சீமராஜா / விமர்சனம்
சிவகார்த்திகேயனின் சிரசுக்கு ஏற்ற மாதிரியே கிரீடம் செய்து வந்த பொன்ராம், இந்த முறை திணறியிருக்கிறார். சிரசு பெருசாகிவிட்டதா? இல்ல… கிரீடம் சிறிசாகிவிட்டதா? பூதக்கண்ணாடி போட்டாவது கவனிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ஜுனியர் வசூல் மன்னன்!
சிங்கம்பட்டிக்கும் புளியம்பட்டிக்கும் தீராப் பகை. மன்னர் பரம்பரையில் வந்த கடைக்குட்டி ராசாவான சிவகார்த்திகேயனுக்கு புளியம்பட்டி சமந்தா மீது பொத்துக் கொள்கிற அளவுக்கு காதல். திடீர் பணக்காரரான வில்லன் லால் மற்றும் அவரது ‘நிறைகோப’ பெண்டாட்டி சிம்ரன் இருவரும் இந்த காதலுக்கு தடை போட… சீமராஜாவின் கரம் பிடித்து சீமராணி ஆனாரா சமந்தா? க்ளைமாக்ஸ்!
நடுநடுவே சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைக்கும் கதை திருப்பமும், கட்டு கட்டாக பண விரயமும் பொன்ராமின் மீதிருந்த நம்பிக்கையை நாசமாக்கி, வெற்றிகரமாக டிராவல் செய்து வந்த சிவகார்த்திகேயனின் கதை நாலெட்ஜையும் சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது.
ஊரிலேயே வெட்டியாக திரியும் ராஜா, தன் கூட்டாளி சூரியுடன் செய்யும் அலப்பறைதான் முதல் பாதி. ஆளாளுக்கு சிவகார்த்திகேயனை புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். நல்லவேளையாக கதைக்குள் போக வேண்டும் என்ற நினைப்பு வரும்போது படம் அரை மணி நேர பயணத்தை தாண்டிவிடுகிறது. (அரைச்ச மாவையே அரைப்போம் என்கிற தன்னிலை விளக்கம் வேறு) பட்… தெறிக்கிற டயலாக்குகள் தியேட்டரை கலகலப்பாக்கவும் தவறவில்லை.
ரெட்டை குதிரை வண்டியில் அவர் வந்திறங்குவதும், விதவிதமான மன்னர் காஸ்ட்யூமில் நடை போடுவதும், கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் பஞ்ச் டயலாக்கை வீசுவதுமாக… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட பஞ்சு மிட்டாய்தான்! ஆனால் கலகலப்பான படத்தில், படு சீரியஸ் ஆன அந்த கடம்ப வேல் ராஜா பார்ட்தான், தேவையில்லாத திணிப்பு. ஒரே படத்தில் தன் எல்லா பரிமாணத்தையும் போட்டு நுழைத்துவிட வேண்டும் என்கிற அவரது ஆசை தண்டவாளத்தில் ‘வாக்கிங்’ போனது போல செம ரிஸ்க்! (ரசிகர்களின் மனசு எந்த கலர் கொடியை தூக்கிப் பிடிக்கப் போகிறதோ?)
சமந்தாவின் துறுதுறுப்பு தக்காளியாக மின்னுகிறது. (துறுதுறுப்பு மட்டுமா?) சற்றே இடுப்பை காட்டி தியேட்டரையே பின்னால் திரிய விடுகிறார். குதிரை வண்டியுடன் ஸ்கூலுக்கு வரும் சிவா-சூரிதான் சீஃப் கெஸ்ட் என்பதே தெரியாமல் அதட்டும் சமந்தா, அதே பங்ஷனில் ஃபிளாட் ஆவதெல்லாம் ஜில் அடிக்கும் ஜிலீர் போர்ஷன். சிலம்பத்தில் வித்தை காட்டுகிற சமந்தாவுக்கு ஒரு ஸோலோ பைட் கொடுக்கக்கூடவா மனசில்லை பொன்ராம்?
வில்லன் லால் ஒரு பக்கம் டயலாக் பேசுகிறேன் பேர்வழி என்று ஓவென அலற, அதே டெஸிபலில் தானும் அலறி வைக்கிறார் இன்னொரு வில்லியான சிம்ரன். பொருந்தா வில்லி.
சூரியும் சிவகார்த்திகேயனும் சேர்ந்தால் மனப்பாடம் ஆகிற அளவுக்கு நகைச்சுவை தெறிக்கும். இதிலும் காம்பினேஷன் பிய்த்து உதறுகிறது. (சூரிக்கு சிக்ஸ் பேக் இருந்தாலென்ன, இல்லாவிட்டால்தான் நமக்கென்ன?) ஆனாலும் சூரியை சாப்பிட்டு விடுகிறார் வில்லனின் கையாளான பவுன்ராஜ். இந்த எதிர்கால சூரிக்கு முன்கூட்டியே ஒரு அப்ளாஸ்!
படம் முழுக்க பணத்தை வாரியிறைத்திருக்கிறார்கள். கூட்டம் கூட்டமாக திரியும் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளும், நிஜத்தை மிஞ்சுகிற அரண்மனை செட்டுகளும், திருவிழா செட்டப்புகளும் எத்தனை கோடிகளை விழுங்கினவோ? தயாரிப்பாளரை நினைத்து நமக்கு நாடித்துடிப்பு எகிறுகிறது.
ஒவ்வொரு பைசா செலவையும் தன் அசுர உழைப்பால் திரையில் நிரப்பிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம். ஆர்ட் டைரக்டர் முத்துராஜாவின் ஆயிரமாயிரம் மெனக்கெடல்களும் ப்ளஸ்.
டி.இமான் பொன்ராம் சிவகார்த்திகேயன் காம்பினேஷன், எப்பவுமே துட்டுகளை கொட்டுகிற ஹிட்டுதான். போக போக பாடல்களை பிடிக்க வைப்பார் என்று நம்புவோம்.
தமிழனின் பெருமை, விவசாயத்தின் அருமை என்று திடீர் லெக்சரர் ஆகி பாடம் எடுக்கிறார் சிவகார்த்திகேயன். பள்ளிக்கூட பிள்ளைகள்தான் உங்களின் பலமே. இங்கேயும் பாடம் எடுத்தா எப்படி ராசா? எங்க சீமராஜா?
-ஆர்.எஸ்.அந்தணன்
siva’s limtations are exposed in this recycled garbage called seema raja. People are getting tired of siva’s brand of movies. If siva does not attempt to create new variety, end is nearing. Sorry bro. Example: Once a Top Star Prasant. Siva did not even reach prasant’s level. Don’t under estimate people who are buying movie ticket.
வசூல் ராஜாவாக மாறிய சீமராஜா
சிவகார்த்திகேயன் தன்னுடைய சினிமா பயணத்தில் மிக ஸ்பெஷலாக வெளியான படம் சீமராஜா. சிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடி, சூரியின் 6 பேக், வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மட்டும் எந்த குறையும் இல்லை. தற்போது படம் சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் ரூ. 1.60 கோடி வரை வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது. இப்படம் ரசிகர்கள் முதல் நாள் மட்டும் ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது. மேலும், இந்த வருடத்தில் காலாவிற்கு பிறகு அதிக வசூல் முதல் நாளில் சீமராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை தான் அதிக வசூலாம்.
சீம ராஜா மொக்கை ராஜான்னு ஆடின்ஸ் யூடுபிள first டே தியேட்டர் ரெஸ்பான்ஸ் விடியோவுல சொல்லிட்டாங்க. அதுனால நீ சிவாவுக்கு சொம்பு அடிக்காம, உண்மைய பேசு.
சீமராஜா படத்திற்கு தியேட்டர்களில் கலெக்ஷன் அள்ளுகிறது. காரணம், சிவகார்த்திகேயனை குடும்பமாக சென்று ரசிக்கலாம் என அவர் சம்பாதித்திருக்கும் பெயர்! அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக விஜய், அஜீத், சூர்யா என ஆரம்பித்து சிம்பு வரை பலரும் மோதிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் அந்த இடத்தை சிவகார்த்திகேயன் தட்டிச் செல்கிறார். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்ணனி நடிகர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் சர்வ வல்லமை படைத்த அசகாய சூரர்கள் போன்று காட்சியளித்தாலும் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் சினிமா கிராப் நிலையாக நின்று அடித்து ஆடும் தோனியை நினைவுபடுத்துகின்றார். தற்போது விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களை படிப்படியாக இதுவரை வியாபாரரீதியிலும், கலெக்ஷன் ரீதியிலும் தொய்வே இல்லாமல் சிகா வீழ்த்தியுள்ளது உண்மை. ஏற்கெனவே ரெமோ படவியாபாரம் அஜித், சூர்யாவை மிஞ்சியதும், வேலைக்காரன் வியாபாரம் விஜய்யை நெருங்கியதும், விஜய்… முருகதாஸ் துணையுடன் சன்பிக்சர்ஸில் தஞ்சம் அடைந்ததும் சினிமா அரசியல். வெளியில் ரஜினியுடன் போட்டி என்று சொல்லிவிட்டு சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்பட வசூலை விஜய் தரப்பு வைத்த கண்வாங்காமல் பார்க்கவைத்தது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியல்லாமல் வேறில்லை.
முன்ணனி நடிகர்கள் மிக அதிகமாக நான்கு நாள் விடுமுறை அல்லது தீபாவளி பொங்கல் விடுமுறை நாளை குறிவைப்பது அவர்களின் இயலாமையே. ஆனால் சிவகார்த்திகேயன் சாதாரண நாளில் படம் வெளியாவது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. தொடர்விடுமுறை நாளையும் குறிவைப்பதில்லை. ஆனாலும் மக்கள் ஆதரவு என்பது அனைத்துப் படத்திற்க்கும் தொடர்வது திரையுலகை மட்டுமல்ல ரசிகர்களையே ஆச்சர்யபடவைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர்சங்கம் ஆர்டினரியாக வந்து அசாத்திய வசூலை அள்ளியது. தாமதமாக அல்ல, மிக தாமதமாக பலமுறை தேதி அறிவித்து , ரஜினிமுருகன்- ல் சிவகார்த்திகேயனுக்கு இலகுவாக கொடுத்தது. முன்ணனி இயக்குநர், பெரிய தயாரிப்பு நிறுவனம் எதுவும் இல்லாமல் ரெமோவை கலக்ஷனில் அதிரடி அந்நியனாக வெற்றிபெற வைத்தார். வேலைக்காரன் மிகப்பெரிய வியாபாரம், ஆனாலும் யாரையும் புலம்பவைக்கவில்லை. சீமராஜா 20 வருட அனுபவ கமர்ஷியல் ஹீரோக்கள் செய்யவேண்டியது! ஆனால் அசால்ட்டாக ஹவுஸ்புல் ஆகபோவது அசாதாரணமே. துணை நடிகராக பொருளாதார பின்ணனி இல்லாமல், அசாத்திய அழகு போன்ற அம்சங்கள் இல்லாமல் சினிமாவில் சாதாரண சாமானியனின் வெற்றியாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இருக்கின்றது என்று சொன்னால் மறுப்பதற்கு மறுவார்த்தையில்லை. சீமராஜ சினிமாவுக்கு சின்னராஜாவை கொடுத்துள்ளது.