ராமராஜனும் சேரனும் ஒண்ணுதான்? -மிஷ்கினின் நையாண்டியும் நக்கலும்…
டைரக்டர் சேரனை ஒரு காலத்தில் பொக்கிஷம் என்று கொண்டாடிய ரசிகர்கள் அவரது ‘பொக்கிஷம்’ படத்தை மட்டும் கஷாயம் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணியதால், சேரன் கொஞ்ச காலம் ரெஸ்ட், அல்லது பாலிஷுக்கு போயிருந்தார். மீண்டும் புத்துணர்வோடு திரும்பி வந்தது அவர் இயக்கியிருக்கும் படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இதில் சர்வானந்த் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். நம்பினால் நம்புங்கள்… சேரன் ஒரு காட்சியில் கூட தோன்றவில்லையாம்.
தமிழ்சினிமாவின் அத்தனை முக்கியஸ்தர்களும் நிறைந்திருந்த மேடை அது. ‘ஓவர் வாய் உலகநாதன்’ என்று சினிமாக்காரர்களாலேயே புகழப்படும் மிஷ்கினை கூட இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார் சேரன். வந்த வேலையை மிக கச்சிதமாக செய்தார் அவரும். ‘யுத்தம் செய் படம் எடுக்கும் போது நடந்த சம்பவம் அது. தயாரிப்பாளர்ட்ட கதைய சொல்லிட்டேன். அந்த போலீஸ் அதிகாரியா யார் நடிக்கிறாங்கன்னு கேட்டார் அவர். நான் சேரன்னு சொன்னதும் இடத்தை காலிபண்ணிட்டு போயிட்டார். அப்புறம் வேறொரு தயாரிப்பாளர் வந்தார். முன்னாடியே இந்த கேரக்டர்ல நடிக்கறதுக்கு ரெண்டு ஹீரோவை சாய்ஸ்ல வச்சுருக்கேன். ஒருத்தர் ராமராஜன். இன்னொருத்தர் சேரன்னு சொன்னேன். சரி… சேரனை நடிக்க வைங்கன்னாரு அவர். இப்படி ஆரம்பித்தது மிஷ்கினின் பேச்சு. ஆட்டோகிராஃப் படம் பார்த்துட்டு நான் துங்கிட்டேன்னு இவர் சொன்னதுதான் காமெடியிலும் பெரிய காமெடி.
இந்த படத்தின் ஹீரோயின் நித்யாமேனனிடம் இருக்கிற அழகான திமிர் எனக்கு பிடிக்கும் என்று பார்த்திபன் சொல்ல, பின்னால் அமர்ந்திருந்த நித்யா, நானா? என்பது போல ஷாக் முகம் காட்டினார். தெரிஞ்சேதான் டைட்டில் வச்சுருக்காரு சேரன். இதில் வர்ற ஜே.கே வுக்கு அர்த்தம், ஜெயிக்கிற குதிரை என்று கூறி அத்தனை பேரின் கைத்தட்டல்களையும் அள்ளிக் கொண்டார் பார்த்திபன்.
ஷங்கர், பாரதிராஜா, கேயார், சரத்குமார், அமீர், சூர்யா, சமுத்திரக்கனி, ராம் போன்றவர்கள் சேரனை வாழ்த்தி பேசி அமர்ந்த பின் நன்றிக்காக மைக் பிடித்தார் சேரன். சர்வானந்த் ரொம்ப அர்ப்பணிப்பு உள்ள ஹீரோ. அவருக்கு தமிழ் திக்கி திக்கி பேசுற அளவுக்குதான் வரும். ஆனால் பத்து நாட்கள் தொடர்ந்து ஒதுக்கி நான்தான் டப்பிங் பேசுவேன்னு பேசியிருக்கார். ஹீரோயின் நித்யாமேனனிடம் கதை சொல்லப் போனேன். அவங்க இன்னைக்கு தெலுங்குல முன்னணி ஹீரோயினா இருக்காங்க. சம்பளம் எவ்வளவு தருவேன்னு அவங்க கேட்கவே இல்லை. முதல்ல கதையை சொல்லுங்கன்னு சொன்னாங்க. சொல்லி முடித்ததும் நான் இதுல நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அந்தளவுக்கு அவங்க கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற கேரக்டர் என்றார் சேரன்.
சேரனுக்கு சொந்தவீடு கூட இல்லை என்று அமீர் பேசிவிட்டு போக, அமீருக்கும் கூட சொந்தவீடு இல்லை என்றார்கள் அங்கே மேடையில் பேசிய சிலர். சொந்தப்படம் எடுக்கிற டைரக்டர்களுக்கு சொந்தவீடு இல்லாமலிருப்பது கூட ஒரு வகையில் சேஃப்டிதான்.
எப்படிங்கிறீங்களா? வீட்டை ஏலத்துக்கு பறிகொடுத்த தயாரிப்பாளர்களை கேளுங்க சொல்லுவாங்க…