நம்ம கிராமம் விமர்சனம்

வத்த குழம்புன்னா அப்பளம், வடை என்றால் பாயாசமும் பக்கத்துல…. என்று மாறாத ‘ஸ்டமக் தர்ம சித்தாந்தம்’ போல, தேசிய விருது பெற்ற படங்கள் என்றால் அதற்கான காம்பினேஷனாக சில கொட்டாவிகளாவது வரணும். அந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறது இந்தப் படம். இத்தனைக்கும் கதையும், அது நடக்கும் காலமும் அரத பழசு. 1938. பால்ய விவாகம், இளம் விதவை, சுதந்திர கோஷம் என்று டிராவல் ஆகிறார்கள் கதை மாந்தர்கள். ஆனால் அந்த கதையிலும் திரைக்கதையை வேகமாக படைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிற தயாரிப்பாளரும், இயக்குனருமான மோகன் சர்மாவுக்கு முதல் பாராட்டுகள்.

பாலக்காடு பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கிறது கதை. ஒரு அய்யங்கார் வீடும், ஆச்சாரம் மாறாத தெருவும்தான் முக்கால்வாசி ரீல்களை முழுங்குகிறது. அதற்குள் எதையெல்லாம் சொன்னால் மனம் நிலைக்குமோ, அதை செய்திருக்கிறார் சர்மா. இவரது தங்கை மகள் ஷம்விருதா குழந்தையாக இருக்கும்போதே அவளை பக்கத்து கிராமத்திலிருக்கும் ஒரு சிறுவனுக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்து போகிற வழியிலேயே புது மாப்பிள்ளை இறந்து போக, இனிமே நீ ஸ்கூலுக்கு போகக் கூடாது. தெருவுல விளையாடக் கூடாது. பாட்டுக் கிளாசுக்கு போகக்கூடாது. ரெண்டாம் கட்டுல உட்கார்ந்துரணும் என்கிற அடுக்கடுக்கான கண்டிஷன்களை போடுகிறது குடும்பம். ஏனென்றே தெரியாமல் வெயிட் சுமக்க ஆரம்பிக்கிறது சிட்டுக்குருவி.

இந்த கொடுமையில் இளம் விதவைன்னா அவளுக்கு மொட்டை போட வேண்டாமோ என்று உசுப்பேற்றுகிறது சுற்றுபுற சூழ்நிலைகள். இதற்கிடையில் பக்கத்தாத்திலிருந்து காதில் விழும் சங்கீதத்தையே புழக்கடையில் உட்கார்ந்து கேட்டு பொழுது போக்குகிறாள் ஷம்விருதா. அதே வீட்டில் வளரும் கண்ணன், சர்மாவின் மகன்! உருப்படாது. தேறாது என்று கூறியே வளர்க்கப்படும் அவனுக்கு தேசியத்தின் மீது தீராக்காதல். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கிற அந்த நாளில், ஷம்விருதாவுக்கு மொட்டையடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார் சர்மா.

அதே நாளில் ஷம்விருதாவுக்கு விடுதலை கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறான் கண்ணன். அதாவது அவளை மறுமணம் புரிந்து கொள்வது என்று! இவர்கள் நினைத்தது நடந்ததா என்பதுதான் உள்ளத்தை உருக்கும் க்ளைமாக்ஸ். அதிலும் தனது பேத்தியின் தலையை மொட்டையடித்துவிடக் கூடாது என்று நினைக்கும் பாட்டி சுகுமாரி, ஒவ்வொரு வரட்டியாக அடுக்கி அதில் தானே ஏறி படுத்துக் கொண்டு பற்ற வைத்துக் கொள்கிற காட்சியிருக்கிறதே… மனதில் எழும் தீ ஜ்வாலை அடங்க வெகு நேரம் ஆகிறது பாட்டி. இந்த அழுத்தமான கேரக்டரை அசால்ட்டாக சுமந்திருக்கிறார் கேரளாவின் பழம்பெரும் நடிகை சுகுமாரி.

போகிற போக்கில் அசால்ட்டாக புரட்சியை விதைத்துவிட்டு போகும் பைத்தியக்கார பெண் ஒருத்தியும் இருக்கிறாள் படத்தில். அவள் பேசுகிற போதெல்லாம் தியேட்டர் கொள்ளாமல் கைதட்டல்கள். அதிலும் ‘மாஸ்டர் அக்குளுக்கும், பாட்டி மொட்டைக்கும் ஒரே கத்தி’ என்று கூறிக் கொண்டே நடக்கும் போது, எவ்வளவு அழுத்தமான மெசேஜ் ஒன்றை போகிற போக்கில் போட்டு உடைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர் சொல்லும் இன்னொரு டயலாக்குக்கும் கைதட்டி மாய்கிறது தியேட்டர். மாஸ்டர் பேனாவுல மை தீர்ந்து போச்சு! மாஸ்டர் பேனாவுல மை தீர்ந்து போச்சு!

படத்தில் நடித்திருக்கும் எல்லாருமே அவரவர் பங்கை அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த ஒய்.ஜி.மகேந்திரன் கேரக்டர் மட்டும் ஏற்கனவே அவர் மீதிருக்கும் எரிச்சல் இமேஜின் மீது, இன்னும் கொஞ்சம் வெறியேற்றிவிட்டு போகிறது.

‘ஓடிப்போன அவ புருஷன் திரும்பி வந்துட்டான்னா அவ ஏன் இப்படி வப்பாட்டியா இருக்கணும்?’ என்றெல்லாம் நியாயம் பேசுகிறார்கள். (அப்பவே அப்படி இருந்திருக்கீங்களா கண்ணுங்களா?) அப்பா ஊர் மேய்கிறார் என்று தெரிந்தும் அவரை எதிர்த்து பேசாத மகன், மனைவி என்று கட்டுக்கோப்பான கலாச்சார அலறல்களையும் வசனங்கள் போட்டு தாக்கு தாக்கென தாக்குகிறது. அந்த ஓடிப்போன புருஷனை தனது கொழுந்தியாளுக்காக தேடி பர்மாவுக்கே போய் வரும் அழுத்தமான கேரக்டரில் நெடுமுடி வேணு. கேரளாவின் கூத்து ஒன்றை அவர் அருமையாக நிகழ்த்திக் காட்டுவதும் அவரது நடிப்புக்கு பெரும் சான்றாக அமைந்திருக்கிறது.

இப்படி நடிகர் நடிகைகள் ஒரு புறம் அசர வைக்கிறார்கள் என்றால் படத்தின் கலை இயக்குனர் பாவாவும், ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டும் ரசனையோடு பணியாற்றியிருக்கிறார்கள். இசை- மிக மிக அலாதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அந்த பின்னணி இசை மனசை அள்ளிக் கொண்டு போகிறது. சபாஷ் பி.என்.சுந்தரம்.

நம்ம கிராமம் இப்படியெல்லாமா இருந்திருக்கு? என்று ஆச்சர்யப்படவும், கவலைப்படவுமான ஒரு பதிவு. சுதந்திர தினத்தன்று தாங்கள் மட்டுமல்ல, ஒரு சோடி கிளிகளையும் பறக்க விடும் அழகு, அழகோ அழகுதான்.

அடேயப்பா… எத்தனை பழமைகளை கடந்து வந்திருக்கிறோம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. suramaniasiva... says

    anna arumai…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
veeram press meet

[nggallery id=104]

Close