பாங்காக் பயண அனுபவங்கள் -2 -ஆர்.எஸ்.அந்தணன்
நம்மல்லாம் நாகரீகம் பார்த்தா நாடு தாங்குமா பாஸ்? என்பதோடு முதல் எபிசோடை முடித்ததாக ஞாபகம். நாகரீகம் பார்த்தா நம்ம தலையில் மொளகாதான் என்பதை நம்மவர்கள் பாங்காக் அதிகாரிகளுக்கு நன்றாகவே கற்று கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இமிகிரேஷனில், ‘தம்பி… துட்டு எவ்ளோ வச்சுருக்க? இங்கே ஓட்டல்ல தின்னுட்டு மாவட்ட முடியாது. அஞ்சு நாள் தங்குறதுக்கு கெப்பாசிட்டி உங்கிட்ட இருக்கா பார்க்கணும்’ என்பது போலவே, ஒரு லேடி அதிகாரி என் மனசுக்குள் புகுந்து பர்சுக்குள் எட்டிப் பார்த்தாள். முகத்தை கர்ண கொடூரமாக வைத்துக் கொண்டு ‘ஷோ மீ யுவர் மணி’ என்றாள்.
நல்லவேளையாக இங்கிருந்தே மாற்றிக் கொண்டு போன அமெரிக்க டாலர்களை அவளிடம் கொத்தாக காட்டினேன். பின்னாலேயே வந்த சதீஷ் துபாய் ரிங்கிட்டுகளால் அவளை திணறடித்தார். நமது மூன்றாவது நண்பரான லண்டன் பார்ட்டியின் முகமும், பாஸ்போர்ட் சொன்ன டிராவல் சங்கதியும் அந்தம்மாவுக்கு திருப்தியாக இருந்திருக்க வேண்டும். அவரிடம் எதுவுமே கேட்காமல் போங்க என்று லேசாக ஸ்மைல் பண்ண, ‘மொதல்ல மாப்பிள்ளைகளை மதிக்க கத்துக்கங்கடி…’ என்று சத்தம் போட்டு தமிழில் புலம்பிவிட்டே வெளியில் வந்தோம் நானும் சதீஷும். நல்லவேளை ஒருத்திக்கும் தமிழ் மாலும் நை.
எல்லா ஏர்போர்ட்டிலும் ட்யூட்டி ஃபிரீ ஷாப் வைத்திருக்கிறார்கள். எதை விற்கிறார்களோ, பாட்டில் பாட்டிலாக ‘அது’ விற்கிறார்கள். வாசலை தாண்டுவதற்கு முன்பே இந்த வசந்த நிலையத்தை தாண்டிதான் போக வேண்டியிருக்கிறது. நெல்பாவெல்லாம் வந்தால், பாங்காக் இமிகிரேஷனும் சரி, ட்யூட்ரி ப்ரியும் சரி, பஞ்சராகியிருக்கும். அந்த பாக்கியம் அவர்களுக்கு எப்படியாவது வாய்க்கட்டும் என்கிற அதிகாலை பிரார்த்தனையை நடத்திக் கொண்டே ட்யூட்டி ஃபிரீயை கடந்தோம்.
சதீஷ், இதே நம்ம ஊரு மாட்டு தாவணியா இருந்திருந்தாலோ, மயிலாடுதுறையா இருந்திருந்தாலோ, சுட சுட டீ கிடைக்கும். காபிக்கும் பஞ்சமிருக்காது… நான் சொல்லி வாய் மூடுவதற்குள் லண்டன் நண்பர் ‘அதா பாருங்க’ என்றார். கொட்டை எழுத்தில் ‘இண்டியன் காபி’ என்று எழுதப்பட்டிருக்க, ஏர்போர்ட்டின் இன்முக ராட்சசியாக எங்களை வளைக்க தயாராக இருந்தது அந்த மிகச்சிறிய காபிக் கடை. நம்ம பிதாமகன் மாமி மாதிரியே ‘இது ப்ருடா அம்பி’ என்று மட்டும்தான் அந்த தாய்லாந்து அழகி சொல்லவில்லை. மற்றபடி, நம்ம ஊர் டிகாஷன் காபிக்கு கொஞ்சம் குறை வைக்கவில்லை பாங்காக் மாமி.
ராம் ஆளனுப்ப தாமதமானதையும், நாங்கள் காத்திருந்ததையும் கடந்த எபிசோடிலேயே சொல்லியாகிவிட்டது. ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு, ஜம்மென்று நம் முன் வந்து நின்ற தாய் இளைஞன், ‘வணக்கம்’ என்றான் இரு கரம் கூப்பி. முகத்தில் அவ்வளவு அதிகாலையிலும் ஈஸ்ட்டுகள் நிறைந்த இட்லி மாவு போல பொங்கிக் கொண்டு நின்றது சிரிப்பு. ‘ஸாரி.. என்னிடம் சொல்லப்பட்ட நேரம் இதுதான். சரியா வந்துட்டேன்’ என்றான் அவன். நமது லக்கேஜ்களை டிராலியின் உதவியுடன் அவனே அந்த ஜம் ஜம் வேனில் ஏற்றிக் கொண்டு டிரைவிங் சீட்டில் அமர்ந்தான். வண்டி அந்த நீண்ட நெடூஞ்சாலையில் மிதந்தோட, யேய்ய்ய்யப்பா… என்னங்கடா இன்னொரு தாய்லாந்தை அப்படியே மேலேயும் கட்டி வச்சுருக்கானுக… என்று வியக்க ஆரம்பித்தேன். அந்தளவுக்கு அந்த சாலையின் மேலேயே நம்மை தொடர்கின்றன மேம்பாலங்கள். எங்கு திரும்பினாலும் நமது தலைக்கு மேலே இன்னொரு சாலை போவது ஆச்சர்யம்தான்.
சார், போன் வச்சுருந்தா இந்த ஊர் சிம் வாங்கி போட்டுக்கோங்க, என்று கூறியபடியே ஒரு கடையில் வண்டியை நிறுத்தினான் பையன். செவன் இலவன் என்று சொல்லக்கூடிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் அது. எந்த நேரத்திலும் திறந்திருக்கும் போல. நம் ஊர் போல எவ்வித பார்மாலிடியும் இல்லை. அட்ரஸ், வெரிபிக்கேஷன், போட்டோ, புள்ளக்குட்டி விபரங்கள் என்று எதையும் கேட்காமல் நமது கையில் அந்த பில் அழகி ஒரு சிம்கார்ட்டை திணிக்க, ‘நீங்களே போட்ருங்க’ என்றோம் அப்பாவியாக.
யா ஷ்யூர்… என்றபடி அவள் சிம்மை உடைக்க, நான் கடையை நோட்டம் விட்டேன். கேஷ் பில் போடும் இயந்திரத்திற்கு அருகிலேயே அடுக்கி வைத்திருக்கிறார்கள் காண்டம்களை. அப்படியே வேறொரு பக்கம் நோட்டம் விட்டால், பயங்கர அதிர்ச்சி. விதவிதமான பிராண்ட் பெயர்களுடன் சரக்குகள். இன்னொரு பக்கம் பிளேபாய் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்க, பக்கத்திலேயே வாஸ்து தொடர்பான புத்தகங்களும் அதே நேர்த்தியோடு அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நம்ம ஊர் கண்ணன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு ஆன்மீக அட்டைப்படத்தில். பிளேபாயை புரட்டினால் அதில் என்ன போட்டோ இருக்குமோ? அதற்குள் சிம், காலுக்கு தயாராகிவிட, ‘வணக்கம்…போலாமா’ என்றான் நமது சாரதி.
அடுத்து ஓட்டல்தான்….
(சுற்றுலா தொடரும்)
Nice anthanan…..
Ghazali Ghazali எழுத்து நடை மிக அருமை. சுஜாதா எழுத்தைப் படித்து பிரமித்தவர்களுக்கு உங்கள் எ.ந. ரொம்பப் பிடிக்கும். வைப்பாட்டியை மேலே வை (Keep It Up என்பதின் தமிழாக்கம்!?)
rcJeyanthan Jesudoss
2:46 PM (8 hours ago)
to me
superji
//துபாய் ரிங்கிட்டுகளால் அவளை திணறடித்தார்//
Dubai Dirhams. Malaysia rynkit
Pithamagan Maami illai, Nandha Maami