ஈகோ விமர்சனம்

காதலர்களுக்குள் ‘ஈகோ ’ இருக்கலாம். ஆனால் லவ்வர்சின் முதல் எழுத்தும் ‘ஈ-கோ’வாக இருந்து, அவர்களுக்குள் ஈகோவும் இருந்தால் எப்படியிருக்கும்? அதைதான் லவ் கிரீட்டிங்காக கொடுத்திருக்கிறார் டைரக்டர் சக்திவேல். காதலை மயிலிறகில் எழுதியிருக்கிறார்கள். சிலேட்டில் எழுதியிருக்கிறார்கள், குளத்துமேட்டில், ஆற்று மேட்டில்… ஏன் ரயிலின் பின்பக்கத்தில் கூட எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த பொல்லாத காதலை, காதலே இல்லாத இருவரை வைத்து எழுதியிருக்கிறார் சக்திவேல். ஐடியாவுக்கு ஒரு சாக்லெட் என்று அள்ளிக் கொடுத்தால் கூட அரை டப்பா காலியாகிவிடும்.

முதுகு சொறியக் கூட அரிவாளை யூஸ் பண்ணுகிற பேமிலியிலிருந்து ஒரு அழகான பெண். அவளுக்கு ஒரு காதல். வீட்டில் சொன்னால் நடக்காதென்று எஸ்கேப் ஆகிறாள். கால காலமாக கையில் இருக்கும் சென்ட்டிமென்ட் மோதிரத்தை காதலனிடம் கொடுத்தனுப்பினால் அவன் மீது அப்பா மெல்ட் ஆவார். தன் காதலுக்கும் சம்மதம் வாங்கிவிடலாம் என்பது அவள் கணக்கு. அதே ரயிலில்தான் ஹீரோவும், அவன் நண்பனும் டிராவல் செய்கிறார்கள். முழு நேர டுபாக்கூரான இவர்களின் பை ஹீரோயின் வசமும், அவளின் மோதிரம் இவர்கள் வசமும் சிக்கிக் கொள்ள, மறுநாள் அவள் வீட்டை தேடி மோதிரத்தை கொடுத்துவிட்டு பையை மீட்கலாம் என்று அவள் வீட்டை தேடிப்பிடித்து போனால்…?

வாடா மாப்ளைங்களா…? உங்களுக்காகதான் வெயிட்டிங் என்று ஆளாளுக்கு அரிவாளையும், அதைவிட கூரான மீசையையும் முறுக்குகிறார்கள். அவர்களிடமிருந்து இந்த டுபாக்கூர் காதலன் தப்பித்தானா? அவளின் நிஜ காதலன் என்னவானான்? ஓடிப்போன மகள் திரும்பி வந்தாளா? யாரு மனசுல யாரு? என்பன போன்ற புள்ளியில்லா கோலங்களை போட்டு, புதிர் கிளப்புகிறார் டைரக்டர். முடிவை வெண்திரையில் காண்க.

அமெரிக்காவில் என்ஜினியரிங் படித்தவராம் ஹீரோ வேலு. கேமிரா கோணங்களில் எக்குதப்பாக இருந்தாலும், முதல் படமல்லவா? உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அடிக்கடி கழுத்தில் கத்தி வைக்கும் மச்சான்களை சமாளிக்க அவர் சொல்லும் பொய், ஹீரோயினையே ‘சாச்சுபுட்டான்டா’வாக்குவதுதான் திடீர் தில்லாலங்கடி. நான் கர்ப்பம் இல்லேன்னு மகளே சொன்னாலும் கேட்கிற நிலையிலா இருக்கிறது அந்த பே(ய்)மிலி? மகளையே நம்பாமல் ‘மாப்ளே…’ என்று கொஞ்சுகிறார் கிடா மீசை. திருடன் கையிலேயே சாவியை கொடுத்துட்டான்டீய்… என்பார்கள் அல்லவா? படத்திலும் அதுதான் நடக்கிறது. பணத்தையாவது காப்பாற்றலாம் என்று லாக்கர் சாவியை பறித்து சுடிதாருக்குள் போட்டுக் கொள்கிற ஹீரோயினை பாய்ஞ்சு விழுந்து என்னவோ பண்ணப் போகிறார் வேலு என்றுதானே நினைப்பீர்கள்?. வேறு படமாக இருந்தால், அந்த இடத்தில் கட் பண்ணி பாங்காக்கிலோ, பண்ணை வயலிலோ ஒரு ஸாங்குக்கு போயிருப்பார்கள். ஆனால் திருட்டு வேலு கூலாக, அவள் கூந்தலில் இருந்து ஹேர்பின்னை உருவி, அந்த லாக்கரை திறக்க…. அல்லோலப்படுகிறது தியேட்டர்.

ஹீரோயினிடம் டைரக்டர், ‘கொஞ்சம் கோவமாவே இருங்க’ என்று கூறியிருப்பார் போலிருக்கிறது. மூக்கு பொடியை தாழம்பூவுக்குள் வைத்து கட்டியதை போல, தன் அழகான முகத்தில் எந்நேரமும் எரிச்சலாகவே திரிகிறார் புதுமுகம் அனஸ்வரா. அதற்கேற்றமாதிரி இவரை சிரிக்க வைக்கிற காட்சி வருவதற்குள் படத்தின் முக்கால்வாசி கிணறை தாண்டிவிடுகிறான் ரசிகன்.

படம் முழுக்க நீக்கமற நிறைந்திருப்பவர் ‘கனாக்காணும்’ காலங்கள் பால சரவணன்தான். கவுண்டமணியின் கருநாக்கையும், வடிவேலுவின் நுனி நாக்கையும் கலந்து கட்டி அடிக்கிறார் மனுஷன். படம் நெடுக டயலாக்குளை அவிழ்த்துவிட்டுக் கொண்டேயிருக்கிறார். அதில் பல டேஞ்சர் ரகம். இவனை வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிடுறேன். என் குடும்பத்தை நீ பாத்துப்பீயாடா தம்பி? என்று ஹீரோயினின் அண்ணன் பொங்கி வெடிக்க, நடுவில் குறுக்கிடும் சரவணன் போடுகிற டயலாக் இருக்கே, யப்பா… பயங்கரம். இப்படி படம் முழுக்க சரவெடிகளை வீசிக் கொண்டேயிருக்கிறார் அருவா நாக்கு சரவணன்.

படத்தில் ஆளாளுக்கு நீட்டும் அருவாவை அப்படியே எடிட்டிங் டேபிளில் வைத்திருந்தால், காட்சிகளின் நீளம் சற்றே குறைக்கப்பட்டு ஷார்ப் ஆகியிருக்கும். பட்…?

ஏ.பி.வசந்தின் ஒளிப்பதிவிலும், அன்புச்செல்வனின் இசையிலும் கவனம் செலுத்தாமல் வெளியேற முடியாது.

ஈகோ…. காதலர்களுக்கான pogo!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
விஜய் என்னை ஏமாத்திட்டாரு… பூர்ணா புலம்பல்!

இன்று வெளியாகியிருக்கும் தகராறு படத்தில் பூர்ணா படு பயங்கரமான வில்லியாக நடித்திருக்கிறாராம். படத்தில்தான் அப்படியா, இல்ல நிஜத்திலேயே நீங்க வில்லிதானா என்று விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கிற அளவுக்கு...

Close