ஆணவக்கொலைக்கு எதிராக ஒரு ஆவேசப்படம்!
சாதி வெறி தலைக்கேறிக் கிடக்கும் சமூகத்தில், பாதி உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் பிறக்கிறது அநேக காதல்கள். கரை தப்பினால் சந்தோஷம். இல்லையென்றால் ஊருக்கு ஊர் உயிரை எடுக்கும் அரிவாள்களுக்குதான் கொண்டாட்டம். ஆணவக் கொலை சம்பந்தப்பட்ட படங்களுக்கு கூட அந்தந்த ஏரியாவில் கட்டையை போடும் சமூகத்தில், தொடர்ந்து அதுபற்றிய குரல்கள் எழும்பிதானே தீர வேண்டும்?
முன்னாள் பத்திரிகையாளர் ஆதிராஜன், அப்படியொரு குரலாக ஒலிக்க வந்திருக்கிறார். இவரது முதல் படம் சிலந்தி. அதற்கப்புறம் அதர்வனம் என்ற படத்தை இயக்கிய ஆதி, சாதிக்கு எதிராக சங்கு அறுக்க வந்திருக்கும் படம்தான் அருவா சண்டை!
திருநெல்வேலியை சேர்ந்த நிஜமான கபடி வீரன் ராஜா என்பவர்தான் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். கதையும் கபடி கிரவுன்ட்டில் நடப்பதுதான். தமிழரின் பாரம்பரிய விளையாட்டை முன்னிறுத்துவதுடன், ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வந்திருக்கும் ஆதிக்கு சப்போர்ட் யார் யார் தெரியுமா?
ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இமான் அண்ணாச்சி ஆகியோர். இசை தரண்.
கதாநாயகியை மட்டும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரும் கபடி ரசிகராக இருக்க வேண்டுமல்லவா?
நெல்லையை பிறப்பிடமாக கொண்ட ஆதிக்கு, சாதிக்காரர்களின் எதிர்ப்பு வந்தே தீரும். காதலா? சாதியா? கத்தியையும் புத்தியையும் சேர்த்து சுழற்றுங்க வாத்தியார்… !