கல்வித் தந்தைகளின் கழுத்தை பிடிக்கும் எய்தவன்!
“சரஸ்வதியை மகாலட்சுமி பர்சேஸ் பண்ணி பல வருஷங்களாச்சு” என்று பெருமூச்சு விடும் சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி வியாபாரமாகிப் போன கல்வி, கொள்ளைக்காரர்களின் கூடாரம் ஆகிப் போனதையும் வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருக்கிறது சமூகம். ‘இதையெல்லாம் நெத்தியடியா சினிமாவுல சொல்றதுக்கு ஒரு ஆள் வரமாட்டாரா?’ என்கிற தவிப்பு எல்லாருக்கும் இருக்கிறது. (அதற்காக சினிமா வந்து நாட்டை திருத்திவிடுமா என்றால், ஹிஹி)
‘அந்த ஆள் நான்தான்’ என்று ஆஜர் சொல்கிறார் சக்தி ராஜசேகரன். சுதாகரன் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘எய்தவன்’ படம், கல்விக் கூடங்களின் கருப்பு பக்கத்தை சொல்கிற படமாக உருவாகியிருக்கிறது. 2014 ல் இக்கதையை எழுத ஆரம்பித்த சக்திராஜசேகரன், மூன்று வருடங்கள் இந்த கதைக்காக செய்த ஹோம் வொர்க்கும் பீல்டு வொர்க்கும் கொஞ்சநஞ்சமல்ல. மருத்துவ கல்விக் கழக தலைவருடன் சுமார் பதினைந்து நாட்கள் இருந்து அவரது அனுபவத்தையும் கரைத்துக் கொட்டி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அவர்.
இப்போதைய கல்வி முறை ஏழைகளுக்கு மட்டுமல்ல, பணக்காரனுக்கும் பிரச்சனைதான் என்ற கருத்தையும் உள்ளே வைத்திருக்கிறாராம். பைரவா, அச்சமின்றி போன்ற படங்கள் கல்வி நிறுவனங்களின் இன்னொரு முகத்தை காட்டியிருந்தாலும், நம்ம படம் வேற மாதிரி என்கிறார் சக்தி ராஜசேகர்.
மதயானை கூட்டம் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய அனுபவத்தில், அந்தப்படத்தில் நடித்த கலையரசனையும், வேல ராமமூர்த்தியும் இந்தப்படத்தில் ரிப்பீட் பண்ணியிருக்கிறார். பிச்சைக்காரன் நாயகி சட்னா டைடஸ் ஹீரோயின். இந்தப்படத்தில் இவங்க போலீஸ் அதிகாரியா வர்றாங்க. அவ்வளவு சிறப்பா நடிச்சுருக்காங்க என்றார் சக்தி.
படம் நல்லா ஓடி கோடி கோடியா சம்பாதிச்சு ஒரு மெடிக்கல் காலேஜ் கட்டுங்க சார்….