அந்த தாயின் முகத்தை பார்க்க முடியலையே? வடிவேலு வருத்தம்!
எம்.ஜி.ஆர் மீது உயிரையே வைத்திருக்கும் வடிவேலு, அதில் பாதியையாவது அவருக்கு ஜோடியாக நடித்தவர்கள் மீதும் வைத்திருப்பாரல்லவா? வடிவேலுவின் காமெடிகளுக்கு ஜெயலலிதா ரசிகை என்பதும், ஜெயலலிதா மீது வடிவேலுவுக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதும் அவ்வளவு பெரிய ரகசியம் அல்ல. ஆனால் காலத்தின் கோலம், வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலைக்கு ஆளானார்.
அறிவாலயத்தின் காம்பவுன்டுக்குள் பறக்கும் கொசு கூட தன் பரம எதிரி என்று நினைத்திருந்த ஜெ. அதற்கப்புறம் வடிவேலு விஷயத்தில் அமைதிகாத்தாலும், சுற்றியிருப்பவர்கள் சும்மாயிருப்பார்களா? சுமார் ஐந்து வருடங்கள் படமே இல்லாமல் இருந்தார் வடிவேலு. அவர் விட்ட இடத்தை பல்லிகளும் பூரான்களும் நிரப்பின. சரி விஷயத்துக்கு வருவோம்.
நேற்று முதல்வர் ஜெ.வின் இறுதி சடங்குக்கு வந்த வடிவேலுவுக்கு, உள்ளே நுழைய சற்றும் இடமில்லை. இங்கும் அங்கும் நுழைந்து பார்த்தவர், இது முடியாது என்கிற நிலை ஏற்பட்டதும் திரும்பிவிட்டார். ஆனால் அங்கு திரண்டிருந்த மீடியாவிடம், நான் அந்த தாயின் முகத்தை கடைசியா ஒருமுறை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன். ஆனால் உள்ளே போகவே முடியல. அவ்வளவு கூட்டம். தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்த அந்த தாயின் ஆத்மா சாந்தி அடையணும் என்று நா தழுதழுக்க கூறினார்.
உங்களை உள்னே வரக் கூடாதுன்னு யாராவது தடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியால் பதறிய வடிவேலு… ஐயய்யே… அப்படியெல்லாம் இல்ல. கடுமையான கூட்டம். உள்ள நுழைய முடியல என்று வருத்தத்தோடு கூறிவிட்டு நகர்ந்தார்.
https://youtu.be/6dYny1XkQT8