எழுத்தாளர் சங்கத்திலிருந்து டைரக்டர் அமீர் சஸ்பெண்ட்
காசி தீர்த்தமா இருந்தாலும், ‘கழுவிட்டு தர்றேன்’னு அதை அசிங்கப்படுத்த தயங்காத ஏரியாதான் கோடம்பாக்கம். இல்லையென்றால் கவியரசர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, ஆரூர் தாஸ் ஆகியோர் அங்கம் வகித்த பெருமைக்குரிய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை லெட்டர் பேட் சங்கம் என்று வர்ணித்திருப்பாரா அமீர்?
அப்போதைய நிலைமை எப்படியோ? இப்போது இந்த சங்கத்தின் தலைவராக இருக்கிறார் டைரக்டர் விசு. இவருக்கும் பெப்ஸி தலைவர் அமீருக்கும் ஆகவே ஆகாது. இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து பெப்ஸி தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். இந்த கடுப்பில்தான் மேற்படி சங்கத்தை லெட்டர் பேட் சங்கம் என்று வர்ணித்திருக்கிறார் அமீர். இதன் பின்னணியில் நடந்து வரும் குழாயடி சண்டையின் விபரம் இதுதான்.
தமிழ்சினிமாவில் யாருக்காவது பிரச்சனை என்றால் தான் சார்ந்திருக்கும் சங்கத்தில் புகார் கொடுப்பார்கள். எல்லா சங்கத்தையும் தனக்குள் அடக்கியிருக்கும் (இதில் தயாரிப்பாளர் சங்கம் சேர்த்தியில்லை) பெப்ஸி இந்த பிரச்சனையை பேசி தீர்க்கும். வரவேண்டிய நஷ்டத் தொகையை வாங்கியும் கொடுக்கும். அதற்கு பிரதிபலனாக பத்து சதவீத கமிஷனை பெற்றுக் கொள்ளும். அதில் பாதியை சம்பந்தப்பட்ட சங்கத்திற்கும் பிரித்துக் கொடுக்கும். காலகாலமாக நடந்து வரும் விஷயம் இது.
சாய்ரமணி என்ற இயக்குனரின் கதையை இன்னொரு இயக்குனர் சுட்டு படம் எடுத்துவிட்டார். கதை என்னுடையதுதான் என்று எழுத்தாளர் சங்கத்தில் நிரூபித்துவிட்டார் சாய்ரமணி. இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட இயக்குனரை அழைத்து பேசியது அமீர் தலைமையிலான பெப்ஸி அமைப்பு. உண்மையை ஒப்புக் கொண்ட திருட்டு பட இயக்குனர், நஷ்ட தொகையை ஐம்பது லட்சம் கொடுத்தாராம். இதில் பத்து சதவீதத்தை கமிஷனாக எடுத்துக் கொண்ட அமீர், அதை பெப்ஸி கணக்கில் சேர்த்துவிட்டார். நியாயப்படி எழுத்தாளர் சங்கத்திற்கு அதில் ஐந்து சதவீதத்தை கொடுக்க வேண்டுமல்லவா? கேட்டதற்குதான் இப்படியொரு கேவலமான விமர்சனம்.
இத்தனைக்கும் அமீரும் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறாராம். வேறு வழியில்லாத விசு, அமீரை சங்கத்திலிருந்தே சஸ்பெண்ட் செய்துவிட்டார். இன்னும் கொஞ்ச நாளில் யார் குடுமி ஸ்டிராங் என்பது தெரிந்துவிடும்.