ஒரு ஊர்ல / விமர்சனம்

சேது, காதல், வெயில், அழகி மாதிரி சில படங்கள்தான் நம்மை உறங்கவிடாமல் அடிக்கும். ‘ஒரு ஊர்ல’ அப்படிப்பட்ட படம்.

மண் சார்ந்த கதைகளா? மண்ணுக்குள்ளேயே போட்டு புதை… உறவின் அற்புதத்தை உருக்கமாக சொல்கிறார்களா? அப்படியே எழுந்து ஓடு என்கிற அளவுக்கு கொடூரமான மனநிலையோடு படங்களை ரசிக்க தொடங்கிவிட்டான் நவீனத் தமிழன். இந்த இக்கட்டான நேரத்தில் தீயில் விழுந்த பட்டுத்துணி போல ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாமல் தந்திருக்கிறார் டைரக்டர் கா.ச. வசந்தகுமார். படமும் பிழைக்கட்டும்… இவரும் பிழைக்கட்டும்…

உலகின் உன்னதமான உறவுகளில் ஒன்று சித்தப்பன்- மகள் உறவு. அதைதான் இந்த படத்தில் கதையாக வைத்திருக்கிறார் டைரக்டர். எந்நேரமும் குடி குடியென கிடக்கும் ஹீரோ வெங்கடேஷ், தனது அண்ணனுக்கு ஒரு மகள் பிறக்க, அந்த பிஞ்சு விரல்களை பற்றிக் கொண்டு நடப்பதற்காகவே குடியை விடுகிறான். அவளை குளிக்க வைப்பதிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்வது வரை எல்லாமே அவன் வேலைதான். சிடுமூஞ்சி அண்ணியை பொருத்துக் கொள்கிற அவன், தனது உலகமே அந்த குழந்தைதான் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது வருகிறது வினை. ஒரு நிமிடத்தில் குழந்தை காணாமல் போகிறது. தேடுகிறான் தேடுகிறான். தேடிக் கொண்டேயிருக்கிறான். அந்த கடைசி நிமிடம், உடம்பின் மொத்த ரத்தத்தையும் இதயத்திற்கு பாய்ச்சி உதறலெடுக்கும்படி ஒரு க்ளைமாக்சுடன் படத்தை முடிக்கிறார் வசந்தகுமார்.

கதைன்னா ஒரு நீதி வேணாமா? ஏன் இல்லை. ஒழுக்கம் தவறுகிற எவனுக்கும் எங்கிருந்தாவது இடி விழும் என்பதுதான் அது.

படத்தின் ஹீரோ வெங்கடேஷ் எங்கே இன்னுமொரு பருத்தி வீரனாக மாறி ‘ரம்பம்’ போடுவாரோ என்று நினைத்திருந்தால், முற்றிலும் வேறு திசையில் அவரை நகர்த்திக் கொண்டு போகிறார் டைரக்டர். இத்தனைக்கும் அந்த ஊருக்கு அழகான நர்ஸ் ஒருத்தி வருகிறாள். அவளுக்கும் இவன் மீது ஒரு பார்வை இருக்கிறது. இருந்தாலும் தமிழ்சினிமாவின் வழக்கப்படி ஒரு கனவு டூயட்டாவது வேண்டுமே, ம்ஹும். துளி சமரசமில்லை இயக்குனருக்கு.

வெங்கடேஷுக்கும் அந்த குழந்தை குட்டிம்மாவுக்கான சம்பாஷணைகளை மிகவும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார் டைரக்டர். அதிலும் படிக்கவே தெரியாத சித்தப்பனுக்கு அந்த குழந்தை பாடம் சொல்லிக் கொடுக்கிற அழகு இன்னமும் கிராம புறங்களில் மிச்சமிருக்கும் சந்தோஷங்கள் ஒன்று. தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் குடித்துவிட்டு, புல் மப்பில் சாலையில் விழுந்து கிடக்கும் அவனது அருகில் படுத்துறங்கிவிடுகிறது குழந்தை. போதை தெளிந்து எழுகிறவன் யய்யோ… உன்னையும் ரோட்ல படுக்க விட்டுட்டனே’ என்று கதறி அழுகிறான். பல காட்சிகளில் இது படம் என்பதையெல்லாம் மறந்து காட்சிகளுடன் கரைந்து போயிருக்கிறார் அறிமுக ஹீரோ வெங்கடேஷ்.

மிக மிக இயல்பாக நடித்திருக்கிறாள் குழந்தை சௌந்தர்யா. சின்னஞ்சிறு குழந்தைகளை நடிக்க வைப்பது கடினம். அந்த வகையிலும் ஆச்சர்யம் கிளப்புகிறார் இயக்குனர். வெங்டேஷின் அண்ணனாக நடித்திருக்கும் நபர், ஊரில் வெள்ளை வேட்டி படபடக்க புல்லட்டில் சுற்றும் வியாபாரி. ஊரடங்குகிற நேரத்தில் அவருக்கும் தேவைப்படுகிறது ஒரு துணை. அங்குதான் ஆரம்பிக்கிறது வினை. சொந்த மெழுகுவர்த்தியை அடுத்தவர்களுக்காக எரிய வைக்கும் மாம்ஸ்கள் நிறைந்த உலகமாச்சே? இங்கும் அப்படியொரு மாம்ஸ். அண்ணனுக்கும் இந்த புருஷனுக்கும் நடுவிலிருக்கிற அந்த கிளி, சரியான கிராமத்து கட்டை.

‘சொல்லிட்டு போறதே பெருசு. இதுல எங்க போறேன்னு வேற சொல்லிட்டு போறாங்களாக்கும்?’ -வீட்டு திண்ணையில் முடங்கிவிடுகிற பெரிசுகளின் புலம்பலையும் மிக இயல்பாக கேட்க முடிகிறது. கொழுந்தனை எந்நேரமும் பூச்சியை போல கேவலமாக பார்க்கும் அண்ணிக்கு க்ளைமாக்சில் டயலாக் கொடுக்கவில்லையே தவிர, அவள் எண்ண நினைத்து அழுகிறாள் என்பதையும் வசனமில்லாமலே புரிய வைக்கிறார் டைரக்டர்.

அந்த க்ளைமாக்சுக்கு முந்தைய சண்டை, கலங்கடிக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் ஆக்ஷன் ஜி க்கு பாராட்டுகள்.

இசை இளையராஜா. இதுபோன்ற அழுத்தமான கதைகளுக்கு இவரை விட்டால் ஆளேது? பின்னணி இசையிலேயே ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் செய்கிறார். சீராக்கவும் செய்கிறார். பாடல்களில் தாயே வந்தாயே… ராஜா ஸ்பெஷல்.

இந்த சினிமாவெல்லாம் ஓடவில்லை என்றால் தமிழ்சினிமா நாசமாக போய் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்! வேறென்ன சொல்ல?

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
சிறையில் படுக்கை வசதி இல்லாததால் குண்டு வாலிபர் விடுதலை

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால்...

Close