கமலையே வியக்க வைத்த நடிப்பு ராட்ஷசன்! -ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 03 -தேனி கண்ணன்

நான் பணிபுரிந்த வார இதழ், இசைஞானியின் ’பால் நிலா பாதை’ புத்தகத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டது. இதற்காக வழக்கம் போல் விழாவில் கலந்து கொண்டு பேசும் விருந்தினர்களை இசைஞானியிடம் கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த நேரத்தில் இசைஞானியை அந்த இதழில் எழுத வைத்தது எப்படி என்ற இரு குட்டியூண்டு ஃப்ளாஷ் பேக்.

நான் அந்த வார இதழில் 2007 ல் சேர்ந்தேன். அந்த சமயத்தில் நான் அடிக்கடி என் ஆசானான கவிவேந்தர் மு.மேத்தாவை சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். கவிஞரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர், ‘சென்னை எனக்கு ஈன்றெடுத்துக் கொடுத்த இன்னொரு அன்னை.’ (அவரை பற்றி விரிவாக இன்னொரு வாரம் எழுதுகிறேன்.) அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ”ஐயா..ராஜா சாரை வார இதழில் தொடர் மாதிரி எழுத சொன்னால் நல்லாயிருக்கும்.” என்றேன் “நல்ல யோசனைதான் ஆனால் அவர் பேட்டிக்கே சம்மதிக்க மாட்டாரே.. சரி சாரை நான் சந்திக்கும்போது பேசிப் பார்க்கிறேன்..’ என்றார். அப்படி அவர் பலமுறை சந்திக்கும்போது இசைஞானியிடம் இது பற்றி பேசியிருக்கிறார். 2007 ல் ஆரம்பித்த அந்த பணி 2011 ல் தான் கைகூடியது. இது ஏதோ நேற்று சொல்லி இன்று நடந்ததல்ல “அண்ணே நீங்க எழுதினீங்கன்னா கண்ணனுக்கு ஆபீஸ்ல பணி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு. கொஞ்சம் யோசிங்கண்ணே.” என்று பார்க்கும் போதெல்லாம் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவம் இதுவரை யாருக்கும் தெரியாது. இதற்காக மு.மேத்தா ஐயா அவர்களுக்கு நன்றிகூட இதுவரைக்கும் நான் சொல்லவில்லை. (ஃப்ளாஷ் பேக் முடிந்தது.)

விழாவிற்கு கவிஞர்.முத்துலிங்கம், கவிஞர்.மு.மேத்தா, இறையன்பு, ஆகியோரை கலந்து கொள்ள வைக்கலாம் என்று முடிவானது. முத்துலிங்கம் ஐயா, “தமிழறிஞர்கள் கலந்து கொள்கிறோம் என்ன சன்மானம் கொடுப்பீங்க.” என்று கேட்டார். நான் இதை அலுவலகத்தில் சொல்லியிருந்தால்கூட கொடுத்திருப்பார்கள். நான் சொல்லவில்லை “எனக்காக கலந்து கொள்ளுங்கள் ஐயா.” என்று சொன்னேன் “விளையாட்டாகதான் கேட்டேன் கண்ணன் உங்களுக்காக இதைகூட செய்யமாட்டேனா.” என்றார் சிரித்துக்கொண்டே. நான் வாழ்க்கையில் மறக்கக்கூடாத மனிதர்களில் முக்கியமானவர் இறையன்பு சார். அவரை சந்திக்க நண்பர் சுந்தரபுத்தனோடு தலைமைச் செயலகம் சென்றேன். ”ராஜா சாரை பற்றி பேசுவதற்கு எனக்கு மகிழ்ச்சிதான் கண்ணன். ஆனால் அதற்கு முன் அவரை நேரில் சந்திக்க முடியுமா” என்று கேட்டார். நானும் ராஜா சார்கிட்டே விஷயத்தை சொல்லி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன்.

அவர்கள் பேசியதை பதிவு செய்தால் விகடன் புத்தகத்தில் பத்து பக்கத்திற்கு வருமளவுக்கு இலக்கிய உரையாடலாக அது இருந்திருக்கும்.. புத்தகத்தை பெற்றுக்கொள்ள ‘கமல்ஹாசன் வந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள் அலுவலகத்தில். நானும் அவரது பி.ஆர்.ஓ நிகில் மூலமாக கமல் சாருக்கு தகவல் அனுப்பினேன். கலந்துகொள்வதாக கமல் சார் சொல்லியிருந்தார்.

இதற்கிடையில் நிகழ்ச்சியின் துவக்கத்தில் ராஜா சாரின் பாடல்களின் கச்சேரி வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் ராஜா சார் இதை விரும்ப மாட்டார் என்று சொல்லி பார்த்தேன். நடக்கவில்லை. சரி என்று ராஜா சாரிடம் தயங்கியபடியே சொன்னேன். “இது இலக்கியவிழா. எதுக்கு கச்சேரியெல்லாம்?” என்றார். ”ஐயா ரசிகர்கள் விரும்புறாங்க.” என்றேன் மெதுவாக ”சரி.. நான் அரங்கில் நுழையும்போது கச்சேரி முடிந்திருக்கணும்.” என்றார். எனக்கு பெரிய நிம்மதி அதன்படி குறைந்த விலைக்கு யார் மெல்லிசை குழு வைத்திருக்கிறார்கள் என்று தேடி அலைய ஆரம்பித்தேன். அதே நேரத்தில் ’லஷ்மன் ஸ்ருதி’ இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. நான் லஷ்மன் சாரை அதுவரை சந்தித்ததேயில்லை. அவர்கள் லட்சத்தில். சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இசைக்குழு. எப்படி பேசுவது என்று புரியவில்லை. அதுவும் இந்த விழாவுக்காக திட்டமிடப்பட்ட தொகையில் இது சாத்தியமா என்று புரியவில்லை.

ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு லஷ்மன் சார் முன்னால் போய் நின்றேன். பலவாறாக பேச்சு ஓடியது. அந்த தொகைக்கு வர முடியாததற்கான நியாயமான காரணத்தை சொன்னார் லஷ்மன். நான் பேசிப்பேசி சோர்ந்து போனேன். போனை டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்த கேசட்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் செல் அடித்தது. டேபிளில் இருந்த போனை பார்த்ததும் லஷ்மன் எழுந்து நின்றே விட்டார். செல் ஸ்கிரினில் ‘இசைஞானி’ என்று மின்னியதே காரணம். நானும் பணிவுடன் பேசி வைத்தேன். அதுவரைக்கும் பரவச புன்னகையோடு நின்றிருந்த லஷ்மன், “ ஐயாவா பேசினது,” என்றார். அந்த நிமிடமே ‘ஐயாவுக்காக நீங்க சொல்ற தொகைக்கு ஒத்துக்குறோம். ஆனால் பாடகர்களுக்கு நீங்களே தனிப்பட்ட முறையில் பணம் கொடுத்து வரச்சொல்லிடுங்க” என்றார் எனக்கு இதுவே பெரிய விஷயமாகப் பட்டது. அதனால சரி என்றேன். அதற்குப்பிறகு ஒவ்வொரு பாடகரையும் போனில் பிடிக்க முயன்றேன். பணம் குறைவாக பேசியதால் பலரும் பம்மினர். சிலர் அன்றைக்கு வெளியூரில் இருப்பதாக சொன்னார்கள். நானும் விடாமல் செல் அடித்தேன். என் போனை பார்த்தாலே பாடகர்கள் பலருக்கும் தொண்டை கட்டிக் கொண்டது.

ஆனால் என் தொடர்ந்த முயற்சியை சிலர் வெற்றி பெற வைத்தனர். திரு.முகேஷ், திரு.கிருஷ்ணராஜ், இறையன்பன் திரு.குத்தூஸ், திருமதி.வினயா. செல்வி.சுஹாசினி இவர்கள்தான் பணம் வாங்காமல் பாடிச்சென்ற வானம்பாடிகள். இப்படி ஒரு விஷயம் நடந்ததே அலுவலகத்திற்கு தெரியாது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, டி.வி காம்பியர் ஐஸ்வர்யாவிடம் பேசினேன். (இப்போது டி.வியில் வெளுத்து வாங்கும் அதே ஐஸ்வர்யாதான்.) பெருந்தொகை கேட்டார் அந்த அருந்தமிழ் பேசும் அழகான காம்பியர். ”உங்களை முதன் முதலில் நான்தான் பேட்டியெடுத்தேன் நினைவிருக்கா.” என்றேன். “ஞாபகமிருக்கு சார் எவ்வளவு தருவீங்க.” “மூவாயிரம்.” எதிர்முனையில் லேசான சிரிப்பு சத்தம் கேட்டது. எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. “சரிங்க சார் டேட் மட்டும் சொல்லிடுங்க.” சிரித்துக் கொண்டே போனை வைத்தார். அம்மாடி ஒரு வழியாக பாதி வேலை முடிந்தது.

அப்போதுதான் நிகில் பேசினார்.”கண்ணன் நிகழ்ச்சிக்கு முன்னால் கமல் சாரை சந்தித்துப் பேசி விடுங்கள். நாளைக்கு ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்திடுங்க. யார் யார் வருவீங்க” என்று கேட்டு தெரிந்து கொண்டார். மறுநாள் ரகுமான் ஸ்டுடியோவில் நான் இருந்தேன். என்னுடன் என் மதிப்பிற்குரிய இதழாசிரியரும் வந்திருந்தார். விஸ்வரூபம் முதல் பாகத்தின் ஒலிப்பதிவில் இருந்தார் கமல். காத்திருந்தோம். சரேலென்று கதவை திறந்து மென்புன்னகையோடு ஒரு வெண்தாமரையாய் வெளியே வந்தார் கமல்ஹாசன் என்கிற இந்திய சினிமாவின் இலச்சினை. தூங்காமல் பல இரவாக விஸ்வரூப வேலையில் இருக்கிறார் என்பதை அவர் கண்களே காட்டிக் கொடுத்தது.

ராஜா சாரை பற்றி பேச ஆரம்பித்தார். “மியுசிக்ல மட்டுமில்ல ராஜா போட்டோகிராபியிலும் பெரிய கில்லாடி. என்கிட்ட நிறைய ஆல்பங்களை காட்டியிருக்கார். இசை ஆளுமை அது இதுனு சொல்வாங்க. நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இசையை தன் இஷடத்துக்கு ஆட்டி வைக்கக் கூடியவர் ராஜா. அந்த மேதமை எவனுக்கும் வராது. தப்பா நினைக்காதீங்க. இந்த மனுஷனோட திறமையும், பெருமையும் நமக்கு எப்ப தெரியும் தெரியுமா…அவர் இல்லாத போதுதான். இந்த நாட்டின் சொத்து ராஜா” என்று சொல்லி விட்டு ஒரு நிமிடம் அப்படியே தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தார் கமல். இசைஞானி மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தை பளீச் என்று காட்டியது அந்த மவுனம்

”சார்.. டெக்னாலஜி வளராத காலத்தில் விகரம் படம் வந்தது. அதை இப்போ எடுத்திருக்கலாம்னு எப்போதாவது உங்களுக்கு தோனியிருக்கா?” நான்தான் இப்படி கேட்டேன். “ஏன் அப்படியெல்லாம் நினைக்கனும்? கதையிலேயே இப்ப அட்வான்ஸா வளர்ந்திருக்குற விஸ்வரூபம் எடுக்குறேனே. அது போதாதா.” பேச்சு பழைய படங்களுக்கு திரும்பியது. ஒருகாட்சியில் தலைகாட்டிப் போன பழம் கலைஞர்களையும் ஞாபகப்படுத்திப் பேசினார். அதில் நம்பியாரின் ஒழுக்கமும் அவர் கடைபிடித்த தொழில் பக்தியும் பற்றி கமல் சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. அதோடு அவர் கண்டுபிடிக்கும் புதுப்புது வார்த்தைகளை பற்றி வியந்து பேசினார்.

”எல்லரையும் விட நடிப்பில் நக்கல் காண்பிக்கும் ராட்ஷசன் ஒருத்தன் இருந்தாரு. அவருதான் எம்.ஆர்.ராதா. சாயங்காலம் போடப் போற நாடகத்துக்கு காலையில் நியூஸ் பேப்பர்லருந்து சீன் எடுப்பாரு கவர்ன்மெண்டை நக்கலடிக்கிற மாதிதான் இருக்கும். ஆனால் அதுக்கெல்லாம் கவலபடுற மனுஷனா அவரு. அப்படிதான் ஊர் ஊரா நாடகம் போட்டுக் கொண்டிருந்தப்போ அந்த நேரத்துல சொர்ணமுகிங்கிற டான்ஸரை அரசவை நடனப் பெண்ணாக அறிவித்து அறிவிப்பு வந்திருந்துச்சு. இதை பார்த்துட்டு எம்.ஆர்.ராதா அன்னைக்கு நாடகத்துல பொம்பள் வேஷம் போடுறாரு. அவர் பொம்பள வேஷம் போட்டு நடந்து நீங்க பார்த்திருக்கணுமே. பொம்பளைங்க கெட்டாங்க போங்க. நமக்கு இப்படி நடக்க வரலேன்னு பெண்களே ஏங்குவாங்க.” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், விருட்டென்று எழுந்து இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு நாணல் போல நெளிந்து நெளிந்து நடந்து காண்பித்தார் பாருங்கள்… ஆஹா அற்புதம்.. எவ்வளவு உயர்ந்த கலைஞன் கமல். (இசைஞானி மட்டுமல்ல நீங்களும் இந்த நாட்டின் சொத்து தான் கமல் சார்) பேசிக்கொண்டே நேரம் ஆவதையும் கவனித்தார். ”வராலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவமும் கு.ஞானசம்பந்தமும்தான் நான் போன்ல அதிக நேரம் பேசுறவங்க” என்ற கமலிடம் “என்ன இருந்தாலும் பாகவதரையும், என்.எஸ்.கேவையும் சிறையில் அவ்வளவு நாள் வெச்சிருந்ததை ஏத்துக்க முடியல சார்.” என்றேன்.

“அந்த கலைஞர்கள் மேல் உள்ள பாசத்தால நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் சட்டம்னு ஒண்ணு இருக்கே.” என்று அதை பற்றி பேச வந்த போது ஒலிப்பதிவு கூடத்திலிருந்து அழைப்பு வந்தது. எழுந்து கை கொடுத்து விடை பெற்றார் கமல். சொன்னபடியே விழா நாளன்று வந்து சிறப்பாக பேசி அப்ளாசை அள்ளினார்.

விழா நாளுக்கு முன் ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணினார். “சார் என்ன சார் எதுவும் சொல்லல, நான் பிரிப்பேர் பண்ணனும் சார்.” என்றார். கடைசியில் அவர் வரவில்லை.

இந்திய சினிமாவின் இரண்டு லெஜண்டுகள் கலந்து கொண்ட அந்த விழாவிற்கு நாங்கள் எல்லாரும் கூடி ஏற்பாடு செய்திருந்த தப்புத்தப்பாக தமிழ் பேசிய அந்த காம்பியரை நினைத்தால் எனக்கு இப்போதும் தூக்கம் வருவதில்லை.

(இன்னும் மீட்டுவேன்)

தேனி கண்ணனின் தொலைபேசி எண் – 09962915216

7 Comments
  1. Ghazali says

    மிக அருமையான நடை தேனி கண்ணன்.
    அடுத்து என்ன, அடுத்து என்ன என்று வேகமாக வாசிக்கத் தூண்டுகிறது உங்களின் எழுத்து நடை. அதிகம் இடைவெளி இல்லாமல் தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    அன்புடன்,
    கஸாலி

  2. எஸ்கா says

    ரசிகனை சந்தோஷப்படுத்தும் அருமையான பிளாஷ்பேக்குகள்.

  3. Murugan Manthiram says

    அண்ணன் பின்றீங்க அண்ணன். இளையராஜா பத்தி எவ்ளோ கேட்டாலும் அது அவரோட பாட்டு மாதிரியே ஸ்வீட். ஸ்வீட். தெய்வீக ராகதேவன்… எழுதுன அந்த புக் பத்தி, அந்த பங்ஷன் பத்தி இன்னும் விரிவா சொல்லுங்க.

  4. nellaibharathi says

    nellaibharathi

    October 17, 2013 at 11:25 am

    Your comment is awaiting moderation.

    மழலைச்சொல்லைவிட தங்களின் யாழ் இனிது என்று புரியவைத்துவிட்டீர்கள் கண்ணன்!
    திறன்படைத்த முன்னணிக் கலைஞர்களை நேரில் பார்ப்பதே அரிது. அதனினும் அரிது அவர்களுடன் பேசுவது. அட அதைவிட அரிது அவர்களுடன் உணவுமேடையில் சமமாய் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குப் பழகுவது. இந்த எல்லா அரிதுகளையும் ஒரு பச்சைக்குழந்தை பலூனைச் சுமப்பதுபோல, ஊதித்தள்ளியவர் நீங்கள்.
    எல்லோருக்கும்தான் 247 எழுத்துக்களும் தெரிகிறது. எதற்குப்பக்கத்தில் எதைப்போடுவது என்பது ஒருசிலருக்கு மட்டுமே கைவருகிறது. அதனால்தான் அவர்களது கைக்கு மட்டும் வெற்றி எட்டுகிறது. உங்களுக்கும் அந்தக் கை வாய்த்திருக்கிறது.
    உங்களது கையில் உள்ள புல்லாங்குழலைப் பிடுங்காமல், கூடுதலாக ஒரு யாழ் வாங்கிக்கொடுத்த ஆர்.எஸ்.அந்தணன் அவர்களுக்கு என் நன்றி.
    நேற்றைய, இன்றைய ஜாம்பவான்கள் குறித்த அரிய தகவல்களை அறியத்தரும் நாளைய ஜாம்பவான் தேனி கண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் திறந்த வாழ்த்துகள்

  5. suresh says

    super

  6. geo.fernando says

    Continru theni kannan
    niraya eluthungal
    vazhthukkal
    nanry

  7. raja says

    sup……………….er sir

Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
Srikanth Deva Celebrates Daughter’s Birthday

[nggallery id=64]

Close