பார்த்திபன் அப்படி சொல்லியிருக்கக் கூடாது! சாந்தனு சங்கடம்!

சிகரெட் பாக்கெட்டில் சீனி மிட்டாயை வைத்த மாதிரிதான் சாந்தனுவை வைத்திருக்கிறது தமிழ்சினிமா! “அவங்க அப்பா கே.பாக்யராஜ் எவ்ளோ பெரிய லெஜன்ட்? ஆனா பையன் அஞ்சாம்ப்பு தாண்டறதுக்குள்ள ஆறு தடவ கோட் அடிக்கிறாரேப்பா…” என்று விமர்சகர்கள் வேதனைப்படுகிற அளவுக்குதான் இருக்கிறது அவரது சினிமா அதிர்ஷ்டம்! இத்தனைக்கும் தமிழ்சினிமாவுக்கு தேவையான எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர் சாந்தனு!

ஒரு நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்கிற கவலை, சாந்தனுவுக்கு இருக்கிறதோ இல்லையோ? கே.பாக்யராஜின் சிஷ்யர் பார்த்திபனுக்கு இருக்கிறது. பலமுறை அவரை தன் படங்களில் நடிக்க வைக்க நினைத்தாலும், காலமும் நேரமும் கூடி வர வேண்டும் அல்லவா? ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் மூலம், தன் குருநாதரின் மகனுக்கு குரு சுக்ர பார்வையை ஏற்படுத்தியிருக்கிறார் அவர்.

“முதல்ல ஒரு புதுமுகத்தைதான் இந்த கேரக்டர்ல அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். ஆனால் யாருக்கோ கொடுக்கிற அந்த வாய்ப்பை என் குருநாதரின் மகனுக்கு கொடுத்தால் என்னன்னு தோணுச்சு. அவரும் ஒரு பிரேக்குக்காகதானே வெயிட் பண்ணிட்டு இருக்கார்? அதனாலும் சேர்த்து சாந்தனுவை நடிக்க வைச்சேன்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாராம் பார்த்திபன். அதுதான் சாந்தனுவுக்கும் வருத்தம். “என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?” என்று நேரிலேயே கேட்டுவிட்டார் பார்த்திபனிடம்.

“ஆனால் இப்ப சொல்றேன். இந்த படத்தை எடுக்க துவங்கும் போது எனக்கு அப்படியொரு எண்ணம் இருந்திருக்கலாம். இப்ப இந்த படத்துக்கு சாந்தனுவை விட்டால் அவ்வளவு பொருத்தமாக ஒரு ஹீரோ கிடைச்சிருக்கவே மாட்டார்” என்றார் பார்த்திபன்!

குளோஸ் அப்பில் ஒரு உதட்டை போட்டு, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்றொரு தலைப்பும் வைத்தால், உலகத்தின் பார்வையில் கலகம் வழியுமே? யெஸ்… பிரஸ் கேட்ட கேள்வி இதுதான். “இந்த படத்துல எத்தனை முத்தக்காட்சி இருக்கு?”

அதற்கு பார்த்திபன் சொன்ன பதில். “இது அந்தமாதிரி படம் இல்லங்க. படத்துல தப்பான கேரக்டர்கள் இருக்கு. அதுக்காக தப்பான படம் இல்ல!

“மிஸ்டர் ரைட், எப்ப தியேட்டருக்கு வர்றீங்க?”

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Konjam Konjam Stills Gallery

Close