தலைமுறைகள் விமர்சனம்

கொஞ்சம் கொஞ்சமாக கருவாடாகிக் கொண்டிருக்கிற தலைமுறைகளுக்கு, நீச்சலின் சுகத்தை நினைவுபடுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ‘எல்லாம் போச்சே’ என்று கவலைகொள்கிற ஒரு கிழவனின் ஆயாசத்தையும், இனிமேலும் போக விடக்கூடாது என்கிற அவசியத்தையும், ஒரு சேர சொல்கிற யுக்தியில் நெஞ்சம் நிறைகிறார் இந்த தலைமுறை தாண்டிய கலைஞன். அடியெடுத்து நடக்கக் கூட முடியாத இந்த மனிதரின் படம், பல ஈர நெஞ்சங்களை அவரது அடிபற்றி நடக்க வைக்கும். ஏனென்றால் இது சினிமா அல்ல. சினிமா போலிருக்கும் உண்மை.

காதலித்து திருமணம் செய்து கொண்ட மகன் சசியை பற்றி நினைத்துக் கூட பார்க்க விரும்பாத வீம்புக்கிழவனாய் பாலுமகேந்திரா. மகள் வயிற்று பேரப்பிள்ளைகளின் பெயருக்கு பின்னே பிள்ளைமாரை சேர்த்துக் கொள்ள வைக்கிற அளவுக்கு ஜாதி வெறி கொண்ட மனிதர். கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மகன் அப்பாவை விட்டுவிட்டு நகரத்திற்கே நகர்ந்துவிட, அடங்கா பிடிவாதத்துடன் அந்த பெரிய வீட்டில் உலா வருகிறார்கள் பாலுவும் அவரது பிடிவாதமும். திடீரென ஸ்டோக் வருகிறது அவருக்கு. அதுவும் இரண்டு மாதம் கழித்துதான் தெரிகிறது மகனுக்கு. கிராமத்திற்கு திரும்பி வரும் மகன் பார்ப்பது அதே பிடிவாதக்கார கிழவனைதான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிடிவாதம் தளர்ந்து, அவருக்குள்ளிருக்கும் மனிதனை மீட்டெடுக்கிறான் பேரக்குழந்தை. அவன் வளர்ந்து பெரியவனாகி தனது தாத்தாவை நினைத்துப் பார்ப்பதாக முடிகிறது படம். தாத்தாவின் விரல் பிடித்து நடந்த ஒவ்வொரு பேரனையும் உலுக்கி எடுக்கிறார் இந்த அஞ்சாம்ப்பு தமிழ் வாத்தியார்.

காலம் டிஜிட்டலுக்கு மாறினாலும், யதார்த்த வெளிச்சங்களை இழுத்து வந்து பூட்டுவதில் இப்போதும் கைநேர்த்தி குறையவில்லை பாலுமகேந்திராவுக்கு. ஒரு நடிகராக அவரை பார்க்கும்போது சிலிர்ப்பதும் நிஜம். தனது பேரன் என்றே அறியாமல் ‘யார்றா நீ…’ என்று அதிகாரமாக துவங்கி, ‘ஐயோ ஐயோ…’ என்று முகத்தில் அறைந்து கொண்டு அவனை அணைத்துக் கொள்கையில் கண்ணீர் விடாத ரசிகன் இருந்தால் அவனை வாசன் ஐ கேரில் சேர்க்கலாம். தாத்தாவும் பேரனும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துகளுக்கும் பஞ்சமில்லை. நெல்லில் அ வன்னாவை விரல் பிடித்து சொல்லிக் கொடுக்கும் தாத்தா அதற்கப்புறம் அவன் அ போடும் ஸ்டைலை கண்டு அதிர்கிறார் என்றால், அடுத்த காட்சியிலேயே நம்மை அதிர வைக்கிறார் அதே வாத்தியார். ரிவர்னா…? என்று கேட்கும் பேரனிடம், எதையோ சொல்ல வந்து இயலாமல், ‘போய் ஒங்கம்மாட்ட கேள்றா’ என்று பத்திவிடுகிற காட்சியில் இங்கிலீஷ் எமனின் கோரமுகம் தெரிகிறது.

தாத்தாக்கள் வரிசையாக போய் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து தமிழும், கிராமமும் கூட போய் கொண்டேயிருக்கிறது என்கிற கவலையை மிக நேர்த்தியாக புரிய வைக்கிறது பாலுமகேந்திராவின் நடிப்பு. அவர் இனிமேல் நடிக்காமலிருந்தால் இந்த சிவசங்கரன் பிள்ளை அப்படியே எல்லார் மனசிலேயும் இருப்பார். அவரை அழிக்க இன்னொரு கேரக்டர் வேறு எந்த பட ரூபத்திலும் வர வேண்டாம். ப்ளீஸ் பாலுமகேந்திரா.

கெஸ்ட் அப்பியரன்ஸ், இயக்குனர் சசிகுமார்! அதிக வசனங்கள் இல்லை. ஆனால் அந்த நிமிடங்களில் அவர் முகம் சொல்லும் விஷயங்கள் ஓராயிரம். இந்த படத்தை இவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். தலைமுறை தாண்டிய புண்ணியம் உங்களுக்கு.

பேரனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஸ்ரீகாந்த் அழகோ அழகு. நடிப்பு? அது அந்த அழகையும் தாண்டிய அழகு. ஒரு கிராமத்தையும் குயில் காக்கைகளின் ஒலியையும் கூட அவன் முதன் முறையாக அனுபவிக்கிற எக்ஸ்பிரஷன்… கிரேட்! அவன் கேட்கும் ‘தாத்தா நீயும் செத்துருவியா?’வுக்கு கலங்காதவர்கள் இருக்க முடியாது. இவன் மட்டுமல்ல, படத்தில் நடித்திருக்கும் எல்லா கேரக்டர்களுமே மில்லி மீட்டர் தாண்டாமல் நடித்து மனசில் இடம்பிடிக்கிறார்கள். மகனாக நடித்திருக்கும் சசியும், அவரது மனைவி ரம்யா ஷங்கரும் நன்றாக தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்கிறார்கள். மக்களுக்கு புரியாது என்பதற்காக அவர்களை தமிழ் பேச விடாத பாலுமகேந்திரா, அக்கம் பக்கத்து வீடுகளின் அவலத்தைதான் சொல்கிறார் இப்படி.

இந்த படத்தை ஒரு தோளில் பாலுமகேந்திராவின் கை வண்ணமும், கதை வண்ணமும் சுமந்திருக்கிறது என்றால் மற்றொரு தோளில் இளையராஜாவே சுமக்கிறார். ஒரு சிற்றோடை போல படம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறது இசை. சில நேரங்களில் கடந்து செல்லும் ஆட்டுக்குட்டிகளுக்காக அந்த சிற்றோடை ஓரிடத்தில் நின்றால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது அவர் இசைக்காத தருணங்கள்.

காலத்தின் கடைசி படிக்கட்டுகளில் நிற்பதாய் ஒரு அச்சம் படர்ந்திருக்கிறது பாலுமகேந்திராவுக்கு. தன்னைப்போலவே கடைசி படிக்கட்டுகளில் நிற்கும் தமிழுக்காகவும் கவலைப்பட்டிருக்கிறார். உங்கள் அச்சம் எங்களுக்கு இல்லை. நீங்கள் இருவருமே இன்னும் இன்னும் வாழ்வீர்கள் பாலு சார்….

-ஆர்.எஸ்.அந்தணன்

 

Read previous post:
முதல்வரின் கெடுபிடிக்குள் சென்சார் அமைப்பு?

முன்பு எப்போதும் இல்லாதளவுக்கு சென்சார் ஆபிசர்கள் கெடுபிடி காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தில் எங்காவது சிகரெட் பிடிக்கிற மாதிரி காட்சியோ, தண்ணியடிப்பது போல காட்சியோ வந்தால் அவ்வளவுதான். முறுக்கிக்...

Close