வெறுப்பா இருக்கு ரஜினி சார்!

சூப்பர் ஸ்டார் பட அறிவிப்பு வந்தாலே குஷி ஆகிவிடுவோம். தினத்தந்தியில் வந்திருக்கும் நாலுவரி செய்தியைப் படிப்போம். அடுத்து தினகரனைத் தேடி ஓடுவோம். அங்கேயும் இதே தான் எழுதியிருக்கும். ஆனாலும் ஆர்வமாய்ப் படிப்போம். விகடன் & குமுதத்திற்கு காத்திருப்போம். அதே நாலுவரி செய்தியை நாலுபக்கத்திற்கு இழுத்து சொல்லியிருப்பார்கள், தலைவனின் ஸ்டில்ஸ் போனஸ். அதையும் படித்து புளகாங்கிதம் அடைவோம்.

ஆனால் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ரஜினி பட அறிவிப்பைப் பார்த்து கோபமும் வெறுப்பும் அருவறுப்பும் அடைந்து உட்கார்ந்திருக்கிறேன். இந்த போஸ்டர் மீதே வாந்தி எடுத்துவிடுவோனோ என்று பயமாக இருக்கிறது.

இன்றைய நிலையில் ரஜினி ரசிகர்கள் இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள். ஒன்று, அவர் அரசியலுக்கு வந்து மக்கள் சேவ்வை(!) செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் (ரஜினி புகழை வைத்து சம்பாதிக்க நினைக்கும் கனவான்களும் இதில் அடக்கம்). இரண்டாவது, ’சினிமாவே போதும் தலைவா…அரசியல் வேண்டாம்.மரியாதையோட நிம்மதியா வாழ்ந்திட்டுப் போ’என்று நினைக்கும் என்னைப் போன்ற ரசிகர்கள். எங்கள் குரூப் தான் மெஜாரிட்டி என்பது என் யூகம்.

அந்தவகையில் பார்த்தால், ரஜினியின் புதுப்பட அறிவிப்புக்கு நான் சந்தோசப்படத்தான் வேண்டும். சன் டிவி & கார்த்திக் சுப்புராஜ் காம்போ எனும்போதே ஒரு புதுமையான ரஜினி படமாக இருக்கும் என்பதால், குதூகலிக்க வேண்டும். ஆனாலும் நொந்துபோய் அமர்ந்திருக்கிறேன்.

’போர் வரும்போது பார்ப்போம்’ என்று ஆரம்பித்து ’களத்தில் நிற்போம். கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்’ என்று சொல்லியாகிவிட்டது. அது தேவையற்ற வேலை என்றாலும், சொன்னதற்காகாவாவது ஏதாவது உருப்படியாகச் செய்வார் என்று பார்த்தால், அடுத்த பட அறிவிப்பு வருகிறது.

பிஜேபியின் பி டீம், வாடகைப் புகழ், சுப்ரீம் கோர்ட் கடனை திருப்பித் தர கெடு, தைரியலட்சுமின்னா லைட்டா பயம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு முட்டுக்கொடுத்து, இணையத்தில் எத்தனை அடி விழுந்தாலும் ‘எங்க தலைவன் வருவான்யா’ என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகவே இந்த புதுப்பட அறிவிப்பை பார்க்கிறேன்.

ஆனால் இது ரசிகர்களுடன் மட்டும் முடிகிற விஷயம் இல்லை என்பது தான் எனது புலம்பலுக்குக் காரணம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கேலி செய்கிற விஷயமாகவே இதைப் பார்க்கிறேன்.

‘போர் வரும்போது வருவேன்…நான் அரசியலுக்கு வரணும்னா ஒரு கோடிப்பேர் சேருங்கள். முடிந்தால் ’எனக்குத் தான் ஓட்டு’ என்று ஒரு பத்திரத்தில் எழுதி கையெழுத்துப்போட்டு, உத்தரவாதம் கொடுங்கள். நான் வரணும்னு 25 வருசமா கெஞ்சுறீங்கள்ல..அப்போ கன்ஃபார்மா ஒரு கோடி ஓட்டு விழுந்து, ஸ்ட்ரெய்ட்டா சி.எம் சீட்ல என்னை உட்கார வைப்பீங்கன்னா, நான் வர்றேன். அதுவரை…..நாட்டை விடுங்கள்..கட்சியை வளர்க்கக்கூட எதுவும் செய்யமாட்டேன்’ என்பது என்ன வகை அரசியல் என்றே எனக்குப் புரியவில்லை.

மக்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்று ரஜினிக்கு எடுத்துச் சொல்ல ஒரு யோக்கியன்கூடவா அவர் அருகே இல்லை? ’போராட மாட்டேன்..ஐஞ்சு பைசா செலவளிக்க மாட்டேன்..உங்களுக்கு வேற நாதியில்லை..ஆகவே என்னை சி.எம் ஆக்குங்கள்’ என்று சொன்னால், ஒரு சதவீதம் சூடு சொரணை உள்ள கூட்டம்கூட உங்கள் பின்னால் நிற்காது.

1996ல் ரஜினியின் பேட்டியைப் பார்க்க, எங்கள் ஊர் பஞ்சாயத்து டிவி முன் ஊரே திரண்டிருந்தது. இன்று, எல்லா நியூஸ் சேனலில் லைவ் போட்டாலும் பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. தினகரனுக்கு இருக்கும் ஆதரவுகூட ரஜினிக்கு இல்லை. முன்பு எப்போ வருவார் என்று கேட்டவர்கள், இன்று ’இப்போ ஏன் வர்றார்?’ என்று கேட்கிறார்கள். ‘நல்லா சம்பாதிச்சு முடிச்சிட்டு, இனி சினிமாவில் சம்பாதிக்க வழியில்லை என்பதால் தான் வருகிறாரா?’என்று பச்சையாகவே பாமர மக்கள் கேட்கிறார்கள். உண்மையிலேயே அரசியல் ஆர்வம் இருந்தால், இந்த எண்ணத்தை மாற்றுவது எப்படி என்று தான் ரஜினியும் அவரின் போர்ப்படை(!)யும் யோசிக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் புதுப்பட அறிவிப்பு வருகிறது. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கேணப்பய கூட்டம் என்று நினைக்கிற ஒருவரால் தான் இந்த காரியத்தைச் செய்ய முடியும். ரஜினியிடம் இதை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

ஒன்று, எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று ஒத்துக்கொண்டு சினிமாவில் தொடர வேண்டும். அல்லது, அரசியல் தான் என்ற முடிவுடன் களத்தில் இறங்க வேண்டும். யாரோ அவரின் கழுத்தைப் பிடித்து அரசியலில் தள்ளுவதாக உணர்கிறேன். அது பிஜெபியாக இருக்கலாம் அல்லது அவரின் குடும்பமாக இருக்கலாம். இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கப்போவது என் தலைவன் தானே?

அதைப் பொறுக்க முடியாமல் தான் இந்தப் பதிவு!

இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ!!!

(செங்கோவி குரு முகநூல் பதிவிலிருந்து…)

Read previous post:
Naachiyaar, Veera, Nagesh Thiraiyarangam – Original Collection Report !

https://www.youtube.com/watch?v=8koXzYbS_Kc&t=8s

Close