வாய்ப்பு கொடுத்தவர்களை அசிங்கப்படுத்திய வைரமுத்து!

பெரும் இலக்கியவாதியும், எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்து பல நேரங்களில் தன்னையே யுக புருஷன் போல எண்ணிக் கொண்டு பேசுவதும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் உலகம் அளப்பறிய எரிச்சலுக்கு ஆளாகும் நேரம் என்பது அனைவரும் உணர்ந்ததே.

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கே.பி.90 என்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதை நடத்தியவர் பாலசந்தரிடம் பல வருடங்கள் உதவியாளராக இருந்த மோகன்! இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டாலும், வைரமுத்துவின் வரவு ஸ்பெஷல்! அவர் பேசும்போது தனது கடந்த கால இக்கட்டு குறித்தும், அதிலிருந்து பாலசந்தர் எப்படி மீட்டார் என்பது குறித்தும் பேசினார்.

இளையராஜாவின் பெயரை குறிப்பிடாமல் ஒரு இசையமைப்பாளர் என்று அவர் குறிப்பிட்டு பேசியது ஒரு அமெச்சூர் சினிமா ரிப்போர்ட்டர் கிசுகிசு எழுதுவது போல இருந்தது. அதுதான் கொடுமை. அவர் பேசியதென்ன?

“ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது . அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை”.

“அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளர் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என்  பாடல். திலீப்பின் இசை . மூன்று  படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது . திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்”

இதற்கு இளையராஜா என்று நேரடியாகவே அவர் பெயரை சொல்லிவிட்டு போயிருக்கலாம். அதை விடுங்கள். வாய்ப்பில்லாத காலத்தில் முடங்கிக் கிடந்த வைரமுத்துவுக்கு வாய்ப்பளித்த முப்பத்தி ஏழு இசையமைப்பாளர்களையும் அசிங்கப்படுத்திவிட்டுப் போனதுதான் அதிர்ச்சி.

இசையமைப்பாளன் வேண்டுமானால் கவிஞர்களை பிரபலமாக்க முடியுமே தவிர, ஒரு கவிஞன் இசையமைப்பாளனை உருவாக்கவே முடியாது. இதுதான் சத்தியம். இது புரியாத வைரமுத்து ஏதோ தன் பாடல்களால்தான் இசையமைப்பாளர்கள் வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள் என்று பேசுவது காலக் கொடுமை.

இதே வைரமுத்துவை சில காலம் புறக்கணித்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் பிரமாதமான பல பாடல்களை இந்த சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார். அவையெல்லாம் கபிலனும், நா.முத்துகுமாரும் எழுதிய பாடல்கள். இந்த ஒன்று போதும்… வைரமுத்து இசை குறித்தும் தன் பாடல்கள் குறித்தும் பேசி வருவது அபத்தத்திலும் அபத்தம் என்பதற்கு!

ஹ்ம்… என்ன செய்வது? பிம்பங்களால் வாழ்கிற மனிதர்கள்!

Read previous post:
விமர்சகர்கள் Vs தயாரிப்பாளர்கள் – வரம்பு மீறுகிறார்களா இணையதள விமர்சகர்கள்?

https://www.youtube.com/watch?v=L-T3OE7E3Uw&feature=youtu.be

Close