பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!
பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு.
அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, சுமார் ஆறு படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்து கவிஞர் பொத்துவில் அஸ்மின், பாட்டு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார். ஈழத்திலிருந்து கொண்டே தமிழ்சினிமாக்களுக்கு அவர் பாடல் எழுதுவது வியப்பிலும் வியப்பு. இங்கிருந்து வாட்ஸ் ஆப்பில் அவருக்கு மெட்டுகளை அனுப்பி வைத்துவிடுவார்களாம். அடுத்த சில நிமிஷங்களில் அந்த மெட்டுக்கேற்றார் போல வரிகளை போட்டு அதே வாட்ஸ் ஆப்பில் இவர் திருப்பி அனுப்ப, ஒரு வண்ணத்துப்பூச்சி தேன் எடுக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது அந்த சடங்கு.
ஒரு காலத்தில் டெலிபோன் ரிசீவரிலேயே ட்யூனை கேட்டு மறுமுனையில் பாட்டு சொல்லி கவர்ந்திழுத்த கவியரசர் கண்ணதாசன் போல, இவ்வளவு விரைவாக… இவ்வளவு வலிமையாக ஒருவரால் எழுதிவிட முடியுமா என்று இங்குள்ள சில இசையமைப்பாளர்கள் வாய்விட்டே பாராட்டுகிறார்கள் அஸ்மினை.
ஈழத்திலிருந்த இவரை முதன் முதலில் தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்ட்டனி. அவர்தான் தன் படம் ஒன்றுக்கு பாடல் எழுதும் போட்டி ஒன்றை நடத்தினார். உலகம் முழுக்க கலந்து கொண்ட 20 ஆயிரம் கவிஞர்களில், முதல் பரிசை தட்டிச் சென்றவர் அஸ்மின். ” தப்பு எல்லாம் தப்பேயில்லை .. சரியெல்லாம் சரியே இல்லை ” என்பதுதான் அவர் தமிழ்சினிமாவுக்கு முதலில் எழுதிய அந்தப்பாடல்.
அமரகாவியம் படத்தில், ” தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே ….தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே ” என்று இவர் எழுதிய வரிகள், இப்போதும் சக பாடலாசிரியர்களையே கவனிக்க வைத்த வரிகள்.
” பச்ச முத்தம் நச்சுன்னுதான் தாடி புள்ள … ஓ வட்ட முகம் நிக்குதடி பீருக்குள்ள “
“நஞ்சு கலந்த மலரா நீ … தேனில் ஊறிய மொளகா நீ “
இதெல்லாம் அஸ்மினின் கைவண்ணங்கள்தான்.
ஒரு முக்கியமான விஷயம். ஈழத்திலிருந்து சுமார் 50 வருஷங்களுக்கு முன் ஒரு கவிஞர் வந்து ஜெமினி கணேசன் நடித்த ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்’ படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். அதற்கப்புறம் இத்தனை வருஷங்கள் கழித்து அந்த மண்ணிலிருந்து வந்திருக்கும் சினிமா பாடலாசிரியர் இந்த அஸ்மின்தான்.
நம் தமிழனின் வலைகளை பிடுங்கிக் கொண்டு ஏப்பம் விடுகிற நாட்டிலிருந்து, நம்மையே வலை வீசிப் பிடிக்கிற அஸ்மின் கிடைத்திருப்பதுதான் சுவை முரண்! அதுதான் தமிழனின் பெருமையும் கூட!