சிவகார்த்திகேயன் ஆசை! தம்பி ராமய்யா மறுப்பு!
எல்லா மகன்களுக்கும் அப்பனே ஏணி! இந்த தத்துவத்திற்கு தலைகிரீடம் வைத்த மற்றுமொரு தந்தையாகி நின்றார் தம்பி ராமய்யா. இவரை வாழ்த்த தமிழ் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்கள் வந்திருந்தார்கள். இடம்- மணியார் குடும்பம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
மகன் உமாபதிக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக தன்னந்தனியாக முயற்சித்தவரை தொலைவிலிருந்தே ரசித்துக் கொண்டிருந்தார் தம்பி ராமய்யா. கயிறு எவ்வளவு தூரம் போகிறதோ, போகட்டும். பிறகு இழுத்துப்பிடிக்கலாம் என்று நினைத்தவருக்கு, கயிறின் நீளம் குறைய குறைய பொறுப்பு வந்துவிட்டது. தானே இயக்கி, தானே இசையமைக்கும் மணியார் குடும்பம் படத்தில் மகன் உமாபதியை ஹீரோவாக்கிவிட்டார்.
தான் ஏன் இசையமைப்பாளர் ஆனேன் என்பதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும் அல்லவா? அந்த மேடையில் கொடுத்தார் தம்பி. “ஒரு இசையமைப்பாளர்ட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டு, எல்லாத்துக்கும் அவர்ட்ட காத்துக் கிடக்கறதை விட நாமளே இசையமைக்கலாமேன்னு நினைச்சேன். இசையில் எனக்கு எவ்வளவு புலமை இருக்குன்னு என்னிடம் பழகிய இயக்குனர்களுக்கு தெரியும். ஒரு பாடல் டி.இமான் பாடியிருக்கிறார். தம்பி… பாடலை கேளுங்க. நல்லாயிருந்தா வந்து பாடிக் கொடுங்க. இல்லேன்னா அப்படியே தூக்கிப் போட்ருங்க என்றேன். அவரே வந்து பாடிக் கொடுத்துவிட்டுப் போனார்” என்று தனது இசைப்புலமை பற்றி லேசாக வெளிப்படுத்தினார் தம்பி.
இருக்குற சொத்தை வச்சு சொகுசா வாழணும்னு நினைக்கிற ஊதாரி அப்பா. வெட்டியா ஊர் சுத்துற மகன். இந்த குடும்பத்தில் நுழைகிறாள் ஒரு பெண். அவளால் அந்த குடும்பம் எப்படி உருப்பட்டது என்பதுதான் இந்தக்கதை என்று கதை சுருக்கத்தையும் சொல்லி அசத்திய தம்பி ராமய்யா, இன்னொரு விஷயத்தையும் சொன்னார். அதுதான் ஓப்பன் டாக்!
இந்தக்கதையை தம்பி சிவகார்த்திகேயன்ட்ட சொன்னேன். அண்ணே… நல்லாயிருக்கு. நானே இந்தப்படத்தை தயாரிக்கிறேன்னு சொன்னார். இல்லப்பா. ஏற்கனவே தயாரிப்பாளர் முடிவாயிருச்சுன்னு சொன்னேன். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி என்றார் தம்பி ராமய்யா.
படத்தின் வெற்றி இப்பவே தெரிஞ்சுருச்சு! அண்ணே… அடுத்து யாரு உங்க ஹீரோ?