விஜய் சேதுபதி – தமிழ் சினிமாவின் அலுப்பு! -அராத்துவின் அல்டிமேட் விளாசல்

வலையுலக ரசிகர்களுக்கு அராத்துவின் எழுத்து பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. பிரபல எழுத்தாளரான அவர் விஜய் சேதுபதியின் நடிப்பு பற்றி எழுதியிருக்கும் இந்த கட்டுரை, அட… ஆமாம்ல? என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. படியுங்கள். விமர்சனம் இருந்தால் நாகரிகமாக மறுக்கலாம்-

நம் ஆட்களுக்கு சினிமா சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தை பிடித்து விட்டால் போதும். சம்மந்தமில்லாத இடத்திலும் அந்த வார்த்தையையே உதிர்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இப்போது இப்படி சிக்கி சின்னாபின்னமாகி சீரழந்துகொண்டிருக்கும் வார்த்தை ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ்.

விஜய் சேதுபதி ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ் செம என்று கிளம்பி இருக்கிறார்கள்.

ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ் என்றால் திரையை அடைத்துக்கொள்தல் என்று எடுத்துக்கொள்கிறார்கள் போல. அப்படிப் பார்த்தால் இப்போதைக்கு ஸ்க்ரீன் ப்ரஸன்ஸில் நம்பர் ஒன்னில் இருக்கும் நடிகர் பிரபு என்று சொல்லலாம். அடுத்தது விஜய் சேதுபதியைச் சொல்லலாம்.

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் இருந்தே என்னைக் கவரவில்லை. இவராவது கவரவில்லை. என்னை இர்ரிட்டேட் செய்யும் இன்னொரு நடிகர் சிவ கார்த்திகேயன். இவர்கள் இருவரும் சினிமா ஹீரோ மெட்டிரியலே இல்லை என்பது என் கருத்து. விஜய் சேதுபதியையாவது கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று எடுத்துக்கொண்டு துணை நடிகர் ரோல் கொடுக்கலாம். சிவ கார்த்திகேயன் இதிலும் அவுட்.

தமிழ் சினிமாவை பின்னுக்கு இழுத்து , கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குவதில் இந்த இருவருக்கும் பெரும் பங்குண்டு என்று நினைக்கிறேன். சிவகார்த்திகேயனைப் பற்றி நான் பேசக்கூட விரும்பவில்லை.

விஜய் சேதுபதியை எடுத்துக்கொள்வோம்……

சேதுபதி என்று ஒரு போலீஸ் படம் வந்ததே பார்த்தீர்களா ? அதில் ஐயா போலீஸ். இப்போது வந்திருக்கும் விக்ரம் வேதாவில் ஐயா ரவுடி.

இரண்டு கேரக்டர்களும் இரண்டு துருவங்கள். இந்த இரண்டு கேரக்டர்களிலும் ஐயா ஏதேனும் வித்தியாசம் காட்டி இருக்கிறாரா என்று யோசித்துப் பாருங்கள். இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதியாக மட்டுமே நடித்து இருக்கிறார்.

காதலும் கடந்து போகும் படத்தில் ரவுடியாக நடித்ததற்கும் , விகரம் வேதா படத்தில் ரவுடியாக நடித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம். அந்த கேரக்டரே தொடர்ந்து இந்த படத்தில் வந்து பூந்து கொண்டது போல இருக்கிறது.

விஜய் சேதுபதி படங்களில் , விஜய் சேதுபதி போலீஸ் ஆனால் , விஜய் சேதுபதி டாக்டர் ஆனால் , விஜய் சேதுபதி ரவுடி ஆனால் , விஜய் சேதுபதி பாஸ்போர்ட் பிரச்சனைக்காக அலைந்தால் எப்படி இருக்கும் என்றுதான் பார்த்துக்கொண்டு இருக்கிரோம் . எந்த கேரக்டர் ரோல் வந்தாலும் அதில் விஜய் சேதுபதி போய் உட்கார்ந்து கொண்டு விடுகிறார். அந்த கேரக்டர் எப்படி பேசும் , எப்படி நடக்கும், என்ன உடல்மொழி என்றெல்லாம் ஐயா அலட்டிக்கொள்வதே இல்லை.

சேதுபதி படத்திலும் , விகரம் வேதா படத்திலும் , ஒரே மாதிரி காலை பரப்பி பப்பரப்பா என வைத்துக்கொண்டு நடக்கிறார். திரிஷா அப்படி நடந்தால் சகித்துக்கொள்ள்லாம். விஜய் சேதுபதியை சகித்துக்கொள்ள முடியுமா ?

போலீஸும் , ரவுடியும் ஒரே மாதிரியா நடப்பார்கள் ?

எல்லா படங்களிலும் ஒரே குரல் மாடுலேஷன். இன்னா , இப்ப இன்னான்ற ..ப்பே , தோப்பாரு… சார் , இல்லீங்க சார் , மூடிட்டு போ , யேய் ப்போடா …..இதுபோல வசனங்களை திரும்பத் திரும்ப ஒரே மாடுலேஷனில் பேசி அறுத்துக்கொண்டு இருக்கிறார்.

எல்லா கேரக்டரிலும் கமல்ஹாஸனும் தெரிவார் என்றாலும் அவர் 16 வயதினிலேவிலும் சிகப்பு ரோஜாக்களிலும் எப்படி தன்னை பிரஸண்ட் செய்தார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இப்போது பேசப்படும் விஜய் சேதுபதி ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் எவ்வளவு அபத்தமானது என்று புரியும்.

உடை என்று எடுத்துக்கொண்டால் , ஒரு தொள தொள பேண்ட் , தொள தொளா சட்டை. இல்லன்னா ஒரு கோடு போட்ட டீ ஷர்ட் , அதே தொள தொளா ஜீன்ஸ். இவருக்கு மட்டும் பேண்ட் போன்றே ஜீன்ஸ் எங்கே கிடைக்கிறது என்று தெரியவில்லை. இதைப்போட்டுக்கொண்டு அதக்கி அதக்கி நடக்க வேண்டியது.

கேரக்டருக்காக மெனக்கெடுவது என்பதுதான் நடிகரின் திறமை. ஒவ்வொரு படத்திலும் ஒரு கேரக்டராக உருவெடுக்க வேண்டும். திரும்ப கமலைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆளவந்தானில் வந்த இரண்டு கமலையும் நினைத்துப் பாருங்கள். வெவ்வேறு ஆட்கள் என்று நினைத்துக்கொள்வோம்.

கமல் ஒரே படத்திலேயே வேவ்வேறு , கேரக்டராக மனதில் பதிவார். விஜய் சேதுபதியோ அனைத்துப் படங்களிலும் விஜய் சேதுபதியாகவே மனதில் இருப்பார்.

தாடி வைப்பது , மழிப்பது என்பதல்ல மேட்டர். அது அல்ல கேரக்டராக மாறுவது என்பது . கமலின் சத்யா தாடிக்கும் , தேவர் மகன் தாடிக்கும் , புன்னகை மன்னன் தாடிக்கும் , ஒரு கைதியின் டைரி தாடிக்கும் , ஹேராம் தாடிக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா ? எல்லாம் தாவாங்கட்டை மயிர்தான். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு கேரக்டராக எப்படி தனித்துத் தெரிகிறது ? அதுதான் நடிகன்.

விஜய் சேதுபதி கூட எல்லாம் கமலை ஏன் கம்பேர் பண்றீங்க என்று கேட்கலாம். எனக்கு சுலபமான உதாரணமாக கமலே தெரிந்தார் , அதுதான் ஹி ஹி !

அஜீத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பம் , என்னை அறிந்தால் , மங்காத்தா, இந்த மூன்று படங்களிலும் போலீஸாக நடித்து இருக்கிறார். நடிக்க வராது என்று கிண்டல் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் அஜீத் , இந்த மூன்று படங்களிலும் வெவ்வேறு விதமான போலீஸாக மண்டையில் பதிகிறாரா இல்லையா ?

என்னை அறிந்தால் கௌதம் மேனன் படம். அதனால் அஜீத்தை இப்படி க்ளாஸாக ப்ரஸண்ட் செய்திருப்பார் என்று வாதம் வைக்கலாம். அஜீத்தாவது எப்போதாவதுதான் இயக்குநர் படங்களில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் அனைத்துப் படங்களும் இயக்குநர் படங்கள்தான். எந்த இயக்குநராலும் விஜய் சேதுபதியிடம் இருந்து இந்த தேங்கா பத்தையைத் தாண்டி பெயர்க்க முடிவதில்லை போல. ஒன்று யோசித்துப்பார்த்தீர்களா ? அஜீத் படம் , விஜய் படம் , தனுஷ் படம் , சிம்பு படம் என்று சொல்வது போல விஜய் சேதுபதி படம் என்று ஒன்றே கிடையாது.

அவர் இயல்பாக நடிக்கிறார் என்கிறார்கள். அவர் இயல்பாக இருக்கிறார் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். இந்த உதாரணம் புரிகிறதா பாருங்கள். கமல் சப்பாணியாக நடிக்க முடியும். சப்பாணி கமலாக நடிக்க முடியுமா ? சப்பாணி இயல்பாக இருக்கும் கேரக்டர் என்பதற்காக வெவ்வேறு கேரக்டர் கொடுத்து நடிக்க சொன்னால் என்ன செய்யும் ? சப்பாணி , சப்பாணி போலீஸாகவும் , சப்பாணி ரவுடியாகவும் நடிக்கும். அதுதான் விஜய் சேதுபதி விஷயத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

லால் என்ற குணச்சித்திர நடிகரை நிறைய மலையாளப் படங்களில் காண முடியும். அவர் தயாரிப்பாளரும் கூட. அவர் கூட ஒவ்வொரு படத்திற்கும் , கேரக்டருக்கு ஏற்றார்போல சின்னச் சின்ன வித்தியாசங்களையும் வெளிப்படுத்தி இருப்பார். முக பாவனைகள் , நடை , உடை , பேச்சு மாடுலேஷன் என அனைத்திலும் சிறு வித்தியாசம் காட்டி வேறுபடுத்தி இருப்பார். அந்த லால் அளவுக்கு கூட இல்லையென்றால் என்ன செய்வது ?

இதனால்தான் இவ்வளவு வெற்றிப் படங்கள் கொடுத்தும் , எந்த பெரிய இயக்குநரும், க்ளாஸ் இயக்குநரும் விஜய் சேதுபதியை சீண்டுவது கிடையாது. இல்லையெனில் இந்நேரம் இவர் ஒரு மணிரத்னம் படத்திலோ , பாலா படத்திலோ , ஏ.ஆர் .முருகதாஸ் படத்திலோ , கௌதம் மேனன் படத்திலோ நடித்திருப்பார்.

புதிய இயக்குநர்கள் படத்தில் மட்டும் இடம் பிடிக்கிறார். புதிய இயக்குநர்கள் சிந்தனை புதிதாகவும் , புதிய கதைக்களன்களை முயற்சி செய்தாலும் , அவர்களுக்கு கதையின் நாயகன் , அவனுடைய பங்களிப்பு என்பதில் போதிய அனுபவம் இல்லை. விஜய் சேதுபதி நேரத்துக்கு ஷூட்டிங் வருகிறார். சம்பளப் பிரச்சனை இல்லை. ஹீரோயினுக்கு போட்டிக்கு வருவதில்லை. ஈகோ பிரச்ச்னை இல்லை. இது போன்ற கம்ஃபர்ட் லெவல் இருப்பதால் விஜய் சேதுபதியை வைத்து எடுக்கிறார்கள். அவர் எப்படி நடித்தாலும் , சூப்பர் தலைவா என்று சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு போய் விடுவார்கள் போல்.

புதிய இயக்குநர்கள் கதையை நம்புகிறார்கள் . தங்கள் ஸ்க்ரிப்டின் மீது நம்பிக்கை இருக்கிறது . எல்லாம் சரிதான். இதை தூக்கி சுமக்கும் ஹீரோ முக்கியம் என்பதை தவற விடுகிறார்கள். விஜய் சேதுபதியை வேலை வாங்குவதே இல்லை. பழைய இயக்குநர்களிடம் இருந்து இந்த விஷயத்தை புது இயக்குநர்கள் கற்க வேண்டும்.க்தை வெயிட்டாக இருக்கும் படங்கள் , இயக்குநர் படங்கள் அவ்வப்போது ஹிட் அடிக்கும் தான். ஆனால் தமிழ் சினிமா எப்போதும் ஹீரோ ஒரியண்டட் சினிமா. பவர்ஃபுல் ஹீரோவையும் படத்தில் வைத்துக்கொண்டு , அந்தப்படம் “தன்” படமாக வர வைப்பதில் தான் இருக்கிறது இயக்குநரின் திறமை.

ஏதோ விஜய் சேதுபதிதான் புதிய இயக்குநர்களுக்கு வாழ்வு அளிப்பதாகவும் ஒரு பேச்சி ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் , அஜீத் கூட தங்கள் ஆரம்ப கட்டங்களில் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்கள். அந்தக்காலகட்டத்துக்கு புதிய கதைக்களன்களில் நடித்து இருக்கின்றனர். முகவரி அஜீத் , வாலி அஜீத் , காதல் மன்னன் அஜீத் என்று யோசித்துப் பார்த்தால் அஜீத் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டராக உயிர்த்தெழுந்து இருப்பார். அது அந்த பட வெற்றிக்கும் ,இயக்குநருக்கும் மிக மிக உதவிகரமாக இருந்து இருக்கும். விஜய் சேதுபதி எல்லா புதுமுக இயக்குநர் படங்களிலும் விஜய் சேதுபதியாக மட்டுமே இருக்கிறார். விஜய் சேதுபதியின் எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் , அந்த கேரக்டர் நினைவில் வராது. ஐயாதான் நினைவுக்கு வருவார்.

மணிரத்னம் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் அவர் ஹீரோ விஷயத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதில்லை. பெரும் புகழுடன் இருக்கும்போதே அவர் ரஜினியிடம் சென்றார். தளபதி எடுக்கும்போது விஜய் சேதுபதி இருந்திருந்தாலும் அவர் விஜய் சேதுபதியிடம் சென்று இருக்க மாட்டார். மணி செய்த ஒரே காமடி துல்கர் சல்மான் மட்டுமே .

கீழே இருக்கும் தளபதி டயலாக்குகளை விஜய் சேதுபதி பேசுவது போல யோசித்துப் பாருங்கள்.

அய்ய..ம்மா ..என்ன இன்னாத்துக்கு தூக்கி ஆத்துல போட்ட ?

ஏய் , நட்புன்னா என்னா தெர்மா ? சூர்யான்னா என்னான் தெர்மா ? ந்தா …உசிருதான வேணும் , எட்துக்க ..என்னா ? சொல்ரன் இல்ல , எட்துக்க !

யோசித்துப்பார்த்தால் எவ்வளவு காமடியாக இருக்கிறது ? தளபதி ஹீரோ சப்ஜக்ட் , விஜய் சேதுபதி இயல்பாக நடிப்பவர் என்கிறீர்களா ?

சரி பம்பாய் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தால் ? வாரணம் ஆயிரம் ? அர்ஜூன் நடித்த முதல்வன் ?சமீபத்தில் வெளிவந்த காற்று வெளியிடை கூட விஜய் சேதுபதிக்கு செட் ஆகாது.

அது என்னமோ தெரியவில்லை , பேரிளம்பெண்களுக்கு பிடித்தமாதிரி ஏதோ படத்தில் செய்கிறார். அது என்ன சைக்காலஜி என்று புரியவில்லை. அது மட்டும் தான் விஜய் சேதுபதிக்கு செட் ஆகிறது. ஒருக்கால் நன்கு கெடா மாடு போல வளர்ந்த ஆளாகவும் , அதே சமயம் கேனை போலவும் இருந்தால் பேரிளம்பெண்களுக்கு பிடிக்குமோ என்னவோ !

சரி விஜய் சேதுபதி என்ன செய்யலாம் ?

இயக்குநர் கதை சொன்னதும் , அந்த கேரக்டரை உள்வாங்கி , மனதுக்குள் அதை கேரக்டராக உருவாக்கி , அந்த கேரக்டருக்கு ஏற்றார் போல நடை , உடை , மேனரிஸம் , பேச்சு ஸ்டைல் , உடல்மொழி என அனைத்தையும் உருவாக்க ஹோம் செய்ய வேண்டும். சும்மா ஷூட்டிங்க் ஸ்பாட்டில் வந்து நின்று , கொடுக்கும் உடையை வாங்கி மாட்டிக்கொண்டு , டயலாக்கை ஒரு முறை பார்த்து விட்டு பேசி விட்டு சென்றால் வேலைக்காகாது.

எனக்கென்ன விஜய் சேதுபதி மேல் தனிப்பட்ட விரோதமா ? எல்லா படத்திலும் ஒரே விஜய் சேதுபதியை பார்த்த அலுப்பில் எழுதுகிறேன். இதையெல்லாம் தலை முழுகி விட்டு , வெவ்வேறு விதமான ரூபமெடுத்து படங்களில் கலக்கினால் ஜாலியாகி பாராட்டி எழுதப்போகிறேன். இப்போதைக்கு வித்தியாசமான கதைக்களன்களில் இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார்….சாரி இருக்கிறார். அந்த வகையில் பாராட்டலாம். இந்த பாலிஸியை மெயிண்டெயின் செய்து கொண்டு , நடிப்பிலும் , கேரக்டரைசேஷனிலும் வெரைட்டி காட்டினால் கொண்டாடலாம்.

இயல்பாக நடிக்கிறார் , ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ் என்று சொல்பவர்களுக்காக …..நானா படேகர் என்று ஒரு ஆசாமி இருக்கிறார்.அவரும் இயல்பாகத்தான் நடிப்பார். அவர் ஸ்க்ரீனில் வந்தால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

மற்றபடி சிம்பு கேரக்டர்களில் காட்டும் வித்தியாசத்தின் ஒரு சிட்டிகை கூட விஜய் சேதுபதி இதுவரை காட்டியதில்லை. தன்னுடைய கேங்கில் இருக்கும் சில இயக்குநர்கள் படத்தில் மட்டும் நடிப்பதை தவிர்த்து , வெளியே வந்து பெரிய இயக்குநர்கள் , க்ளாஸ் இயக்குநர்கள் படத்தில் நடித்தால் மாற்றம் வரலாம்.

விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் சீன்கள் மற்றும் டூயட்களை நினைத்துப்பார்த்தால் ….வேண்டாம் …..நம் எல்லோருக்கும் ரொமான்ஸே மறந்து போய்விடும்.பொது மக்கள் நலன் கருதி இத்தோடு கட்டுரையை முடிச்சிக்கிடலாம்.

மொதல்ல அந்த கேடு கெட்ட கரடி தாடியை எடுத்துத் தொலையும் ஐயா !

-அராத்து

1 Comment
  1. Velu says

    Well said. Vijay Sethupathi has no variety. He is very lucky to get some good scripts to reach this far. He is successful, because no competition, trust me no competition in Tamil cinema. Arya can not act, Jayam Ravi female sounding voice and cardboard face pulls him down, Vishal yeppa nadichaar?, Karthi good only village centric roles – Katru velidai exposed his limitations, Surya – Gajini, Kakka Kakka days over, Nowdays, Surya sounding he is acting means so artificial, Vijay – If he acts good in Kathi then he give 3 garbage movies to follow, Simbu can act – but lazy guy added rice bags in body – so no more considered as Hero, Ajit – nepotism with Siruthai Siva, Ajit is not giving his variety for last four years, Vikaram – Still not able to get out of Sethu kind of reaction in his movies – So Vijay Sethupathy without changing anything his acting looks natural.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்த நேரத்திலும் விமர்சனம்

Close