மோடி திட்டம்! முட்டு சந்தில் விஜய் சேதுபதி?
இந்தியாவே ஏடிஎம் வாசலில் நிற்கும் போது, கோடம்பாக்கம் மட்டும் கோவில் வாசலிலா நிற்கும்? இங்கும் அதே நிலைமைதான். சங்கடம் யாருக்கு? சந்தோஷம் யாருக்கு? என்றெல்லாம் பல்வேறு ஊடகங்கள் சென்சஸ் எடுத்து வருகின்றன. சிலர் மோடியின் திட்டம் வரவேற்கக் கூடியதுதான் என்கிறார்கள். வேறு சிலரோ, தமிழில் இதுவரை கேட்காத வார்த்தைகளையெல்லாம் தேடிக் கொண்டு வந்து திட்டித் தீர்க்கிறார்கள்.
நம்ம விஜய் சேதுபதியை கேட்டால் என்ன சொல்வார்? ம்க்கூம்… அவர் என்னத்தை சொல்வார்? அவர் போட்ட திட்டங்கள் பல தலைகீழ் ஆகிவிட்டதுதான் கொடுமை. தன்னை நாடி பணப் பெட்டியோடு வந்த பல தயாரிப்பாளர்களிடம், 2018 வரைக்கும் நம்ம கால்ஷீட் புல் என்று சொல்லி வந்தார். நிஜமும் அதுதான். ஆனால் சமீப காலமாக அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து கால்ஷீட் தேதியை நிரப்பி வந்த தயாரிப்பாளர்களில் சிலர் சொல்லி வைத்த மாதிரி ஒரு கஷ்டத்தை பங்கு வைத்தார்களாம்.
இப்ப படம் எடுக்கிற சூழ்நிலை இல்ல. அதனால் நீங்க கொடுத்த கால்ஷீட் தேதியை அப்புறமா கொடுங்க. இப்ப வேணாம்… என்பதுதான் அந்த சமாளிபிகேஷன். இப்படி சொல்லி சொல்லியே 2017 ஐ வெற்றிடம் ஆக்கிவிட்டார்களாம். வரிசை கட்டியது போல கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, இப்போது சிலருக்கு போன் பண்ணி நடுவுலேயே கால்ஷீட் இருக்கு. ஆரம்பிச்சுடலாமா? என்கிறாராம்.
வேடனுக்கு தேவை வில்லு. விலங்குக்கு தேவை வுடு ஜுட்!