ராஜேஷ் வீட்டு வாரிசும் நடிக்க வந்தாச்சு… -பத்மஸ்ரீ கமல்ஹாசன் வாழ்த்து
நாளு, கோளு, நட்சத்திரம், வாண சாஸ்திரம் என்று ஒன்றை கூட விட்டு வைப்பதில்லை நடிகர் ராஜேஷ். அடிப்படையில் ஜோதிடராகவும் விளங்கும் இவர் தனது மகன் தீபக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
கன்னிப்பருவத்திலே படத்தில் அறிமுகமான ராஜேஷ், தமிழ்சினிமாவின் நல்ல அப்பா, நல்ல வாத்தியார், நல்ல போலீஸ் என்றெல்லாம் நடித்து நல்லவர் இமேஜிலேயே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார் இப்போதும். முழுநேர தொழில் ரியல் எஸ்டேட் என்பதால், ஒரு நாணயமான நபர் என்கிற இமேஜ்தானே முக்கியம். அதை மிக சரியாக அவருக்கு அமைத்துக் கொடுத்த படங்கள்தான் அவரது ஆரம்பகால கன்னிப்பருவத்திலே படமும், அந்த ஏழு நாட்கள் படமும்.
அன்றிலிருந்து இன்று வரை ராஜேஷின் இன்றியமையாத தருணங்களில் கே.பாக்யராஜும் இருப்பாராம். அந்த சென்ட்டிமென்ட்டை விட்டுக் கொடுக்காமல், தனது மகன் தீபக் ராஜேஷை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்துவிட்டார். மதுரை ஆதினம் போல இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசி மட்டும்தான் வழங்கவில்லை. மற்றபடி தீபக்கை நெஞ்சார வாழ்த்திவிட்டு போனார் பாக்யராஜ். போகிற போக்கில் அவர் சொன்ன ‘இன்று ஒரு தகவல்’தான் செம கிரேட். கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷ் கேரக்டரில் நடிக்க நான் விஜயகாந்தைதான் செலக்ட் பண்ணி வச்சுருந்தேன். சார்… ஒரு புதுப்பையன் இருக்காரு. பாருங்க என்று விஜயகாந்தின் போட்டோவை தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் காட்டினேன். அவர், இப்பதான்ப்பா உங்க டைரக்டர் (பாரதிராஜா) வேறொருத்தரை ரெகமண்ட் பண்ணிட்டு போயிருக்கார் என்றார். அவர்தான் இந்த ராஜேஷ் என்றார்.
சிவாஜி இடத்தை ராஜேஷ்தான் நிரப்புகிறார் என்றொரு பொருந்தாத பொய்யை சொல்லிவிட்டு இடத்தை காலி பண்ணினார் கவிஞர் சினேகன். ரொம்ப ஓவர்ங்க என்று அவரை கடிந்து கொள்ள யாரும் இல்லாதது ஷாக். போகட்டும்… தீபக் எப்படி? முகத்தில் அமைதி தாண்டவமாடுகிறது. ஆக்ஷனுக்கு ஒத்து வருவார் போல தெரியவில்லை. ஆனால் அப்பாவின் நடிப்பை பிசகாமல் கொடுப்பார் என்பது மட்டும் புரிந்தது. பயணங்கள் தொடர்கின்றன என்கிற இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் அவரது பயணம், வெகு ஜோராக இருக்கட்டும் என்பதே நமது வாழ்த்து.
இந்த படம் கேரளாவில் ஆரம்பித்து, தமிழகத்தில் பயணமாகி ஆந்திராவில் முடிகிறதாம். (எடுத்த எடுப்பிலேயே மூணு லாங்குவேஜ்ல ரிலீஸ் பண்ணுவாங்களோ?) அப்படியே இன்னொரு சங்கதி. ராஜேஷ் பையனாச்சே… முன்னணி ஹீரோக்கள் பாராட்டாமல் விடுவார்களா? பத்மஸ்ரீ கமல்ஹாசன், தீபக்கையும் படத்தின் நாயகி அஞ்சனா மேனனையும் நேரில் வரவழைத்து வாழ்த்தியிருக்கிறார்.