அதே கண்கள் விமர்சனம்
கண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி போவுதா? என்று ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டாலும் மிச்ச நிமிஷத்திற்காக காத்திருக்க வைத்திருப்பதுதான் இந்த படத்தின் நூதன திரைக்கதை.
கண் பார்வையற்றவரான கலையரசனை தேடி வந்து நட்பு கொள்கிறார் ஷிவ்தா. மெல்ல அது காதலாகிறது. திடீரென கண்ணிர் சிந்தியபடி அவர் முன் நிற்கும் ஷிவ்தா, ஒரு துயரக் கதையை சொல்ல மனம் நெகிழ்கிற கலையரசன், தன் சம்பாத்தியத்திலிருந்து பெரும் தொகையை கொடுக்க தயாராகிறார். அந்த நேரத்தில்தான் ஆக்சிடென்ட். ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிவிடும் அவருக்கு கெட்ட இருட்டிலும் ஒரு வட்ட நிலவு. மீண்டும் கண்பார்வை கிடைக்கிறது. பார்வை வந்த மறு நொடியிலிருந்தே தன் காதலி ஷிவ்தாவை தேட ஆரம்பிக்கிறார். அங்கும் ஒரு ட்விட்ஸ்ட். இவரிடம் இருந்து நகைகளை அடித்துக் கொண்டு கிளம்பிவிடும் ஒரு கும்பலை சேர்ந்த ஆசாமி ஆக்சிடென்ட்டில் இறந்ததாக ஒரு டி.வி செய்தி கண்ணில் பட, மேல் விசாரணைக்காக ஈரோடு கிளம்புகிறார் கலையரசன். போன இடத்தில் கலையரசன் சந்திக்கும் திகில் பிகில் சமாச்சாரங்கள்தான் க்ளைமாக்ஸ்.
இப்படியொரு கதையில் நடிக்க சம்மதித்ததற்காகவே கலையரசனுக்கு ’மிஸ்டர் தியாகம்‘ பட்டத்தை கொடுத்துவிடலாம். பார்வையற்றவராக நடிக்க சம்மதித்தது ஒரு தியாகம் என்றால், ஷிவதாவிடம் மரண அடி வாங்க சம்மதித்தாரே… அது மற்றொரு தியாகம், கடைசிவரை கண் பார்வையற்றவராகவே இவரை காட்டி, நடிப்பு ரசத்தை பிழிந்து ஆளுக்கொரு டம்ப்ளர் கொடுத்து அலற விடப் போகிறார்கள் என்று அச்சப்படும் நேரத்தில் அவருக்கு பார்வை வந்துவிடுகிறது. காட் கிரேஸ். அதுவரை சற்றே ஆர்ட் பிலிம் ஸ்டைலில் நகர்கிற கதை, பால சரவணன் என்ட்ரி ஆனபின் கலகலப்புக்கு தாவி விடுகிறது.
சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் கதற விடுகிறார் பால சரவணன். அதிலும் ஒவ்வொரு முறையும் குறுக்கே வந்துவிழும் அந்த ஹெல்மெட் ஆசாமியிடம் சரவணன் எரிந்துவிழும் அந்த நிமிஷம் தியேட்டரே கலகல…
படத்தின் என்ஜின் ஷிவதாதான். மார்கழி மாத கர்நாடிக் சபாவுக்குள், சென்டை மேளம் புகுந்த மாதிரி என்ன ஒரு அமர்க்களம்? கண்ணில் ஒரு வில்லத்தனம் மின்ன, மறுநிமிடமே அதில் காதலை மிதக்கவிடட்டும் அந்த லாவகம், இன்னும் பல படங்களை பெற்றுத்தரும் அவருக்கு. சண்டைக்காட்சிகளில் அநாயசமாக காலை தூக்கியடிப்பதால், ஹெவி சப்ஜக்ட் பெண் இயக்குனர்கள் இவர் பக்கம் நோட்டம் விடலாம்.
வெறும் தூரல் மழையிலேயே முளைத்த காளான் போல மிக மிக சின்ன கேரக்டர்தான் ஜனனி அய்யருக்கு. கண்ணே தெரியாத கலையரசன் எப்படி ஷிவதாவை அடையாளம் கண்டுகொள்வார்? கரெக்டாக வந்து “இவதான் அவ…‘’ என்று சொல்வதற்காகவே பின் தொடர வைக்கிறார்கள் அவரை.
படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட அடியன்சை கவர்கிறார்கள். முக்கியமாக டைரட்டர் அரவிந்தராஜ் தனி கவனம் பெறுகிறார்.
கதை நடக்கும்போதே இந்த இடத்தில் லாஜிக் தடுமாறுதே… என்று யோசிக்க வைக்கிறார் டைரக்டர் ரோகின் வெங்கடேசன். அடுத்தடுத்தது வரும் காட்சிகள் அந்த லாஜிக் பள்ளத்தை மிக லாவகமாக மூடுகிறது. இப்படி எங்குமே இடறாமல் முடங்காமல் முழு கதையையும் கொண்டுபோன விதத்திற்காக சபாஷ் ப்ரோ.
ஜிப்ரானின் இசையில் வரும் பாடல்கள் வலிக்காத மெலடிகள். ஆனால் பின்னணி இசை? திகிடுதம்பம்
அதே கண்கள்… மொட்டை வெயிலில் கூலிங் கிளாஸ்!
.ஆர்.எஸ்.அந்தணன்
https://youtu.be/o-3k8EJXI04