பணம் இருக்கிறவன்தான் ஒய் திஸ் கொலை வெறி பண்ணணுமா..? நாங்க பண்ணக்கூடாதா?

எல்லாருக்கும் எண்ட் கார்டு போட்டப்புறம் போடுற மியூசிக் சார், நம்ம லைப்புக்கு பிகினிங், டைட்டில் கார்டு போடுமான்னு ஒரு நப்பாசை. ஆசை ஆசையா வேலைய செஞ்சிகிட்டு இருக்கோம் சார். எங்களையும் கொஞ்சம் ஜனங்களுக்கு காமிங்க சார்\ என்று ஒரு போன் வந்தது. என்னது எண்டு கார்டு…? டைட்டில் கார்டா? என்று யோசித்துக் கொண்டே, எங்கே வரணும்? என்று கேட்டோம். நம்ம புளியந்தோப்பு லெப்ட்ல திரும்பினா ஒரு காபி ஷாப், அங்கே வந்துடுங்க சார் என்றார். நேரம் சொன்னார். கிளம்பினோம். போகும் வழியெல்லாம் ஒரே குழப்பம்.. புளியந்தோப்புல காபி ஷாப்பா…அப்துல்கலாம் 2020ல தானே, இந்தியா வல்லரசாகணும் ஆசைப்பட்டார், அவரோட ஆசை இவ்வளவு சீக்கிரம் நினைவாயிடுச்சா…சொன்ன இடம் சேர்ந்தோம். கார்ப்பரேஷன்,கவுன்சிலர்,எம்.எல்.ஏ இவர்கள் எல்லாம் இருக்கிறார்களா? என்பது போல் இருக்கிறது புளியந்தோப்பு.

காபி ஷாப்பை தேடியதில் இரண்டு விஷயம் தெரிந்தது ஒன்று அவர்கள் சொன்னது போல் காபி ஷாப் இல்லை, சுகுமாறன் நாயர் டீ (கடை)ஷாப். இன்னொன்று கொஞ்சம் நெடுக்கமாக (சுருக்கமாக என்பதற்கு எதிர்சொல்) சொல்ல வேண்டும் என்றால், இயக்குனர் பாலா படத்தின் லொகேஷன் மாதிரி இருந்தது புளியந்தோப்பு.

அண்ணே என் பேரு சுரேஷ், சினிமா குருப் டான்ஸ்ல ஆட்றேன். நாமளும் நாலு பேருக்குத் தெரியணும். சினிமால மாஸ்ட்ரா ஆகணும். ஏதாவது டிபரண்ட்டா பண்ணி சாதிக்கணும்ணே. அதுக்காக தான் இதை பண்றோம்ணே என்றார்.

.என்ன பண்றீங்க?

போன்ல சொன்னதை மறந்துட்டீங்களேணே… மனுசனோட எண்டு கார்டுக்குப் பிறகு..வாழ்க்கையோட கடைசி பயணம் அப்போ ஒரு மியூசிக் போடுவாங்க பாருங்க, சென்னையோட பிராண்ட் மியூசிக். சோகத்திலேயும்.. குத்து குத்துன்னு குத்துவாங்க…அதான்ணே கான்செப்ட். அதுல தனி ஆவர்த்தனம் மாதிரி இடை இடையில ஒத்த அடி வரும். அந்த ஒத்த அடிக்குள்ள, கவிதை மாதிரி சின்ன சின்ன கதையை சொல்லி, பாட்டு முழுக்க அதகளம் தான்.களம் எங்க ஏரியா. எல்லாம் ட்ரெயிண்டு டான்சர்ஸ். ஒரு 20 சின்ன பசங்க, வயசுப் பசங்க ஒரு 10 ஜோடி, 6 பீ மேல் டான்சர்ஸ், ஏன் ஒரு ஜோடி திருநங்கை சகோதரிகளும் எங்க கூட ஆடுறாங்க.

களை கட்டிய சூட்டிங்கை பார்த்தோம். ஓரே துள்ளலாக இருந்தது. கொஞ்சம் ஹாட்டாகவும் இருந்தது.

சூடாக டீ வந்தது.

ஒரு வாரம் 5டி கேமிரால சூட் பண்ணி இருக்கோம்.

சரி செலவு நிறைய ஆகி இருக்குமே?

ஆமாண்ணே… நான் குருப் டான்ஸ் ஆடினதுல வந்த காசை சேர்த்து வச்சி… சேர்த்து வச்சி…. எடுத்திருக்கேன் என்றார் சுரேஷ்.

சரி சூட் பண்ணதை என்ன பண்ணப்போறீங்க?

கூட்டதிலிருந்து ஒரு குரல் வந்தது, தலை, இதை க்யூ ட்யூப்ல போட்டு பேமஸ் ஆகணும்.

ஐயோ ஊரு பேரை கெடுக்கிறானே(?!), க்யூ ட்யூப் இல்லைடா யூ டியூப். தொடர்ந்தார் சுரேஷ். பணம் இருக்கிறவன் தான் ஒய் திஸ் கொலை வெறி பண்ணணுமா.. நாம பண்ணக்கூடாதான்னு ஒரு ஏக்கம். பண்ணிட்டோம்.

பேமாசியிட்டா சினிமா, டிவி புரோகிராம், ஸ்டேஜ் புரோகிராம்…உலக சுற்றுப்பயணம். பத்திரிகை பேட்டி.. ஒன்னு விட்றதா இல்லை தலை. விரைவில் ஆல்பம் ரிலீஸ். எங்களை உங்க பத்திரிகையில போட்டு சின்னதா ஒரு சீன் காமிங்க தலை. நாங்களும் வளருவோம்.

எங்க இருந்தாலும் நெருப்பு… நெருப்பு தானே…வளருங்க.

ஆமாம் கேட்க மறந்துட்டேன். உங்க குழு பேரு என்ன

‘தர்ர்ரத்தா’

நல்லா வைக்கிறாங்கய்யா பேரு.

பின் குறிப்பு : ஒத்தை அடி எதுன்னு தெரியாதவர்களுக்கு, ஜித்தன் படத்துல ஆ முதல் அக்கு தானடா ன்னு ஒரு குத்து பாட்டு வரும். அந்த பாட்டு வரிகளுக்கு இடையில, பிஜிஎம் ல ஒரு லோக்கல் இண்ஸ்ட்ருமெண்ட், பாரின் ஸ்டைல்ல வருமே அதே தான். ஆனா அது ஒரு வகை ஒத்த..இன்னும் பல வகை ஒத்த அடி இருக்கு…பாருங்க என்று சிறுகுறிப்பு தருகிறார்கள் சுரேஷின் நண்பர்கள் தேனை ரமேசும், ஸ்டண்ட் ராஜாவும்.

ஸ்டில் டீசர் இதோ…ட்ரெயிலர் மிக விரைவில்…..

-செந்தில்.ஆர்.பி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
INDRAYA CINEMA AUDIO LAUNCH

[nggallery id=120]

Close