வயதான நடிகர்களுக்கு பென்ஷன்! அள்ளிக் கொடுத்த அறிமுக ஹீரோ!
இரண்டு கைகளாலும் அள்ளிக் கொடுக்கணும் என்று நினைக்கும் ஆசாமிகளை கூட, ஒரு கையில் என்ன கொள்ளுமோ, அதை கொடுக்க வைத்துவிடும் போலிருக்கிறது உலகம். “வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது”ன்னு சொன்னால் யார்தான் இரண்டு கையாலும் கொடுப்பார்கள்? கொடுக்க நினைக்கும் கொஞ்ச பேரும், இடது கைக்கு தெரிஞ்சா என்னாவறது என்று நினைத்து ஒரு கையளவுக்கு என்ன வருமோ, அதை மட்டுமே உதவியாக தருகிறார்கள். (அடக்கடவுளே… ஒரு பழமொழிய எப்படியெல்லாம் ஆராய்ரானுங்க?)
கொடுக்கணும்னு நினைச்சா கொடுத்துடணும். இதுல இடது வலது கைன்னு யோசிச்சா, வர்ற குழாயும் வறண்டுவிடும் என்று நினைக்கிற சிலர்தான் கையில் வர்றதை அள்ளிக் கொடுத்து காதும் காதும் வச்ச மாதிரி கிளம்பிவிடுகிறார்கள். அப்படி கிளம்பிய ஒரு நடிகரை பற்றிதான் இப்போதும் நாம் சொல்லப் போகிறோம். அதுவும் அவர் ஒரு அறிமுக நாயகன் என்றால் ஆச்சர்யம் வருகிறதல்லவா?
மெட்ரோ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சிரிஷ், நடிகர் சங்க உறுப்பினர்கள் பலருக்கு தாமாக முன் வந்து ஒரு உதவியை அளித்திருக்கிறார். அதாவது சங்கத்திலிருக்கும் எண்பது வயதை தாண்டிய பலருக்கு நடிகர் சங்கம் உதவித் தொகை (பென்ஷன்) வழங்கி வருகிறது. இந்த வருடம் முழுக்க தரப்போகும் அந்த உதவியை நானே தருகிறேன் என்று கொடுத்துவிட்டாராம் இந்த சிரிஷ். அதுமட்டுமல்ல, அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆகும் தொகையையும் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாராம்.
இவர் நடித்த மெட்ரோ திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. அதற்குள் இப்படி ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கிறார் அவர். படம் நன்றாக ஓடி, மார்க்கெட்டில் கபடி ஆடும் ஹீரோவாக மாறினால், இன்னும் கூட செய்வார் போலிருக்கிறது. அதற்காகவாவது ஓடட்டும் மெட்ரோ!