கோலிசோடா விமர்சனம்

வியாபாரிகளின் வில்லேஜ் ஆன கோயம்பேட்டில்தான் முழு கதையும். நாலு அழுக்கு பசங்க, ஒரு அழகான ஃபிகர் என்று தமிழ்சினிமா பார்த்த அதே பழைய சுவரில் விஜய் மில்டன் வரைந்திருக்கும் இந்த ஓவியம், எல்லோராவின் அழகையும் தாண்டியதுதான்..! ஆனால்?

அதென்ன ஆனால்? எல்லாருக்கும் புரிகிற மாதிரியே சொல்லிவிடலாம். ‘கோலிசோடா’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கி வெளியிட்டிருக்கிறது. அதுவும் எந்த மாதிரி சூழலில் தெரியுமா? ‘விஜய்மில்டன் இந்த படத்தை விற்க படாதபாடு படுகிறாரே, நாம்தான் அவருக்கு ஆதரவு தருவோமே’ என்கிற நல்லெண்ணத்தில். படம் வெளியாகி சூப்பர் ஹிட். இந்த மாதத்து வாடகை, கரண்ட் பில், போன் பில், இன்டர்நெட் பில், ஊழியர்களின் சம்பளம் எல்லாவற்றையும் கோலிசோடா கலெக்ஷனில் இருந்தே கட்டுகிறார் லிங்குசாமி. இதை கேள்விப்படும் விஜய்மில்டன், திடீரென ‘திருப்பதி பிரதர்ஸ் ஆபிசே எனக்கு சொந்தமானதுதான். இந்த ஆபிசை எனக்கு கொடுக்காவிட்டால் என் அடையாளம் என்னாவது?’ என்று படியில் உட்கார்ந்து தர்ணா செய்தால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது இந்த கதையும்.

மார்க்கெட்டில் சொந்த பெயர் கூட என்னவென்றே தெரியாமல் அநாதையாக சுற்றும் நான்கு சிறுவர்கள் போன்ற வாலிபர்களுக்கு அன்பு காட்டுகிறார் அதே கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் ஆச்சி சுஜாதா. இவரது சிபாரிசின் பேரில் மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நாயுடு தனக்கு சொந்தமான கோடவுனை பையன்களுக்கு கொடுக்கிறார். அதில் ஆச்சி மெஸ் ஆரம்பிக்கிறார்கள் அவர்கள். இத்தனைக்கும் வாடகை வேண்டாம் என்று கூறுகிற நாயுடு, அந்த ஓட்டல் வைக்க பணமும் கொடுத்துதவுகிறார். அதற்கப்புறம்தான் இந்த சிறுவர்களை மரியாதையோடு நடத்துகிறது மார்க்கெட். அந்த கடையால்தான் தங்களுக்கு மரியாதை என்று கருதும் இவர்கள், நாயுடுவின் ஆளான மயிலுவின் அர்த்த ராத்திர அலப்பறையால் கொந்தளிக்கிறார்கள். அவ்வப்போது கடைக்குள் என்ட்ரி கொடுக்கும் மயிலு, அங்கேயே உட்கார்ந்து சரக்கடிக்கிறார். நள்ளிரவில் பஸ்சுக்காக காத்திருக்கும் ஒருத்தியை கொண்டு வந்து கெடுக்கிறார். புனிதமான கடையை கேவலப்படுத்திய மயிலுவை இவர்கள் அடிக்க, நம்ம தொழிலுக்கே மற்றவங்க பயம்தான் முதலீடு. நம்ம ஆளையே இந்த சுண்டைக்காய் பசங்க அடிச்சுட்டாங்க என்றால் தொழில் நடத்துவது எப்படி என்று திகைக்கும் நாயுடு ‘கடையை காலி பண்ணுங்கடா’ என்கிறார். பசங்க அவருக்கு எதிராக திரும்ப, ஆரம்பமாகிறது யுத்தம். கடைசியில் கடன் கொடுத்த நாயுடுவின் கோவணத்தை உருவி ஜெயிக்கிறார்கள் வாலிப சிறார்கள்.

இந்த படத்தின் வெற்றி எடுக்கப்பட்ட விதத்திலும், சொல்லப்பட்ட ஸ்டைலிலும்தான் இருக்கிறதே தவிர, இந்த பலவீனமான பேஸ்மென்ட்டில் இல்லை. எப்படியோ? விஜய் மில்டன் படம் வென்றதை வாண வேடிக்கையாக கொண்டாடி தீர்த்துவிட வேண்டியதுதான். ஏனென்றால் மிக மிக குறைந்த பட்ஜெட்டில், தெரியாத முகங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. இன்னும் இதுபோல ஆயிரம் பேர் பின்பற்றி வருவார்கள். தமிழ்சினிமா மார்க்கெட் உருப்படும். அதனால்… பாராட்டுகிறோம் மில்டன்.

இந்த பலவீனமான கதையிலும் தன் ஸ்கிரீன் ப்ளே யுக்தியால் ‘அட ’ போட வைத்திருக்கிறார் மில்டன். ‘பசங்களை என் ஆட்கள் அதே கடையில் வச்சு அடிப்பாங்க. அவனுங்களை கடைக்கு போக சொல்லு’ என்று கூறுகிற நாயுடு, ‘ஆச்சிக்கு ஒரு சேரை போட்றா’ என்று அவரை சிறை பிடிக்கும்போது திக்கென்று இருக்கிறது. ‘நான் செத்து ரெண்டு மணி நேரமாச்சு’ என்று ஆச்சி வார்த்தைகளால் திருப்பி அடிப்பதும் பிரமாதம். படம் நெடுக வருகிறார் இந்த பருத்தி வீரன் சுஜாதா என்கிற ஆச்சி. சரிதாவின் சேர் இனி உங்களுக்குதான் ஆச்சி.

காதல் எல்லாருக்கும் வரும். அவள் அழகே இல்லாதவளாக இருந்தாலும் கூட என்பதை ஏடிஎம் கேரக்டர் மூலம் சொல்கிற மில்டன், ஒரு காட்சியில் ‘நான் சரியா படிக்கலேன்னா அதுக்கு காரணம் நானா இருக்கலாம். ஆனால் அழகா பொறக்காததற்கு நான் காரணமில்லையே? அதனால் நான் என் அழகை பற்றி கவலைப்பட்டதேயில்ல’ என்கிற போது எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. வசனம் ‘பசங்க’ பாண்டிராஜ். படத்தில் பீமனாட்டம் நின்று பலம் காட்டுவது இவரது வசனங்களும்தான். டாஸ்மாக்குக்கு ஆதரவாக அண்ணாச்சி பேசுவதெல்லாம் போதையில் உளறப்பட்டவையல்ல. அத்தனையும் சத்தியம். அந்த காட்சியில் தியேட்டர் கதிகலங்கி போகிறது. இந்த படத்தில்தான் முதன்முறையாக இமான் அண்ணாச்சியை நகைச்சுவை நடிகர் என்றே ஒப்புக்கொள்ள முடிகிறது.

சற்றே முற்றிய சிறார்களாக நடித்திருக்கும் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகிய நால்வரும் மண்ணில் புரண்டு, மாணிக்கமாக ஜொலித்திருக்கிறார்கள். எந்த காட்சியிலும் இது நடிப்பு என்பதே தெரியாத துல்லியம்! பெரிய எதிர்காலம் இருக்குடா பசங்களா… படத்தில் வரும் இரண்டு பெண்களில் ஒருவர் ஏ.டி.எம். பேரு சீதா. மற்றொருவர் சாந்தினி. இவர் ஆச்சியின் மகள். ஒரு செடி, ஒரு பூ என்ற வார்த்தையை ஸ்கூல் தோறும் பரவ விடுவார் போலிருக்கிறது சீதா. முதலில் காதலை மறுத்து ரொம்ப பிகு பண்ணி, கடைசியில் தானாக வந்து ஏற்றுக் கொள்வது பெண்ணுக்கேயுரிய மிதப்பு. (சொல்லிக் கொடுத்து செஞ்சாலும் சோக்கா இருக்கும்மா) சாந்தினி சற்றே எடை குறைந்தால், கோடம்பாக்கம் மகிழ்வோடு தராசில் ஏற்றிக் கொள்ளும்.

நாயுடுவாக நடித்திருக்கும் மதுசூதனன் மீது கோபம் வரவில்லை. ஒரு அனுதாபமே வருகிறது. மிரள வைக்கும் நடிப்பால் பல யூஷுவல் வில்லன்களை வீட்டுக்கு அனுப்புவார் இனிமேல். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனை மயில் கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் மில்டன். அவர் ஸ்கிரினில் வந்தாலே மனசு பதற பதற பஞ்சர் ஆகிறது. ஒளிப்பதிவாளர் இளவரசு நடிகரானது மாதிரிதான் இனி விஜய் முருகனின் நிலைமையும். வெல்கம்…..

அவ்வளவு பெரிய மார்க்கெட்டில் அசால்டாக புகுந்து புறப்பட்டு புழுதி கிளப்புகிறது விஜய் மில்ட்டனின் கேமிரா. அது சாதாரண வொர்க் இல்லை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் உணர்த்துகிறார் அவர். அருணகிரியின் இசையில் கானா பாடல்களில் ஆதிக்கம். பின்னணி இசையை இன்னும் அனுபவசாலி ஒருவர் அமைத்திருக்கலாமோ?

கோயம்பேடு மார்கெட்டின் சந்துபொந்து விபரங்களையும், சராசரி அவலத்தையும் கூட சொல்லியிருக்கலாம். பிற்பாதியின் சினிமாடிக் ஜர்க்கை. பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நாலு பசங்களை அடிக்க நானுறு ஆட்கள் வந்தாலும் அவர்கள் ஜெயிப்பார்களாம். காதலே இல்லாமல் இந்த படத்தை சொல்லியிருக்க முடியாதா என்ன? எங்கோ ஒரு ஊரில் எட்டு ஒன்பது வயசை கூட தொட்டிராத ஒரு குட்டி குழந்தையை நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டு…. என்னாச்சு மில்டன் உங்களுக்கு?

உலக படவிழாக்களில் தலை நிமிர வேண்டிய கோலிசோடாவை உள்ளூர் வியாபாரிகளுக்காக கேஸ் தீர்ந்து போக வைத்திருக்கிறார் விஜய் மில்டன். அந்த வகையில் இது….

‘கேலி’ சோடா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபாகரனின் கம்பீரத்தை காப்பாற்றுமா இந்த சினிமா?

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் கதையை இங்கு படமாக்குகிற துணிச்சல் யாருக்கும் இல்லை. அப்படியிருந்தாலும் அதை சென்சாரில் காட்டி சேதமில்லாமல் வெளியே எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை...

Close