ஆறுன பாலா இருந்தாலும் ஊத்துங்க எசமான்”னு சொல்ற சாதாரண பூனைன்னு நினைச்சியா? பெர்சியன் பூனைடா….
ஒரு படத்தில் பூனையை நடிக்க வைக்க வேண்டும் என்றால் என்ன செய்வார் டைரக்டர்? “சொல்ற பேச்சை கேட்கிற பூனை இருந்தா கொண்டாங்கப்பா…” என்று ‘ட்ரெய்ன்டு கேட்’களை தேடிதானே அலைவார்? ஆனால் “பூனை பார்க்கறதுக்கு ஜம்முன்னு இருக்கணும். அதனுடைய கண்களை பார்த்தாலே சும்மா அதிரணும்” என்று நினைத்தாராம் ‘மியாவ்’ படத்தின் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி. சுமார் 200 விளம்பர படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் இவருக்கு இதுதான் முதல் படம்.
இவர் நினைத்த மாதிரி பூனை கிடைத்ததா? தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. பெங்களுரு பக்கத்தில்தான் கிடைத்தது. ‘பெர்சியன் கேட்’ வகை பூனை அது. அதை நடிக்க வைப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டார்களாம். (அதுக்கெல்லாம் நீங்க இராம.நாராயணனா பிறப்பெடுத்து வரணும்) சுமார் 70 சதவீத காட்சிகளை புகழ்பெற்ற கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா உருவாக்கியிருக்கிறார். படத்தில் சுமார் 550 இடங்களில் சிஜி தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கதை? “செல்பி’ என பெயரிடப்பட்ட ஒரு சாதுவான பூனையானது, நான்கு இளைஞர்கள் ஏற்படுத்தும் இன்னல்களால் வெகுண்டு எழுந்து அவர்களுக்கு தொல்லைகளை கொடுக்கிறது. அது ஏன்…எதற்காக…என்பது தான் எங்கள் ‘மியாவ்’ படத்தின் ஒரு வரி கதை என்கிறார் சின்னாஸ் பழனிச்சாமி.
“மொத்தம் 120 நிமிடம் ஓடக்கூடிய ‘மியாவ்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் பாராட்டுகளை பெறும். தமிழ்நாட்டை பொறுத்த வரை நாய்களை தான் தங்கள் செல்ல பிராணிகளாக அதிகளவில் மக்கள் வளர்த்து வருகின்றனர், ஆனால் ‘மியாவ்’ படத்தை பார்த்த பிறகு அவர்களுக்கு பூனைகள் மீது ஒரு தனி அன்பு ஏற்படும்…குழந்தைகள் மட்டுமில்லை, இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லா தரப்பினருக்கும் ஏற்ற திரைப்படமாக எங்கள் ‘மியாவ்’ படம் இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘மியாவ்’ படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ்.
இவர் ‘பாரத் ரத்னா’ சத்யஜித்ரேவின் கதையை தயாரித்தவரும் கூட. அப்படியே இன்னொரு சுவாரஸ்யமான தகவல். இவர்தான் கபாலி படத்தின் திருச்சி விநியோகஸ்தரும் கூட!
கூப்பிட்டவுடனே ஓடி வந்து கையை கட்டிகிட்டு, “ஆறுன பாலா இருந்தாலும் ஊத்துங்க எசமான்”னு சொல்ற சாதாரண பூனைன்னு நினைச்சியா? பெர்சியன் பூனைடா….” ன்னு ஒரு டயலாக் வச்சுருப்பாரோ?