பல்ப் வாங்கிய 90 எம்.எல்! ஒரே நாளில் அவுட்!
கர்சீப்புன்னு நினைச்சு ஜட்டியை பையில் திணித்துக் கொண்டு வந்த பிரகஸ்பதிகளுக்கு வேண்டுமானால் இந்த படம் கொண்டாட்டமாக இருக்கலாம். நிஜத்தில் ‘90 எம்.எல்’ போட்டுத் தள்ள வேண்டிய சினிமா. அழகிய அசுரா என்ற பெயரில் இப்படத்தை இயக்கியிருக்கும் அனிதா உதுப், கோடம்பாக்கத்தில் ஒரு புதிய வழித்தடத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே ஹரஹர மகாதேவகியும், இருட்டறையில் முரட்டுக்குத்தும் ஏற்படுத்திய தடம்தான். ஆனால் குண்டும் குழியும் அதைவிட ஜாஸ்தி!
கடைத்தெருவில், மார்க்கெட்டில், பொது இடங்களில் நடந்து போகும் பெண்களிடம் சினிமா டயலாக்குகளை சொல்லி கலாய்க்கும் கும்பல், இனி யாரையாவது பார்த்து ‘பூத் பங்களா’ என்று போகிற போக்கில் ஜாடை பேசினால், நின்று கவனித்து செருப்பை கழட்டுங்கள் பெண்களே… இது அந்த படத்தில் வரும் மோசமான அர்த்தம் கொண்ட டயலாக்! ஒரு வேளை புகார் கொடுக்கும் பெண்கள், மறக்காமல் அதில் அனிதா உதுப் பெயரையும் சேர்க்க வற்புறுத்துங்கள்.
கட்… தமிழ்சினிமா ரசிகர்களின் மன ஓட்டத்தை கொஞ்சமாக வாய்க்கால் வெட்டி, அப்படியே சாக்கடையில் கலக்க வைக்க முயன்ற அனிதா உதுப்பின் துணிச்சல் செல்லுபடியானதா? படத்தை வாங்கி வெளியிட்டால், மூட்டை மூட்டை பணத்தை அள்ளிவிடலாம் என்று கணக்குப் போட்ட விநியோகஸ்தரின் எண்ணம் நிறைவேறியதா?
சும்மா சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் முடிவு எப்போதும் சரியாகவே இருந்திருக்கிறது. இப்படியொரு மோசமான குப்பையை கண்டு ஒதுங்குவதே மேல் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் அவர்கள். ஊடகங்களின் விமர்சனங்களுக்கு மதிப்பளித்து நேற்று ஒரே நாளோடு இப்படத்தை கருவறுத்துவிட்டது மக்கள் மனசு. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் தியேட்டர்களில் கூட்டம் வழிவது இயல்பே. ஆனால் முன் பதிவிலும் சரி… தியேட்டருக்கு வரும் கூட்டத்திலும் சரி. காற்று வீசிக் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை ஷோவே பாதி காலி என்கிறது தகவல்கள்.
தங்க செருப்பாவே இருக்கட்டும்… அதை எங்க வைக்கணும் என்று தெரிந்தே வைத்திருக்கிற என் இனிய தமிழ் மக்களே… நீங்க நல்லாயிருக்கணும்!