பேருதான் தப்பாட்டம்! செய்யறதெல்லாம் சரியாதான் இருக்கு!

‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தனர். இதை மக்கள் பலரும் வரவேற்றனர்.

இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று, திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு முன்னிலையில், தப்பாட்டம் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும், கதாநாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும் வழங்கினார்கள்.

இதனையடுத்து, பேசிய சங்கத் தலைவர் பி. அய்யாகண்ணு, “தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வேண்டி, மந்திரிகளிடமும், முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தப்பாட்டம் படக்குழுவினர் பண உதவி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகள் நலனுக்கு தரவிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என்றார்.

மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் ‘தப்பாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கோவை ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை முஜிபூர் ரஹ்மான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். ஆதம் பாவா தயாரித்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்தப்படம் மாதிரியே இந்தப்படமும் இருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல!

Close