நோட்டா ஹீரோ நோட் பண்ண வச்சுட்டாரே?
ஆந்திராவில் மட்டும் இறங்கி நடந்திருந்தால் நகம் வேறு, இமை வேறு என்று பிய்த்து தின்றிருப்பார்கள். ஆனால் சென்னையில் அதுவும் பிரசாத் லேபில் கருப்பு பூனைகளுக்கு அவசியம் இல்லாமல் வந்தார் விஜய் தேவரகொண்டா. மெய்யாலுமே இவர் பார்சல் பிரம் தேவலோகமாக இருப்பார் போலிருக்கிறது. அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட அத்தனை படங்களும் ஹிட். ஆந்திராவின் கொண்டாட்ட ஹீரோக்கள் லிஸ்ட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டார் விஜய்.
இவரை வைத்துதான் ‘நோட்டா’ என்ற அரசியல் படத்தை தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் எடுத்து வருகிறார் ஞானவேல்ராஜா. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இதற்கு முன் ‘இருமுகன்’ படத்தை இயக்கியவர். நோட்டாவில் சத்யராஜும் இருப்பதால், இது அமைதிப்படை ஜானரில் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.
மிக விரைவில் திரைக்கு வரப்போகும் நோட்டாவுக்காக பிரஸ்சை மீட் பண்ணியது படக்குழு. இங்கு வைத்துதான் பிரஸ்சின் கைதட்டல்களை அள்ளினார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் துவக்க விழாவில் பேசியவர், எனக்கு தமிழ் தெரியாது. ஆனா அடுத்த முறை உங்களை மீட் பண்ணும்போது தமிழில்தான் பேசுவேன் என்று கூறியிருந்தார். என்ன ஆச்சர்யம்? நோட்டா ஹீரோவின் தமிழ் வாத்தியார் தன் மாணவனை அப்படி தயாரித்திருந்தார். ஒரு கவர்ச்சி நடிகையின் அழகு தமிழை கடன் வாங்கி பேசியது போல கவர்ந்தார் விஜய்.
இந்தப்படத்தோட ரிலீசுக்காக நான் மரண வெயிட்டிங்… என்று அவர் சொல்ல, அரங்கமே கைத்தட்டி மகிழ்ந்தது. திடீரென அரும்புத் தமிழில் ஒரு திருக்குறளை சொல்லி தன் உரையை அவர் நிறைவு செய்தார். அந்த நிமிஷம்…
மிஸ்டர் வள்ளுவன் ஆவி எங்கிருந்தாலும் மேடைக்கு வந்திருக்கும்!