போய் வா நதியலையே….

சிவகாசி வறண்ட பூமி! வானம் பார்த்த பூமியில் பூக்களின் விளைச்சலுக்கு என்ன வேலை? நெருப்பை கருப் பையாக கொண்ட வெடித் தொழில்தான் எங்கு நோக்கினும். இயற்கையின் இந்த ஓர வஞ்சனைக்கு இறைவனே கொடுத்த ‘சாப விமோசனம்’தான் ஸ்ரீதேவி என்கிற பூந்தோட்டம்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதயங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தவர் அதற்கப்புறம் இந்தியாவின் அடையாளம் ஆனதெல்லாம் தானாக நடந்தவை. அழகிருந்தால் குரல் இருக்காது. குரல் இருந்தால் அழகிருக்காது. இரண்டும் இருந்தால் ஏதோவொன்று சந்திப்பிழையாக இருக்கும். ஆனால் எந்த பிழைக்கும் இடம் வைக்காமல் படைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி.

நடிகைகளே ஒரு நடிகையின் அழகில் மயங்கினார்கள் என்றால் அது இவரது அழகுக்கு மட்டும்தான். ஒருமுறை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. அந்த நேரத்தில் கவர்ச்சி ஆட்டங்களில் கொடி கட்டிப் பறந்த மும்தாஜ், திடீரென மேடைக்கு பாய்ந்து ஸ்ரீதேவியை கட்டிப்பிடித்து முத்தம் வைத்ததை, கரவொலி எழுப்பி கொண்டாடியது ரசிகர் கூட்டம். அன்று எல்லாருமே மும்தாஜ் மனநிலையில் இருந்தது வேறு கதை!

பிரபல திரையுலக பொக்கிஷம் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஸ்ரீதேவி பற்றி சொல்லும்போது ஆச்சர்யம் விலகாமல் சொன்ன விஷயம்தான் நினைவுக்கு வருகிறது. ‘அந்தப் பொண்ணு பெரிய நடிகை ஆன பிறகும் குழந்தையா இருந்தது என் கண்ணுலேயே இருக்கு. ஒரு ஷாட் முடிஞ்சதும் ஓடிப்போய் அவங்க அம்மா மடியில் படுத்துப்பாங்க. குழந்தை போல கொஞ்சுவாங்க. ஷாட் ரெடின்னதும் அந்த மெச்சூரிடி எங்கிருந்துதான் வருமோ? ஆச்சர்யம் ஆச்சர்யம்’ என்றார்.

அம்மா மடியை தேடிப் போயிட்டீங்களா மயிலு?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெறுப்பா இருக்கு ரஜினி சார்!

Close