அஜீத் என்ற இரும்பு பிளேட்!

தமிழ்சினிமாவில் சிக்ஸ்பேக்கை அறிமுகப்படுத்திய முதல் நடிகர் யார் தெரியுமா? தனுஷ்தான்! ‘பொல்லாதவன்’ படத்தில் அவர் சிக்ஸ்பேக் வைத்திருந்தார் என்பதை யாரும் அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால், ‘கேரி பேக்’ தெரிந்தளவுக்கு கூட சிக்ஸ்பேக் பற்றிய அக்கறை ஒரு தமிழனுக்கும் அப்போது இல்லை! தனுஷின் இயல்பான ஒட்டிய வயிறும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பட்… அந்த அந்த ஒட்டிய வயிற்றுக்குள் ஆறு அட்ச தீர்க்க ரேகைகளை வரவழைக்க அவர் செய்த எக்சர்சைஸ்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதற்கப்புறம் சிக்ஸ்பேக்குக்கு ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்ற ஒரே தமிழ் நடிகை நயன்தாராதான்! சத்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஷால், சிக்ஸ்பேக் வைக்க அதிகம் மெனக்கெட்டார். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பிட்னஸ் சென்ட்டரில் பழிகிடந்த விஷாலுடன், தானும் ஒரு சிக்ஸ்பேக் ரசிகையாக இணைந்து கொண்டார் நயன்தாரா. கடுமையான உழைப்பு. வேடிக்கை என்னவென்றால், இப்படியெல்லாம் சிக்ஸ்பேக் வரவழைக்க வெறும் எக்சர்சைஸ் மட்டும் போதாது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் தொண்டை முதல் வயிறு வரை ஒரு கொடூரமான தாகம் எடுக்கும். அந்த நேரத்தில் பச்சை தண்ணி பல்லில் படக்கூடாது. வேண்டுமென்றால் ஒன்றிரண்டு சொட்டு தண்ணீரை பஞ்சில் நனைத்து உதட்டில் தடவிக் கொள்ளலாம். அப்படிதான் தாகம் தீர்த்துக் கொள்கிறார்கள் சிக்ஸ்பேக்ஸ் பிரியர்கள். அதுமட்டுமல்ல. மேற்படி விரத காலங்களில் அரிசி உணவு அறவே கட்! சாப்பிடுகிற புரதம், மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் கூட, பெரசிட்டமால் மாத்திரையை விட சற்று பெரிதான உருண்டையாக இருக்கும். அவ்வளவே…

இப்படியெல்லாம் போராடிதான் அஜீத்தும் தன் சிக்ஸ்பேக்கை கொண்டு வந்திருக்கிறார். ‘விவேகம்’ படத்தின் முதல் லுக் வெளியானதும் உலகம் முழுக்க இருக்கிற அஜீத் ரசிகர்கள் பெற்ற ஆனந்தத்திற்கு அளவேயில்லை. லுக் வெளியான அடுத்த அரை மணி நேரத்திற்குள் கட்டிடத்தை மறைக்கிற அளவுக்கு கட் அவுட்டுகளை தயாரித்து, பாலாபிஷேகத்திற்கு தயாராகிவிட்டார்கள். அவர் மீதிருக்கும் அளவு கடந்த அன்புதான் இதற்கு காரணம் என்றாலும், அவற்றை தாண்டிய இன்னொன்றும் இருந்தது அதில். அது வேறொன்றுமல்ல… எல்லாருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்திய அவரது உழைப்பு.

அஜீத்தை ஆரம்ப காலம் முதலே கவனித்து வரும் அவரது ரசிகர்களுக்கு தெரியும், அவரது உடல் பட்ட ரணங்களை பற்றி. அவரை ஸ்கேன் செய்தால், உள்ளே ஏகப்பட்ட இரும்பு ஐட்டங்கள் புலப்படும். மருத்துவம், தகட்டு பிளேட்டை வைத்து தைக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே ‘அடிபட’ ஆரம்பித்துவிட்டார் அவர். மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சி ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியாக உணர்ந்ததுதான் அவரது உடம்பு. இன்று பிளேட் மாறி மருத்துவ விஞ்ஞானம் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது. எப்போதோ எடுத்த ரிஸ்க்குகளை இப்போதும் எடுக்கிறார் அவர். அதில் ஒன்றுதான் இந்த சிக்ஸ்பேக் உடற்பயிற்சி.

ஒருமுறை அஜீத்தின் ஓவர் எடை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ரெட் திரைப்படம் வந்த நேரம் அது. அப்போது பதில் சொன்ன அஜீத், “நான் என்ன பண்ணட்டும். முதுகு தண்டு ஆபரேஷனுக்கு பிறகு ஏகப்பட்ட ஸ்டீராய்டு மாத்திரிகளை சாப்பிடுகிறேன். அதன் பக்க விளைவுகள் உடம்பில் எடை போட வைக்கிறது. மாத்திரையை நிறுத்த முடியாது. முதுகு வளைந்து எக்சர்சைஸ் செய்ய முடியாது. பட்டினியாய் கிடந்தாலும் எடை போடும். அவ்வளவையும் சமாளித்துதான் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

அதற்கப்புறமும் அவர் உடம்பில் ஏகப்பட்ட பிரச்சனை. ‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் கார் ஆக்சிடென்ட்டில் சிக்கினார். வலியை பொறுத்துக்கொண்டு முழு படத்தையும் நடித்து முடித்தவர், அதற்கப்புறம் முழங்கால் ஆபரேஷன் செய்து கொண்டார். சில மாதங்கள் ஓய்வுக்குப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜீத், அதற்கப்புறம் மெல்ல எக்சர்சைஸ் செய்ய ஆரம்பித்தார். உடல் எடையை சீராக வைத்திருக்கவும் முடிந்தது. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘விவேகம்’ படம் துவங்கும் போதே, “சிக்ஸ்பேக் வைக்கிறோம்” என்று சிறுத்தை சிவாவின் தோள்களை தட்டிக் கொடுத்தாராம் அஜீத்.

ஜிம் ட்ரெய்னர் யூசுப் உதவியோடு சுமார் ஐந்து மாதங்கள் கடும் பயிற்சி எடுத்திருக்கிறார் அஜீத். நினைத்தது வந்துவிட்டது. ஆனால் “இது அவரது உடம்பே அல்ல. இந்த முதல் லுக் போஸ்டரில் இடம் பெற்றிருப்பது அஜீத்தின் தலைதான். உடம்பு வேறொரு ஹாலிவுட் நடிகருடையது” என்று வலைதளங்களில் முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்துவிட்டது. இந்த அங்கலாய்ப்பு குறித்து நம்மிடம் பேசிய அஜீத் ரசிகர் ஒருவர், “அஜீத் சார் எப்பவும் உண்மை பேச தயங்கியதே இல்லை. எந்த போஸ்டரிலும் அவரது பொய்யான உடல் வாகு இதற்கு முன் வந்திருக்கிறதா? பரமசிவன் படத்தில் அவ்வளவு ஒல்லியாக இருப்பார். ரெட் படத்தில் அவ்வளவு தொப்பையோடு இருப்பார். நினைத்திருந்தால், போஸ்டர்களில் அதை பேலன்ஸ் செய்து டிசைன் செய்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் அதை மறைந்தவரில்லை அவர்”

“இப்போது ஒரு பொய்யை சொல்லிவிட்டு, திரையில் அது இல்லை என்றால் சினிமாவில் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்பது அவருக்கு தெரியும். அதைவிட தன் ரசிகர்கள் எப்படி மனம் வருந்துவார்கள் என்பதையும் கவனிப்பவர் அவர். இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லவே இல்லை” என்றார் மன வேதனையுடன்!

ஊர் வாயை அடைக்கும் விதத்தில், அஜீத் ஜிம்மில் பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை உடனே வெளியிட வேண்டும் என்று துடித்தாராம் டைரக்டர் சிவா. அவரை பொறுமை காக்க சொன்ன அஜீத், “பேசுறவங்க பேசட்டும். அவங்களுக்காக நாம் உணர்ச்சிவசப்பட தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். இருந்தாலும், நிஜத்தை ஊருக்கு சொல்லும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறதாம்.

வெல்வதற்கு வேகம் மட்டுமல்ல, ‘விவேகம்’ முக்கியம் என்று நம்பும் அஜீத், இந்த சிக்ஸ்பேக்ஸ் ரகசியத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்ப்பதுதான் சரி.

-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி – கல்கி வார இதழ்

https://www.youtube.com/watch?v=QUY5NGSHkfM&t=4s

2 Comments
  1. முத்து says

    அஜித் ஒரு சுயநலவியாதி. அவன் படத்தை பார்ப்பவர்கள் தமிழ் இன விரோதிகள். அவனை தமிழ்நாட்டை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும்.
    உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அவன் படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டுகிறேன்.

  2. Rangaraj says

    How come your stance changes so fast editor? Be honest in whatever you say!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹாரிஸ் ஜெயராஜை கழற்றிவிட்டது ஏன்? கவண் கே.வி.ஆனந்த் விளக்கம்!

Close