட் அவசியப்படுகிறது. நிலைமையின் அவசியம் உணர்ந்த இருவரும் இப்போது இணைந்த கைகள் ஆகிவிட்டார்கள்.
சப்தம் பலமா கேட்கட்டும்…!