ஒரு ரசிகனும் சில ஆவிகளும் வெயிட்டிங்! என்ன செய்யப் போகிறார் அஜீத்?
இன்னும் கொஞ்ச நாளில் அஜீத் வீட்டு வராண்டாவில் ஒரு ஆடியோ விழா நடந்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை! ஏனென்றால் ஒரு வளரும் படத்திற்கு சைலன்ட்டாக பிள்ளையார் சுழி போட்டவரே அவர்தானே?
ஷ்யாம்ஜி என்ற இளைஞருக்கு அஜீத் என்றால் ஆஸம்! தலக்காக ஏதாவது பண்ணணும்டா… என்று அல்லும் பகலும் யோசித்து யோசித்து ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார். “தல பேரை சொல்ற மாதிரி ஒரு பாட்டு போட்றணும்”. போட்டார்… அது வெறும் டண்டணக்கா இல்லை. லட்சோப லட்சம் ரசிகர்களால் பாராட்டப்பட்ட ஆஹா ஓஹோ ஆல்பம். 2014 ல் வெளிவந்த அந்த ஆல்பத்தின் பெயர் ‘தலடா பஞ்ச்’! அதற்கு அஜீத் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக தலடா பஞ்ச் ஆல்பத்தின் இரண்டாம் வெர்ஷன் 2015 ல் வெளிவந்தது. ஆமா அதை அஜீத் பார்த்தாரா, கேட்டாரா, என்றெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அஜீத்தின் புகழ் பாடிக் கொண்டிருக்கும் இந்த ஷ்யாம்ஜி ஏராளமான அஜீத் ரசிகர்களின் ஆதரவோடு ‘கிறிஸ்டோபர்’ என்ற குறும்படத்தை எடுத்திருந்தார்.
இங்குதான் ட்விஸ்ட்! அதே அஜீத் ரசிகர்கள், “ஏண்ணா இதை முழு படமா நீட்டக் கூடாது?” என்று கேட்க, இதோ அதே படத்தை முழு சினிமா படம் ஆக்கிவிட்டார். கிட்டதட்ட 1000 நாட்கள் இந்த படத்திற்காக உழைத்ததாம் அஜீத்தின் ரசிகர் டீம். இந்த ஆவிக்கதை ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்தான் என்கிறார் ஷ்யாம்ஜி.
இனிமேல்தான் முக்கியமான கட்டம். இந்தப்படத்தின் பாடல்களை அஜீத்தின் கையால் வெளியிட ஆசைப்படும் இந்த டீம், உங்க வீட்டு வராண்டாவுல ஒரு ஓரத்தையும், உங்க மனசு ஓரத்துல கொஞ்சம் ஈரத்தையும் ஒதுக்குங்க தல… என்று மனு அனுப்பிவிட்டு காத்திருக்கிறது.
நடந்தாலும் நடக்கும். நடக்கலேன்னாலும் கோவிச்சுக்கிற தூரத்தில் இல்லை ஷ்யாம்ஜி. ஏனென்றால் அஜீத்தின் கட் அவுட்டுக்கே கை குலுக்கிப் பெருமைப்படும் வெறி பிடித்த ரசிகனாச்சே இவர்?
To listen Audio Click below:-
https://youtu.be/3Ten0Nhd-c8