ஆறு மெழுகுவர்த்திகள் – ஒரு கசப்பு
ஒரு திரைப்படமாக ஆறுமெழுகுவர்த்திகள் வெற்றிபெற்றுவிட்டது என்று விமர்சனங்கள் காட்டுகின்றன. பொருளியல்ரீதியாகவும் வெற்றி என்று இன்றைய நிலவரத்தைக்கொண்டு கணித்துவிட்டார்கள். மகிழ்ச்சி அடையவேண்டிய தருணம்.
ஆனால் மிகமிக மனக்கசப்புதான் எஞ்சுகிறது. காரணம், குழந்தைகளை இதேபோலத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பலர் தொடர்புகொள்வதுதான். உண்மையில் இந்த அளவுக்குச் சாதாரணமாக இது இங்கே நிகழ்கிறது என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. தொண்ணூறு சதவீதம் குழந்தைகள் திரும்பக்கிடைப்பதில்லை. காணாமல்போகும் குழந்தைகள் பெரும்பாலும் பெண்கள்
இங்கே பெரும்பாலான pan Indian குற்றங்கள் பிடிக்கப்படுவதேயில்லை. இத்தனைபெரிய தேசத்தில், இத்தனை மக்கள்தொகையில், மாநிலம்மாநிலமாக்ப் பிரிந்துகிடக்கும் போலிஸ் அமைப்பில், அவற்றைப்பிடிக்கும் வசதியே இல்லை.
படத்தைப்பார்த்துவிட்டு இதே பாதையில் சென்று குழந்தையைக் கண்டுபிடிக்கமுடியுமா என்று கேட்கும் கடிதங்களுக்கு என்ன பதில் எழுதுவது? அவர்களுக்கும் தெரியும், இது புனைவு என்று. ஆனால் அந்த ஆற்றாமையைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஒரு சினிமா எந்நிலையிலானாலும் கற்பனைதான். கதாநாயகர்கள் மட்டுமே சிலவற்றைச் செய்யமுடியும்.அவ்வளவுதான்
-ஜெயமோகன் எழுத்தாளர், மற்றும் 6 படத்தின் வசனகர்த்தா