தமிழ்நாடு தியேட்டரிக்கல் 45 கோடி! ஒரேயடியாக ஜம்ப் ஆன விஜய் வியாபாரம்!
வெறும் நட்சத்திரம், நம்பிக்கை நட்சத்திரம் ஆவது எப்போது? ‘காடு கழனியை விற்று காசை போட்டேன். காடு கொள்ளா விளைச்சல், கழனி கொள்ளா மகிழ்ச்சி’ என்று எந்த விநியோகஸ்தர் வாயார பாராட்டுகிறாரோ, அப்போதுதான்! இந்த ஒரு சந்தோஷத்துக்காகதான் உயிரை கொடுத்து, உடம்பை புண்ணாக்கிக் கொள்கிறார்கள் டாப் கிளாஸ் ஹீரோக்கள். இல்லையென்றால், ஏன் அஜீத் வலி வந்த முழங்காலோடு நடிக்க வேண்டும். விஜய் டூப் இல்லாமல் பறக்க வேண்டும்? அவரை நான் முந்த வேண்டும் என்று இவரும், இவரை நான் முந்த வேண்டும் என்று அவரும் நடத்தும் தொழில் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ச்சி.
அந்த வளர்ச்சியின் ஒரு கோடுதான் இந்த 45 கோடி! தெறி படத்திற்கு பின் விஜய்யும், டைரக்டர் பரதனும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் 60 படத்திற்கு நாடெங்கிலும் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. படம் முடியும் தருவாயிலிருப்பதால், இப்பவே வியாபாரத்திற்கான கேட் திறக்கப்பட்டுவிட்டது. தெறி படத்தின் வசூலோடு கம்பேர் செய்வதுதானே விநியோகஸ்தர்களின் நோக்கமாக இருக்கும்? அப்படி கம்பேர் பண்ணிய விநியோகஸ்தர்கள், இந்த முறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் பண மூட்டையை அவிழ்க்க தயாராகி வருகிறார்களாம்.
இதில் சில பெரும் கம்பெனிகள், நேரடியாக படத்தை கொள்முதல் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. தமிழ்நாடு தியேட்டரில் வெளியிட மட்டும் 45 கோடியை நிர்ணயித்திருக்கிறதாம் பட நிறுவனம். என்னது… நாற்பத்தைந்தா? என்று அஞ்சாமல், விலை பேச கிளம்பிவிட்டார்கள். இந்த போட்டி 45 ஐ யும் தாண்டிப் போக வைக்கும் என்பதுதான் இன்றைய நிலவரம்.
விஜய் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!