யா யா விமர்சனம்
ஒழுகுற பஸ்சுல அழுகுன தக்காளியை மூட்டை மூட்டையா ஏத்துன மாதிரி, சவசவன்னு படம் எடுக்கறது ஒரு வகை. இந்த டைப் படங்களை அண்ணன் தங்கச்சி கதைகளிலும், ஆத்தா மகன் கதைககளிலும் அப்ளை செய்து பார்ப்பார்கள் சில சென்ட்டிமென்ட் இயக்குனர்கள். உள்ளே நுழையும் போதே ‘செத்தாண்டா சிவனாண்டி’ என்பது போலவே நம்மை பரிதாபமாக பார்த்தபடி டிக்கெட் கொடுப்பார்கள் தியேட்டர்களில். ஆனால் நகைச்சுவை படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை. எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அது வொர்க் அவுட் ஆகும்.
இந்த படமும் அந்த மாதிரி ‘ஜானர்’ என்று நினைத்து உள்ளே சென்றால், ரசிகனை கழற்றி கழற்றி முடுக்குகிறது இப்படத்தின் திரைக்கதை என்கிற ஸ்பானர்! சந்தானமும் சிவாவும் ‘யா யா’ போஸ்டர்களில் தருகிற நம்பிக்கை மொத்தத்தையும், பொத்தாம் பொதுவாக வைத்து ஏலம் விட்டிருக்கிறார் டைரக்டர் ஐ.ராஜசேகரன்.
ஏன்-யா, எதுக்குய்-யா, பாவம்-யா , விட்டுடுங்கய்-யா என்று பற்பல ‘யா-’க்களால் பதறி சிதறுகிறது ரசிகர் கூட்டம். இத்தனைக்கும் படத்தில் இன்றைய டாப் மோஸ்ட் காமெடியன்களான சந்தானம், சிவா, பவர் சீனி ஆகியோர்தான் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் சண்டிக் குதிரையில சவாரி பண்ணிய அலுப்பு படம் நெடுகிலும்.
சந்தானமும், சிவாவும் எதிரிகள். ஆனால் நண்பர்களாகிறார்கள். சிவாவை கவுன்சிலர் திவ்யதர்ஷினி காதலிக்க, இவருக்கோ தன்ஷிகா மீது காதல். சிவாவின் முறைப்பெண்ணான சந்தியா மீது சந்தானத்திற்கு காதல். இந்த காதலிகளை ஈசியாக கரம்பிடிக்க வேண்டிய இவர்கள் சற்று இழுத்து வளைத்து ஏதேதோ சிக்கல்களில் மாட்டி கடைசியாக கட்டிக் கொள்வதுதான் கதை. (படம் பார்த்த மஹா சனங்களே, கதை சுருக்கத்தை சரியா சொல்லிட்டேனா?)
சந்தானத்தின் கால்ஷீட் எவ்வளவு முக்கியம் என்பதை படம் பார்க்கும்போது நன்றாகவே உணர முடிகிறது. முக்கால்வாசி படத்தை சிவாவே ஆக்ரமித்துக் கொள்கிறார். மிச்ச மீதி தருணங்களில் வந்து போகும் சந்தானம், முடிந்தவரை போராடி பார்க்கிறார். சில இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறார். ஆனாலும் பெரிய ஹீரோக்கள் காம்பினேஷனில் மட்டுமே மெனக்கெடுகிற அவரது நாக்கு, இந்த படத்தில் போனால் போகட்டும் போடா ரேஞ்சில் டீல் பண்ணியிருப்பதையும் உணர முடிகிறது.
இவருக்கு ஜோடி சந்தியா. காலம் மாம்பழங்களை கூட கொட்டையாக்கி துப்பிவிடுகிறதே, அதுதான் வேடிக்கை. இருந்தாலும், இனிமேல் இவர் ஹீரோயினாக தொடர முடியாது என்பதால் சந்தானம் சூரிகளின் தோள்களை பற்றிக் கொள்வது சேஃப். இந்த படத்தில் சிவாவின் ஜோடியாக என்ட்ரி கொடுத்து சந்தானத்திற்கு மனைவியாவது வரை, சந்தியாவின் நடிப்பு டாப்போ டாப்.
சிவாவை மற்றொரு ஹீரோ என்று சொல்ல முடியாது. ஏனென்றால் படத்தின் முக்கால்வாசி ரீல்களில் நீக்கமற நிறைந்திருப்பது இவரே. சும்மா தும்மினால் கூட அதிலும் கொஞ்சம் குசும்பு இருக்கும் இவரிடம். இந்த படத்தில் அதையும் தொலைத்துவிட்டு அந்தகால மைக் மோகன் ஆகியிருக்கிறார். இவர் காதல் தோல்வியால் தவிக்கிறார் என்பதையெல்லாம் இடிச்சப்புளியோடு இஞ்சி மரபாவையும் சேர்த்து விழுங்கிய எபெக்டோடு ஜீரணிக்க வேண்டியிருக்கிறது.
சிவாவுக்கு ஜோடி தன்ஷிகா. இவருடன் அடிக்கடி கோபித்துக் கொள்வதும், பின் அவரை விட்டு விலக முடியாமல் தவிப்பதுமாக ரொம்பவே சீரியசாக கடக்கிறது இவரது எபிசோட். இன்னும் கொஞ்ச நேரம் இவர்கள் இருவரும் காதலை இழுத்துக் கொண்டேயிருந்தால், ரசிகர்கள் தங்கள் குறட்டையிலேயே கெட்டிமேளம் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால், கடைசி ரீலிலாவது விஷயத்துக்கு வருகிறார் டைரக்டர்.
பவர் சீனியை இனி சந்தானமே நேரடியாக இயக்கினால்தான் உண்டு. மற்றபடி இவர் வருகிற காட்சிகள் எல்லாம் விஷக்கடியை விட கொடுமையானது.
விஜய் எபிநேசர் இசையில் சில பாடல்களை கேட்க சுகமாக இருக்கிறது. ஆனால் படத்தோடு சேர்த்து பார்க்க நேர்ந்தால் அதுவும் காலி.
சந்தானம், சிவா என்ற இருபெரும் மிலிட்டரி ஓட்டல்களை திறந்து வைத்துக் கொண்டு, ஆஃப்ட்ரால் ஒரு ஆம்லெட்டுக்கு கூட வழியில்லாமல் கதற வைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஐ.ராஜசேகர்.
படத்தில் ஆளாளுக்கு தோனி, சச்சின், சேவாக் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள். பட்… ஒரு நோ பாலுக்கு கூட வழியில்லை. அடப் போங்கய்-யா….
-ஆர்.எஸ்.அந்தணன்