தென்னக நதிகள் இணைப்பு! ரஜினியின் லட்சியம் நிறைவேறுமா?

தென்னக நதிகள் என்றால், குறிப்பிட்டு சொல்லக்கூடிய நதிகள் 51. அதிலும் முக்கியமான காவேரி, கிருஷ்ணா, கோதாவரி.

கோதாவரிதான் பெரிய நதி. 1465 கி.மீ.
அதற்கப்புறம் கிருஷ்ணா. 1400 கி.மீ.
பிறகு காவேரி. 765 கி.மீ.

இவற்றை இணைக்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் லட்சியம். ஒரு மனிதன் சாதிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை தவறே இல்லை. அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதுதான் இப்போதைய பெரும் கேள்வி. ஏன் இதை அழுத்தமாக ஆராய வேண்டி இருக்கிறது என்றால், காரணம் இருக்கிறது. தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற ரஜினி ரசிகனிடமோ, அல்லது பொதுமக்களின் ஒருவரிடமோ ‘நீங்கள் ஏன் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறீர்கள்?’ என்று கேட்டுப்பாருங்களேன்… ‘அவரு நதிகளை இணைக்கறேன்னு சொல்றார். அதனால்’ என்பார்கள்.

இந்த பலவீனத்தையும், அப்பாவி மக்களின் நம்பிக்கையையும் குறி வைத்து அடிக்கிறார் ரஜினி என்பதுதான் உண்மை. ரஜினியின் ஆசை ஒரு வேளை நிஜமாகவே கூட இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு அவர் தமிழக முதல்வராக இருந்துவிட்டால் நடந்துவிடுமா? முதல்வராக ஆனாலும் கூட சத்தியமாக நடக்காது. அவர் இந்தியாவின் பிரதமராக இருக்க வேண்டும். அப்படியிருந்தாலும், அது அவ்வளவு எளிய காரியம் அல்ல. வாஜ்பாய் அரசில் துவங்கப்பட்ட தங்க நாற்கர சாலை, இன்னமும் பல நகரங்களில் முடியாமல் இருக்கிறது. காரணம், நிலம் கையகப்படுத்துதல் விஷயத்தில் நடக்கும் இழுபறி.

நாமாக போட்ட சாலைக்கே இந்த கதி என்றால் அதுவாக ஓடுகிற நதியை நினைக்கிற இடத்திற்கெல்லாம் இழுப்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால், அதற்கு நிலம் கையகப்படுத்துகிற அதிகாரம், ராணுவம் வந்தால் கூட நடக்காத காரியம் ஆயிற்றே? அதுமட்டுமல்ல, மாநிலங்களின் அதிகாரத்தை தாண்டி மத்திய அரசு நினைத்தால் கூட இதை நிறைவேற்றுவது கடினம். ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் இருக்கிறது. இவ்வளவு பெரிய நதிகளை இணைக்க வேண்டும் என்றால், அதற்கு உலக நாடுகளிடம் கையேந்த வேண்டும். அதற்கப்புறம் எத்தனை லட்சம் கடன் இந்தியக் குடிமகனின் தலையில் ஏறுமோ?

முதலில் தமிழ்நாட்டு நதிகளை இணைப்பதற்கே பெருத்த ராணுவ பலமும், அதைவிட பலமான மனசும் வேண்டும். அது ரஜினிக்கு இல்லை என்பதுதான் அவரது வழ வழா கொழ கொழா அணுகுமுறையில் தெரிகிறதே… அப்படியிருக்க, தென்னக நதிகளை இணைப்பதாவது?

முதலில் ரஜினி பல்லாண்டுகளாக பல ஆயிரம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும் கூவத்தை சுத்தப்படுத்தி, குடிநீர் ஆதாரத்தை சென்னைக்கு கொண்டு வரட்டும். அதற்கே மூக்கு வீங்கிவிடும். நிலைமை அப்படியிருக்க… நதிகளை இணைத்தால் ஒரு கோடி என்பதும், நான் முதல்வரானால் தென்னக நதிகளை இணைப்பேன் என்பதும், விபரம் தெரிந்த ஆள் சொல்கிற விஷயம் அல்ல. அப்படியே விபரம் தெரிந்துதான் சொல்கிறார் என்றால்,

இவரைவிட ஏமாற்றுப் பேர்வழி வேறு யாருமே இல்லை.

இதெல்லாம் ஜனங்களுக்கு புரியுமா?

Read previous post:
விஷால் இன்னொரு நாஞ்சில் சம்பத்தா?

Close