சிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ?
“ரெண்டு தடவ நெஞ்சுவலி வந்த மனுஷன். கடவுளே… காப்பாத்துப்பா” என்று இப்பவே பிரார்த்தனை கிளப்பை திறந்துவிட்டது மிஸ்டர் மணிரத்னத்தின் ‘ஆயுஷ்ஹோம’ அன்பர்ஸ் ஏரியா. சிம்புவை வைத்து படமெடுத்ததில் பாதியாய் இளைத்து, பலவாறாக துன்பப்பட்ட கவுதம் மேனனே கூட, இந்த ஆயுஷ்ஹோம கிளப்பில் வலிய இணைவார் போலிருக்கிறது.
சேச்சே… அதெல்லாம் மணி சார்ட்ட சிம்பு கரெக்டா நடந்துக்குவாப்ல என்று இன்னொரு கூட்டம் ஜாமீன் கையெழுத்து போட முன் வந்தாலும், இந்த விசேஷ கூட்டணியை சற்று அதிர்ச்சியோடுதான் கவனிக்கிறது ஊர் உலகம்.
இந்த நேரத்தில்தான் சிம்பு மணிரத்னம் கூட்டு உருவானது எப்படி என்கிற பலமான கேள்விக்கும் விடை தேட கிளம்புகிறது மனசு. யெஸ்… இந்த பொன்னான வாய்ப்பை சிம்புவுக்கு வழங்கியவர் வேறு யாருமல்ல. பிரபல தெலுங்கு நடிகர் நானி. முதலில் மணிரத்னம் படத்தில் இந்த சிம்புவின் கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இந்த நானிதான். (நான் ஈ படத்தில் ஹீரோவாக நடித்தாரே, அவர்தான்) ஆனால் படத்தில் மேலும் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பகத் பாசில் ஆகிய மூன்று வெயிட் ஹீரோக்கள் இருப்பதால் நமக்கு என்ன ஹோப் இருந்துவிடப் போகிறது என்கிற எண்ணத்தில் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.
கடைசி நேரத்தில் இளசுகளின் இதயம் கவர, நானி போலவே பதினாறு ப்ளஸ்களின் ஓட்டுகளை பெற்ற சிம்புவை தேர்ந்தெடுத்திருக்கிறார் மணி.
இந்த கடைசி பாராவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பச்சை தமிழனாகவோ, சிவப்பு தமிழனாகவோ, மருதாணிக்கலர் தமிழனாகவோ இருக்க முடியாது. இருக்கவே முடியாது என்பதை டி.ஆர் சார்பில் தெரிவித்துக் கொள்கிறது மன்னாரங்கம்பெனி!