சிங்கம் 2 – விமர்சனம்

காக்கி சட்டையில் கரியை தடவியே பழக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சாமியையும், சிங்கத்தையும் காட்டி, போலீஸ் ‘மெடல்’ குத்திக் கொண்டு போவதில் வல்லவர் ஹரி. இதற்கு முன்பு வந்த போலீஸ் படங்களில் சில, டிபார்ட்மென்ட்டுக்கு மெடல் குத்துகிறேன் பேர்வழி என்று ரசிகர்களின் குடல்களை குத்திவிட்டு போன அவஸ்தையையெல்லாம் அதிவேகத்தில் மறக்கடிக்கிறது ஹரி சூர்யாவின் கம்பீர கூட்டணி.

முதல் பார்ட் பார்க்காதவர்களை கூட இந்த செகன்ட் பார்ட்டில் தன்னை பொறுத்திக் கொள்கிற அளவுக்கு திரைக்கதையும், பரபரப்பும் நிலவுவதால், சூர்யாவின் வீச்சரிவாள் மீசைக்கு மூன்றாவது முறையும் ஆயுள் கூட்டப்படலாம். (தேர்ட் பார்ட் எப்போ ஹரி?)

டைட்டில் ஓடும்போதே முந்தைய சிங்கத்திற்கும் இப்போதைய சிங்கத்திற்கும் முடிச்சு போட்டு விடுகிறார் டைரக்டர். எடுத்த எடுப்பிலேயே கதை சூடு பிடித்துக் கொள்கிறது. கடலோர பகுதிகளில் பிரவுன் சுகர் கடத்தும் லோக்கல் பெரிய மனிதர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் இன்டர்நேஷனல் கடத்தல் மன்னனையும் கண்டுபிடிக்கிறார் சூர்யா. இத்தனைக்கும் இவர் ஒரு என்சிசி வாத்தியார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு வந்து இவர் பணியாற்றுவது எதற்காக என்பதையெல்லாம் ரசிகர்களுக்கு விளக்கும் டைரக்டர், இவருக்காக காத்திருக்கும் அனுஷ்காவையும் அவ்வப்போது நமக்கு காட்டி விடுகிறார்.

அனுஷ்கா, போன சிங்கத்திலிருந்தே இந்த துரைசிங்கத்தை ஃபாலோ பண்ணும் எதிர்கால மனைவி. இது போக இவரது ஸ்கூலில் படிக்கும் ஹன்சிகாவுக்கு துரைசிங்கத்தின் மீது காதல் வர, நமக்கு முறையே இரண்டு டூயட்டுகள் கிடைக்கின்றன. ஒரு விறுவிறு திரைக்கதைக்கு காதலோ, நகைச்சுவையோ பெரிய முக்கியமில்லை, அதிரடியான சம்பவங்கள் இருந்தால் போதும் என்பதை இதில் நிரூபிக்கிறார் ஹரி. சங்கிலிப் பின்னல் போல சடசடவென நகர்கிறது கதை. இடையே வரும் அனுஷ்காவும், ஹன்சிகாவும் வேகமான கதையை டிஸ்ட்ரப் பண்ணுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது சமயங்களில்.

நெடுங்காலமாக வெயிட் பண்ணும் அனுஷ்காவை கரம் பிடித்து, லாக்கப்பில் இருந்து தப்ப விடப்பட்ட இன்டர்நேஷனல் கிரிமினல் டேனியை தென் ஆப்பிரிக்காவுக்கே சென்று பிடித்து, என சிங்கம் ரெண்டின் பாய்ச்சல் செம செம…

பொதுவாகவே காக்கி சட்டை கம்பீரத்தை கொடுக்கும். இதில் சூர்யாவும் முறுக்கிக் கொண்டு திரிகிறாரா? ‘ஃப்ரியா இருந்தா ஒரு மாசம் ட்யூட்டி பார்க்கலாம் வர்றீங்களா?’ என்று டிபார்ட்மென்ட் உயரதிகாரிகளே கேட்கிற அளவுக்கு கேரக்டரோடு நச்சென ஒட்டிக் கொள்கிறார் சூர்யா. சரியான தருணத்தில் அவர் மீண்டும் சார்ஜ் ஏற்றுக் கொள்கிற காட்சி சிலிர்பூட்டுகிறது. அனுஷ்கா, ஹன்சிகா இருவரையுமே சற்று நாகரிகத்தோடு அப்ரோச் செய்திருக்கிறது இவரது உடல்மொழி. அதிகாரி கேரக்டர் என்பதாலா, அல்லது இனிமே அப்படிதானா சூர்யா?

கல்யாண வயசு கடந்து கொண்டே போகிறது என்பதை படத்திற்காக முகத்தில் காட்டினாரா, அல்லது நிஜமே அதுதானா தெரியவில்லை. அனுஷ்காவின் அழகில் சில மாற்று குறைந்திருக்கிறது. கவனமா கவனிங்க அனுஷ்க்…

ஹன்சிகாவையெல்லாம் ஸ்கூல் பெண்ணாக நினைத்துப் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். யூனிபார்மை மீறிக் கொண்டு நிற்கிறது அவரது வயசு. கடைசியில் ஹன்சிகாவுக்கு ஏற்பட்ட முடிவு எதிர்பாராத அதிர்ச்சியும் கூட.

‘வாழைக்காய பார்த்து சீவு. சேர்த்து வச்சு சீவிடப்போற…’ வெண்ணிறாடை மூர்த்தியின் நோய். சந்தானத்தையும் பிடித்துக் கொண்டு ஆட்டோ ஆட்டென ஆட்டினாலும், அதை லபக்கென புரிந்து கொண்டு அலம்பல் பண்ணுகிறது தியேட்டர். நல்லவேளை… படத்தில் ஒரு சந்தானம் போதும் என நினைத்திருக்கிறார் லேட் என்ட்ரி விவேக். சற்று அடக்கி வாசித்திருக்கிறது இவரது நாக்கு.

இது ஒரு மசாலா படம் என்பதற்காக அரைத்த மாவையே அரைத்து எரிச்சலு£ட்டாமல் மூளையை நிறையவே கசக்கியிருக்கிறது ஹரிக்குழு. போலீஸ் மூளை எப்படியெல்லாம் யோசிக்கும் என்பதற்கு கலவர கும்பலுக்கு நீலக்கலர் தண்ணீர் பீய்ச்சுகிற காட்சியும், அதை தொடர்ந்து வரும் (லோக்கல்) ஜாலியன் வாலாபாக் காட்சியுமே நல்ல உதாரணம்.

எப்பவோ கடலுக்குள் இறக்கப்பட்ட பிரேதத்தை மீண்டும் மூழ்கி எடுத்து, ராஜேந்திரனுக்கு கொக்கிப் போடும் அந்த காட்சியும் அல்டிமேட்!

தமிழ்சினிமா பார்த்திராத ஒரு வில்லனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஹரி. ஹாலிவுட் நடிகர் டேனிதான் அவர். அவ்வளவு பெரிய உருவத்தை சூர்யா பந்தாடுகிறார் என்பதை கூட நம்ப வைக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர்! தென்னாப்பிரிக்காவின் துரத்தல்களுக்கு நடுவே ஒரு நையாண்டி…. சிதறி ஓடும் வில்லன்கள் தலையில் ஒரு பாட்டிலை எறிந்து பின் மண்டையை பிளக்கிறார் சூர்யா. ‘வாவ்… இட்ஸ் இண்டியன் ஸ்டைல்’ என்கிறார் அந்த ஊர் போலீஸ்காரர்!

இசை தேவி ஸ்ரீ பிரசாத். ஹரி படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது மெலடி இருக்கும். அதுவும் வருஷம் முழுக்க கேட்டு கேட்டு இன்புறுகிற மாதிரி… ஆனால் இந்த படம் அடிதடி ரகம் என்பதால் இசையையும் அதே ரகத்தில் அமைக்க வேண்டுமா என்ன?

ஏற்கனவே வேகமான படம். இதில் மொத்த படத்தையும் டிவிடி பிளேயரில் பார்த்த மாதிரி ஃபார்ஸ்ட் ஃபார்வேடு பட்டனை அமுக்கிக் கொண்டேயிருக்கிறார் ஹரி.

பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ் அகடமியும் கூட போற்ற வேண்டிய படம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

எடை மிஷின்ல ஏறி நின்றால், 'தயவு செஞ்சு கூட்டமா நிக்காதீங்க' என்று சீட்டு வருகிற அளவுக்கு, அவனவனுக்கு கவலைகளும், கஷ்டங்களும்! தியேட்டருக்குள் நுழையும்போது கவலையையும் சேர்த்துக் கொண்டு...

Close