வேலைக்காரன் / விமர்சனம்

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுவதெல்லாம் பண்டமில்லை, உயிரோடு இருக்கும்போதே உனக்கு வைக்கப்படும் ‘பிண்டம்’! மீண்டும் நினைத்தால் கூட ஷாக் அடிக்க வைக்கும் இந்தக் கருத்துதான் வேலைக்காரன். உணவு அரசியலின் உச்சந்தலையை பிடித்து உலுக்கி உலுக்கி சொல்லியிருக்கிறார் மோகன்ராஜா. இப்படியொரு கதையை மனசார வாங்கி, உளமாற கொடுத்த சிவகார்த்தியேனுக்கு அடிஷனல் அப்ளாஸ்!

கொலைகாரக் குப்பத்தில் வசிக்கும் சிவகார்த்திகேயனுக்கு அதே குப்பத்தின் தாதா பிரகாஷ்ராஜ் மீது எரிச்சல். குப்பத்திலிருக்கும் இளைஞர்களை கூலிப்படையாக்கும் அவரது போக்கு பிடிக்காமல், அவரை பகைத்துக் கொள்ளவும் இல்லாமல் ஒரு திட்டம் வகுக்கிறார். அதுதான் சிம்பிளான ஒரு ரேடியோ ஸ்டேஷன். அதன்மூலம் தாதாவின் மட்டமான போக்கை மக்கள் மனதில் விதைக்க… ஏற்படுகிறது மாற்றம்.

இன்னொரு பக்கம் பிரபல உணவுக்கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ்வாக வேலைக்கு சேரும் சிவா, அங்கு தயாராகும் உணவுப்பொருட்களின் நச்சுத்தன்மை குறித்து கவலைக்குள்ளாகி எடுக்கும் திடுதிப் ஆக்ஷன்! வேலைக்காரர்கள் துணையோடு முதலாளிகளை திருத்தும் முடிவோடு சுபம்!

வெறும் டான்சும் கூத்துஙம மட்டுமல்ல. நாம் வாழும் சமூகத்துக்கு ஏதோவொரு மெசேஜ் சொல்லணும் என்கிற நல்ல எண்ணத்திற்காகவே பாராட்டுகள் சிவகார்த்திகேயன். இன்று குழந்தைகள் யார் சொன்னால் கேட்பார்களோ, அவரை விட்டே சொல்ல வைத்த டைரக்டர் மோகன் ராஜாவின் ஹீரோ சாய்ஸ்சுக்கும் ஒரு பலே பப்பர்மென்ட்! ஆனால் இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடியிருக்கலாம் என்பதும் மறுப்பதற்கில்லை.

போட்டு வைத்த திட்டத்தையெல்லாம் சக ஊழியர் என்று நினைத்து பகத் பாசிலிடம் உளறி வைக்கும் போது, ‘ஐயோ… சிவா’ என்று பதறுகிறது மனசு. சரியான நேரத்தில் புல் ஸ்விங்கில் திருப்பி அடிக்கும்போது தியேட்டரே விசில் மழை. நயன்தாராவுக்கும் இவருக்குமான லவ் விஷயத்தில் அதிக அக்கறை இல்லை. அது தேவையும் இல்லை என்பது போன்ற பட நகர்வு. நடுவில் வரும் டூயட்… ரிலாக்ஸ் இல்லை, டென்ஷன்!

நயன்தாராவுக்கு வயசு ஏறிக்கொண்டே போகிறது. பவுடர் செலவும் கூடிக் கொண்டே போகிறது. (வேண்டுமானால் புன்னகைப்பூ கீதாவிடம் பியூட்டி டிப்ஸ் கேட்கலாம்! ஐடியா… ஐடியா)

படத்தின் ஸ்மார்ட் வில்லனாக பகத் பாசில். பேசாம இங்கேயே செட்டில் ஆகிடுங்க தல! அலட்டலே இல்லாத வில்லத்தனம். ஆர்ப்பரிக்குது தியேட்டர்.

சுமார் ஒரு டசன் முக்கிய நடிகர்கள். அதில் சினேகாவுக்கு சிறப்பான ரோல். விஜய் வசந்த் அன்றாடம் பீட்ஸா பர்கர் ஐட்டங்களை பார்சல்களாக நீட்ட, ஒரு கட்டத்தில் உள்ளேயிருந்து ஒரு கை மட்டும் பையை இழுத்துக் கொள்கிறது. கதவைத் திறந்தால் ஷாக்கோ ஷாக். சென்ட்டிமென்ட் டச்சுடன் கூடிய திருப்பம். சொல்ல வந்த விஷயத்தை வெறும் பேனா கிறுக்கல்களாக இல்லாமல் சுத்தியல் அடியாக சொல்வது என்பது இதுதானோ?

பிரகாஷ்ராஜ் பல படங்களில் ஊதித்தள்ளிய கேரக்டர்தான். இதிலும் அசால்ட்டாக கடந்து போயிருக்கிறார்.

“நம் கண்ணெதிரிலேயே நம் குழந்தைகள் சாவறதை பார்க்குற தலைமுறை நாமளாதான் இருப்போம்” – இப்படி உயிர் வரைக்கும் டச் பண்ணுகிற வசனங்கள்.

அனிருத் இசையில் பாடல்கள் இரைச்சல். (நம்ம கம்பெனிக்கு இமான்தான் சரி தலைவரே…)

ராம்ஜியின் ஒளிப்பதிவு படு நேர்த்தி. அழகு!

இரண்டேமுக்கால் மணி நேர படத்தில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கை வைத்திருந்தால் இந்தப்படத்தின் வேகமே தனியாக இருந்திருக்கும். எங்கே போனீங்க ரூபன்?

மேலோட்டமாக பார்த்தால் பாக்கெட்! பிரித்துப் பார்த்தால் பாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Ajith says

    Velaikkaran – In 2017 one & only Blockbuster Film

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா! மலேசியாவில் கடும் எதிர்ப்பு?

புத்தாண்டின் முதல் வாரத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலெக்ஷன் ஐடியா தோன்றியவுடன்,...

Close