தடியடி நடத்தியது சரிதான் என்று சொன்னேனா? விஷால் கடும் எரிச்சல்!
விஷாலை குறிவைத்து அடிக்கிற வேலைகள் ஸ்டார்ட் ஆகி, துரிதமாக போய் கொண்டிருக்கிறது. கொல்லைபுறமாக வந்து இப்படி குத்துகிற நபர்கள் யாரென்றே தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார் அவர். “நானே மைக்கை புடிச்சு சொல்லாத வரைக்கும் அது என் கருத்தல்ல…” என்று அவர் சொல்லி முழுசாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் சொன்னதாக ஒரு தகவலை பரப்பி விட்டுவிட்டார்கள். உடனடியாக தன் மறுப்பை வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கிறார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதென்ன?
“மறுபடியும் இன்னொரு செய்தி என்னைப் பற்றி தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல் வந்தது. சகாயம் ஐ.ஏ.எஸ் ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மாணவர்கள் மீது தடியது செய்தது சரி என நான் சொன்னதாக ஒரு விஷயத்தை உருவாக்கியுள்ளார்கள். நான் மறுபடியும் சொல்கிறேன். என்னை பழிவாங்க வேண்டும் என்றால் அதற்கான நேரம் இதுவல்ல.
நீங்கள் வேறு ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இது ஒரு முக்கியமான விஷயம். மாணவர்களின் போராட்டம் வெற்றியடைகிற நேரத்தில், யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனக்கு அது நோக்கமல்ல.
இன்றைக்கும் சொல்கிறேன். நான் நல்ல செய்தி வரும் என சொன்னது நடந்துவிட்டது. அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளார்கள், கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த சமயத்தில் விஷால் இப்படிச் சொன்னான் என ஆளுக்கு ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது.
மாணவர்களின் போராட்டம் சம்பந்தமாக நான் எதுவுமே தவறாக சொல்லவில்லை. சமூகவலைதளம் என்பது வேறு ஒரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நடிகரின் பெயரைப் போட்டு நம்பும்படி செய்தி வெளியிட்டு, அதை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்”
இதற்கப்புறமாவது அவரை பற்றி செய்திகள் வெளியிடும்போது ஆதாரம் இருந்தால் மட்டும் வெளியிடுவதுதான் அனைவருக்கும் மரியாதை.
https://youtu.be/qZglvmYFMfw