பனிவிழும் மலர் வனம் / விமர்சனம்

0

ஒரு காதல் ஜோடிக்கு பனிவிழும் மலர் வனமாக இருக்க வேண்டிய காடு, ‘சனி’ விழும் மலர்வனமாகிறது. எப்படி? என்பதுதான் கதை. அழுக்கு பரட்டைகள், அல்லது அல்ட்ரா அழகுகள் என்று தமிழ்சினிமா சுற்றி சுற்றி வரும் யூஷுவல் கதையல்ல இது. அதற்காகவே இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட்டை பாராட்டலாம்.

பேஸ்புக் மூலம் காதலில் விழும் இளசுகள் இரண்டுக்கும் வீட்டில் செம அடி விழுகிறது. ‘இந்த அப்பா அம்மாக்களே இப்படிதான். நம்ம காதலை புரிஞ்சுக்க மாட்டாங்க. வா… ஓடிப்போயிரலாம்’ என்று திட்டமிட்டு கிளம்புகிற அவர்கள் இருவரும், தாய்மையையும் அன்பையும் புரிந்து கொள்வதுதான் க்ளைமாக்ஸ். இந்த நீதியை இயக்குனர் சொல்லியிருக்கிற விதம் இருக்கே, அதுதான் தண்ணியில ஊற வச்சு தரும் பிரம்படியோ?

படத்தின் ஆரம்ப காட்சிகள் சரியான மொக்கை. அப்படியே இன்டர்வெல் வரைக்கும் ‘ஏண்டா வந்தோம்’ எபெஃக்ட். ஏதோவொரு பஸ்சில் ஏறி எங்காவது போய் வாழ்வோம் என்று கிளம்புகிற ஜோடி தேனி பஸ்சில் ஏறி மேகமலை போவது வரைக்கும் கூட சுவாரஸ்யம் இல்லை. ஆனால் அங்கு போய் ஒரு புலியிடம் சிக்கிக் கொள்கிறார்களே, அங்கு ஆரம்பிக்கிறது பதற்றம். அதற்கப்புறம் கால் விரல்களில் எல்லாம் பூரான் ஊறுகிற அளவுக்கு பரபரப்பு.

காட்டில் தனி வீட்டில் வசிக்கும் வர்ஷா, தன் எட்டு வயது மகனை சிரமப்பட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார். கணவர் ஜெயிலுக்கு போன நிலையில் மகனுக்கும் தீராத வியாதி ஒன்று. அதற்காக இரண்டு லட்சம் பணம் சேர்த்து அவனை குணப்படுத்துவதுதான் அவரது லட்சியம். அங்கு போய் சேர்கிறது இந்த ஜோடி. ஏலக்காய் பறிக்கும் வேலையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார்கள் இவர்கள். ஒரு நாள் நள்ளிரவில் மகனுக்கு உடல்நிலை மோசமாக மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். சுற்றி போனால் நாலு மணி நேரம் ஆகும். குறுக்கு வழியில் போனால் ஒரு மணி நேரம்தான். வாங்க இப்படி போகலாம் என்று ஒரு ரூட்டில் போகிற நால்வரும் ஒரு புலியிடம் சிக்கிக் கொள்ள, பாதுகாப்புக்காக ஒரு மரத்தில் ஏறிக் கொள்கிறார்கள். கீழே காத்திருக்கிறது புலி. மேலே குழந்தையை காப்பாற்ற வேண்டிய குடும்பம். எப்படி மீண்டார்கள்? வனத்துறையின் மீட்பு பணி எந்தளவுக்கு சொதப்பல்? இதெல்லாம்தான் கடைசி முக்கால் மணி நேர விறுவிறுப்பு.

இந்த முக்கால் மணி நேரத்திற்காக முந்தைய மணித்துளிகளை இழந்துவிட்டு பொறுமையோடு காத்திருந்தால் மட்டுமே சுவாரஸ்யம். இல்லையேல் கொடுத்த காசுக்கு கொட்டாவிதான் மிச்சம்.

புதுமுக ஜோடிகளில் பொண்ணு ஓ.கே. பையனைதான் எங்கு பிடித்தார்களோ? ஆனால் இவர்கள் இருவருமே டிபார்ட்மென்ட் ஸ்டோர்சில் உடன் வந்திருக்கும் அம்மாவுக்கு தெரியாமல் பேசிக் கொள்கிற விதம் இருக்கே? ஆஹா… அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளாக எடுத்து காண்பித்து அதிலிருக்கும் பெயர்களை வைத்துக் கொண்டே மறுநாள் ஓடிப்போவதற்கு பிளான் போடுகிற அந்த காட்சி கற்பனை வளம். இதற்காகவே டைரக்டருக்கு தனி அப்ளாஸ் தரலாம். அதற்கப்புறம் டைரக்டர் கவர்வது அந்த சிறுவனின் கேரக்டரை உருவாக்கிய விதத்தில். ஓடிப்போன எருமையே தேடுகிற பாவா லட்சுமணனுக்கும் அந்த குழந்தைக்கும் நடக்கிற செல்ல சண்டை நன்றாகவே இருக்கிறது. காடுகளில் வழக்கமான ஒரு வில்லன் கோஷ்டி. அவர்களின் துரத்தல் இவையெல்லாம் யூஷுவல் என்றாலும், நாட்டு நடப்பும் அப்படிதானே இருக்கிறது?

படத்தை இரண்டு மணி நேரம் இழுக்க வேண்டும் என்பதற்காகவே ஏலக்காய்ல என்ன செய்யலாம்? பக்கத்துல இருக்கிற சிவப்பு பழத்தை அப்படியே சாப்பிடலாம்னு ‘ரம்ப’ராமாயண காட்சிகளும் நிறைய.

இதுபோன்ற ஆங்கில படங்கள் நிறைய வந்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிய வைப்போமே என்று முயற்சித்த இந்த படக்குழுவினர் எல்லாருக்கும் பாராட்டுகள். முக்கியமாக கிராபிக்ஸ் கலைஞர்களுக்கு. அந்த புலி நிஜ புலி போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. குட்டிப்புலி கண்ணியில் சிக்கிக் கொண்ட பின்பு ‘குட்டிய விட்டுவிட்டு அது போகாது’ என்று கவலை கொள்ளும் வர்ஷா, தன் குழந்தைக்காக புலியிடம் பலியாகிற அந்த நேரத்திலும், அந்த குட்டிப்புலியை அவிழ்த்துவிடுகிற அவசரத்தை உணர்த்தி தாய்மையின் இயல்பை புரிய வைக்கிறார்.

படத்தில் நிறைய கேள்விகள் இருந்தாலும், இதுபோன்ற முயற்சிகளை பாராட்டி படத்தை ஓட வைப்பதுதான் நல்ல படங்களை உருவாக்க உதவும். எனவே பொருத்தமில்லாத இந்த தலைப்புக்காக பொருத்தருளி தியேட்டருக்கு வாங்க ரசிகர்களே…

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.