ஷாக் அடிக்கும் கரண்ட் சுச்சுவேஷன்! கெட்ட வார்த்தைகளுடன் ஒரு அரசியல் படம்!
‘கரண்ட்’ சுச்சுவேஷன்ல கை வைக்கிற யாருக்கும் ‘ஷாக்’ அடிப்பது சகஜம்தான். ஆனால் தெலுங்கு பட இயக்குனர் தேஜா, தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து கூவத்தூர் வரைக்கும் குச்சியை விட்டு ஆட்டுவது ரசிக்கக் கூடிய விஷயமா என்றால், ஏன் ரசிக்கக் கூடாது என்ற குரல்கள் அதிமுக விலிருந்தே வந்தால் கூட ஆச்சர்யமில்லைதான். ஏன்? தேஜா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன். அதுமட்டுமல்ல… அவர் இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் தலைப்பு, யாருடைய பாடல் என்பது முக்கியமாச்சே?
எம்.ஜி.ஆர் ரசனையை அதோடு விட்டாரா தேஜா? இன்னும் ஒரு படி மேலே போய் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் வரும் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுக்காமல் அப்படியே இந்த படத்தின் பயன்படுத்தியும் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்து முப்பது வயசு வரை இதே காற்றை சுவாசித்த தேஜா, தற்போது வேண்டுமானால் ஆந்திராவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கலாம். இன்னமும் பேச்சு மூச்செல்லாம் புரட்சித்தலைவர்தான் என்கிற அளவுக்கு வெறி பிடித்த எம்.ஜி.ஆர் ரசிகன். தெலுங்கு படமாக இருந்தால் கூட, அதிலும் பின்னணியில் எங்காவது ஓரிடத்தில் எம்.ஜி.ஆர் பாடலை ஒலிக்க விடுகிற அளவுக்கு பெரும் ரசிகனாம் இவர்.
ராணா காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் ‘நான் ஆணையிட்டால்’ படம், தெலுங்கில் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’ என்ற பெயரிலும் வெளியாகப் போகிறது. இந்தப்படத்தில் எம்.எல்.ஏ கடத்திக் கொண்டு போய் ரிசார்ட்டில் வைத்து அரசயலில் ஜெயிக்கும் ஒருவனைதான் ஹீரோவாக காட்டியிருக்கிறார் இவர். ‘தமிழ்நாட்ல கரண்ட் சுச்சுவேஷனோட பொருந்துதே… பேசாம இந்தப்படத்தை தமிழிலும் எடுத்தாலென்ன’ என்று தோன்ற, அதற்கப்புறம் படத்திற்குள் மயில்சாமி உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டார். காரைக்குடியில் மட்டும் 40 நாட்கள் ஷுட்டிங் எடுத்தார்களாம்.
படம் வரும்போது தமிழ்நாடே ரணகளமாகும் என்கிறார்கள். ஏன்?
படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறதாம். கட்சியே கெட்டுப்போச்சு. இதுல வார்த்தையை மட்டும் சுத்தமா வச்சு என்ன பண்ண? நீங்க நாறடிங்க தோழா…