மத்தாப்பூ விமர்சனம்

பத்த வைக்காத மத்தாப்பூவாக இருக்கிற வரைக்கும் காதலில் ஏதுடா கலர்ஃபுல்? இதைதான் இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் ‘தினந்தோறும்’ நாகராஜ். ‘உம்மம்மா’ உதட்டில் ‘உம்’மை மட்டுமே சுமக்கிற ஹீரோயின் காயத்திரி ஏன் அப்படியானார் என்கிற அதிர்ச்சியை பிளாஷ்பேக்காகவும், அவரை மறுபடியும் சிரிக்க வைக்க துடிக்கும் ஹீரோவின் ஆசையை பேலன்ஸ் பேக்காகவும் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

நெடுங்கால விடுமுறைக்கு பின் கோடம்பாக்கத்தின் கதவை ‘டொக் டொக்’கியிருக்கும் டைரக்டர் நாகராஜுக்கு கதவு திறக்குமா…? ஒரு சின்ன பதற்றத்தோடு காத்திருக்கிறது சக இயக்குனர்கள் கூட்டம். காரணம்… நாகராஜ் என்பவர் வெறும் டைரக்டர் மட்டுமல்ல, ‘நான்தான் முகேஷ், நாலு வருஷமா சரக்கடிச்சேன்’ டைப் ஆளாக இருந்து தப்பி பிழைத்தவர்.

ஓப்பனிங்கில் வில்லன்களின் எலும்பை ஹீரோவை விட்டு நொறுக்க வைத்து க்ளைமாக்ஸ் நெருங்கும்போது அவர்களுக்கு ரீ என்ட்ரி கொடுத்து கணக்கை முடிக்கும் வழக்கமான சினிமாவை எடுக்கவில்லை நாகராஜ். அதற்காகவே இவருக்கு ஒரு ‘ஐயா சரணம்…’ ஆனால் கதை டேக் ஆஃப் ஆவதற்குள், நாம் சீட்டில் உட்கார்ந்தபடியே லேண்ட் ஆகிவிடுவோம் போலிருக்கிறது. நல்லவேளை… அசந்து சாயும் நேரத்தில் கதை வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது.

கண்டதும் காதல் கொள்கிற அளவுக்கு காயத்ரியிடம் என்ன இருக்கிறதோ, படக்கென்று விழுந்துவிடுகிறார் ஹீரோ ஜெயன். மின்னலை போல முகம் காட்டிவிட்டு மறைந்து போய்விடுகிற அவளை தேடித் தவிக்கும்போது மிக சரியாக அவளே ஹீரோவின் வீட்டுக்குள் என்ட்ரியாகிறாள். சகலபல சித்து வேலைகளையும் செய்து பார்த்தாலும், பார்ட்டி அசரணுமே? ம்ஹூம். அவள் ஏன் அப்படியிருக்கா தெரியுமா என்று சித்தி சித்தாரா ஜெயனுக்கு கிளாஸ் எடுக்க, ‘ஃப்பூ இதானா மேட்டர்’ என்று தொடர் சேசிங்கில் இறங்குகிறார் ஹீரோ. அந்த பிளாஷ்பேக் என்ன? காயத்ரி மத்தாப்பூவாக சிரித்தாரா? சிம்பிளாக முடிய வேண்டிய படத்தையும் சீரியஸ்சாக இழுத்து முடிக்கிறார் நாகராஜ்.

படத்தின் ஆகப்பெரிய ஆறுதலே புதுமுகம் ஜெயன்தான். துள்ளலான நடிப்பும், மேனரிசமும், பார்த்தவுடனேயே பிடித்துப் போக வைக்கிறார். ஃபைட் சீன்களில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கே ஆக்ஷன் கட் சொல்கிற அளவுக்கு தேறியிருப்பதும் விசேஷம். காயத்ரியிடம், ‘உன் பிளாஷ்பேக் கேட்டேன். பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல…’ என்று இவர் சொல்கிற போது ஆர்ப்பரித்து அடங்குகிறது தியேட்டர். தொடர்ந்து முயற்சித்தால் இந்த கால கவுதம் கார்த்திக்கின் அந்த காலத்து அப்பா ஸ்டைலை பிடிக்கலாம். முயற்சி பண்ணுங்கோ…

டைரக்டர் காயத்ரியிடம் கதை சொன்னாரா, ‘…காதே’ என்று சொன்னாரா தெரியவில்லை. சிரிக்காதே, பேசாதே, பார்க்காதே, பழகாதே … என்று சொல்லியிருப்பார் போலும். துவக்கத்திலிருந்து கடைசி காட்சிவரை ஒரே ஃபேஸ்கட்டோடு நடமாடுகிறார் அவர். பெத்த அம்மாவே ‘ஆம்பளை வேணும்னா சொல்லியிருக்கலாமே?’ என்று கேட்ட பிறகு பேச்சாவது சிரிப்பாவது. லாஜிக் சரிதான். ஆனால் நமக்கே போரடிக்கிற அளவுக்கு முகத்துல முள் கரண்டியோடு திரியுது பொண்ணு. ஆனால் அந்த பிளாஷ்பேக்கில் கண்கலங்க வைக்கிறது அவருக்கு நேர்ந்த கொடுமை.

படத்தில் ரேணுகா, சித்தாரா, கீதா என்று சமகால அம்மா நடிகைகளின் பர்பாமென்ஸ் குவியல். முதல் இரண்டு பேர் ஓ.கே. ஆனால் கீதா நள்ளிரவிலும் பொலிவான மேக்கப்பும், கலையாத புடவையுமாக நடமாடுவதுதான் ஹையோ… ஹையோ… ஃபாரின் ரிட்டன் சித்தப்பாவாக இளவரசு. வழக்கம்போலவே அசால்ட்டாக ஜோக்கடித்து கலகலக்க வைக்கிறார்.

படத்தில் வரும் இரண்டு சண்டை காட்சிகள் முறுக்கேற்றுகிறது. ஸ்டன்ட் மாஸ்டர் ஃபயர் கார்த்திக். நிஜமாகவே தீயணைப்பு வண்டிக்கு சொல்லி வைக்கிற அளவுக்கு பர்ஃபெக்ட்டான ஃபயர் ஆக்ஷன் அது.

இசை- யாரோ வேலாயுதமாம். அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கிய ஆர்மோனிய பொட்டியாக இருந்திருக்கும். அவ்வளவு பாடலிலும் சற்றே பழசாகிவிட்ட ஃபீலிங். பின்னணி இசை சபேஷ் -முரளி. வழக்கம் போல சபாஷ் முரளி.

முசுடு ஹீரோயின் காயத்ரி, ஹீரோவை தேடி அவரது வீட்டுக்கு வந்தபோதே படம் முடிந்துவிட்டதே, அப்புறமும் ஏன் சூயிங்கத்தை மெல்லணும்? இருந்தாலும் மத்தாப்பூ நமத்துப் போகவில்லை என்பதுதான் நாகராஜ் தரும் நல்ல செய்தி!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
ஆர்.எஸ்.அந்தணன் tamilcinema.com- ல் இருந்து விலகல்!

நேற்று மாலையிலிருந்தே நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிவிட்டேன். காரணம் நான் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக மூளையை கழுவி கழுவி ஊற்றி வளர்த்த...

Close