வீட்டுக்கே வந்து வேணாம்னு சொல்றது எவ்ளோ பெரிய ட்ரிக்? வெல்டன் விஜய் ஆன்ட்டனி!

இந்த வார படங்கள் மூணுமே மூணு ரகம்! ஹிட்டா, சுமாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க… அடுத்த வார படங்களுக்கு அலங்கார வளைவை ரெடி பண்ணிவிட்டது கோடம்பாக்கம். அதில் பூத்துக்குலுங்குகிற முக்கியமான படம் காளி.

கிருத்திகா உதயநிதி இயக்கம், விஜய் ஆன்ட்டனி ஹீரோ, அஞ்சலி, சுனைனா ஹீரோயின்ஸ் என்று அறிமுகச் செய்தியே அமர்க்களப்பட வைக்க… பெரும் எதிர்பார்ப்புடன் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ஸ்பாட்டில் அஞ்சலியை தவிர அத்தனை பேரும் ஆஜர். முன்னதாக சுமார் 20 நிமிட காட்சியை திரையிட்டார்கள். பிச்சைக்காரன் பட வெற்றிக்கு பெரிய காரணமே அதில் நிறைந்து வழிந்த அம்மா சென்ட்டிமென்ட்தான். விடுவாரா விஜய் ஆன்ட்டனி?

இதிலும் அம்மா சென்ட்டிமென்ட் அமர்க்களம். வெளிநாட்டில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆன்ட்டனிக்கு நாள்தோறும் ஒரு கனவு. அந்த கனவில் வருகிற சம்பவங்களுக்கும் தனது கடந்த காலத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக நினைத்து சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில்தான் பிழிய பிழிய ஒரு அம்மா சென்ட்டிமென்ட் ஸ்டோரி.

சில தினங்களுக்கு முன்புதான் இரும்புத்திரை படத்தின் முதல் பாதியை போட்டு பிரமிக்க விட்டார் விஷால். இதில் 20 நிமிஷம். படத்தை எப்ப சார் முழுசா காட்டுவீங்க என்று கேட்க வைத்தார்கள்.

சரி… இந்த செய்தியின் தலைப்புக்கு வருவோம். விஷுவல் கம்யூனிக்கேஷன் படித்த காலத்தில் விஜய் ஆன்ட்டனியின் ஜுனியர்தானாம் இப்படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. “நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லணும். அப்பாயின்ட்மென்ட் கொடுங்க என்று கிருத்திகா கேட்க, நானே உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று கூறிய விஜய் ஆன்ட்டனி, சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார். நடுவில் பலமுறை “நானே வர்றேனே?” என்று கிருத்திகா கேட்க, “சேச்சே… எனக்கு அவங்கவங்க வீட்ல போய்தான் கதை கேட்டு பழக்கம்” என்று மறுத்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

அதன் சூட்சுமம் அப்புறம்தான் தெரியவந்ததாம் கிருத்திகாவுக்கு. ‘வரவழைச்சு கதை கேட்டுட்டு அது பிடிக்கலேன்னு சொல்லும்போது சங்கடமா இருக்கும். அதுவே நேர்ல போய் அவங்க ஸ்பாட்லேயே கதை கேட்டு, பிடிக்கலைங்க என்று சொன்னால் அது ஸ்மூத்தாக போய் விடும்’ என்பதால்தான் இப்படியொரு ஐடியாவாம் விஜய் ஆன்ட்டனிக்கு.

சினிமாவுல இடம் புடிக்கணும்னா, சிரிக்கறது… தும்மறதுக்கெல்லாம் கூட முன் யோசனை நிறைய வச்சுக்கணும் போல!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இரும்புத்திரை விமர்சனம்

Close