சீமானின் தங்கச்சி சென்ட்டிமென்ட்! தேர்தலுக்கு கை கொடுக்குமா?
ஷார்ப்பா பேசுறாரு… ஒரு வாட்டி ஓட்டு போட்டாதான் என்ன? என்கிற மனநிலைக்கு கேட்பவர்களை ஆளாக்கி, பார்ப்பவர்களை பரவசமாக்குவது சீமானின் ஸ்டைல். மக்களின் மனசுக்குள் புகுந்து, கோபத்தை கிளறி ஆட்சியாளர்களை அலற வைக்கிற அவரது பாணிக்கு இளம் ரத்தங்கள் அடிமையாகி வருவது அன்றாட செய்தி.
சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அரசியலை அறுத்துக் கிழிக்கும் ஆக்சா பிளேடாகவும் பயன்படுத்தி வருகிற எம்.ஜி.ஆர் பாணி நடிப்புக்கு எப்போதும் ஒரு மதிப்பு இருக்கதான் செய்கிறது. அதனால்தான் சினிமாவில் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியும், விஜய்யும்.
இந்த நேரத்தில்தான் மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. சினிமாவிலும் பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறார் சீமான். அதுவும் வீட்டிலிருக்கிற பெண்களின் மனசுக்குள் புகுந்துவிட்டால், ஓட்டு இயந்திரத்தை உருட்டிப் போட்டு உடைத்தாலும் உள்ளேயிருந்து கை நீளுமல்லவா?
முழுக்க முழுக்க தங்கச்சி சென்ட்டிமென்ட் கலந்த ஒரு படத்தில் நடித்தாலென்ன என்று நினைத்தாராம். கத்துக்குட்டி பட இயக்குனர் சரவணன் அப்படியொரு கதையை சீமானுக்கு சொல்ல உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அவர். இதற்காக தன் எடையில் சுமார் பதினைந்து கிலோவை கடும் உடற்பயிற்சி செய்து குறைத்திருக்கிறார். அண்மைக்காலமாக அவரது காணொளியை காணுகிற தமிழ் நெஞ்சங்கள், “அண்ணனுக்கு என்னாச்சி, அநியாயத்துக்கு இளைச்சுட்டாரே?” என்று முணுமுணுத்தார்கள்.
அந்த இளைப்புக்கு இந்த வொர்க்கவுட்தான் காரணம். தமிழ் பேசும் தங்கச்சிகளுக்கெல்லாம் அண்ணனாக இருந்த டி.ராஜேந்தர் மெல்ல ஃபேட் அவுட் ஆகிவிட்டார். தாடி வைக்காத சீமானுக்கு அந்த தங்கச்சி பாசம் ஷிப்டிங் ஆகிவிட்டால், ஆஹா… தமிழ்சினிமாவும் அரசியலும் தகதகன்னு மின்னும்!