கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?!

இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா எவ்வளவு ஸ்பெஷல் பர்சன் என்று. இந்த ஆடியோ விழாவுக்கு இயக்குனர் பாலா வந்திருந்தார், உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார் மற்றும் ஆர்யாவின் சொந்த பந்தமெல்லாம் வந்திருந்தாக… ஆனால் ஒருவரின் கண்ணுக்கும் இருவரை தவிர எவரையும் தெரியவில்லை. அவர்கள்…?

த்ரிஷாவும் நயன்தாராவும்.

‘அவங்களே வந்துட்டாங்களா? அவங்க நடிச்ச படத்தோட விழாவுக்கே வர மாட்டாங்களே, அவங்களே வர்றாங்கன்னா…? ஏதோ சம்திங் சம்திங்’ என்று விடாமல் பொறி பற்ற வைத்துக் கொண்டிருந்தார்கள் மைக் பிடித்த அத்தனை பேரும். அதிலும் உதயநிதி பேசும்போது, இந்த நாள் தமிழ்சினிமாவின் பொன்னாள். ஏனென்றால் த்ரிஷாவும் நயன்தாராவும் சேர்ந்து கலந்து கொண்டதால்தான் என்றெல்லாம் கூறி சந்தோஷப்பட்டார். எல்லாம் ஆர்யாவுக்காக… என்றார்கள் இன்னும் சிலர். ஆர்யா மாதிரி ஒரு தயாரிப்பாளரை அணுசரித்துப் போகிற ஹீரோ யாருமே இல்லை. அந்தளவுக்கு இணக்கமா இருப்பார். நான் பட பிரமோஷனுக்காக அவரை எல்லா சேனலுக்கும் கூப்பிட்டு போயிருக்கேன். அவ்வளவு ஏன்? துர்தர்ஷனுக்கு கூட வந்திருக்கார்னா பாருங்களேன் என்றார் யூடிவி தனஞ்செயன். (துர் தர்ஷன்னா இளக்காரமா போச்சான்னு யாரும் சண்டைக்கு வராம இருக்கணும்)

விழாவில் அவ்வளவு ஸ்பெஷலான த்ரிஷாவும் நயன்தாராவும் என்ன பேசினாங்க என்பதை விடுங்கள். வழக்கம் போல, விழா அரங்கத்தில் வெடி கொளுத்திப் போட்டுவிட்டு போனவர் ‘பேச்சு சித்தர் ’ பார்த்திபன்தான். ‘416 ம் வருஷத்துல ஆர்ய பட்டர்னு ஒருத்தர் இருந்தார். ‘கணக்கு பண்றதுல’ பயங்கர கில்லாடி அவர். மேத்தமெட்டிக்ஸ்லன்னு சொல்ல வந்தேன். அவருக்கப்புறம் 96 ல் ஆர்யபட்டான்னு ஒரு ராக்கெட் விட்டாங்க. அது கூட பாதியில விழுந்திருச்சு. ஆனால் ஆர்யா வைக்கிற குறி மட்டும் தப்பறதேயில்ல. எது வேணும்னு நினைச்சு குறி வைக்கிறாரோ, அதை அடைஞ்சுட்டுதான் மறுவேலை பார்ப்பார்.

கடந்த வாரம் ‘பாஸ்ட் டிராக்’குன்னு ஒரு டிராவல்ஸ் கார்ல போயிட்டு இருந்தேன். அப்போ டிரைவர் எங்கிட்ட பேசிட்டு வந்தார். ‘இது என்னோட சொந்த கார்தான். ஆனா பாஸ்ட் டிராக்ல அட்டாச் பண்ணிட்டேன். பிக்கப் டிராப் நிறைய கிடைக்கும்னுதான் அப்படி பண்ணினேன் என்றார். அவர் கூட ஆர்யாவிடம் போட்டி போட முடியாது. ஏன்னா பிக்கப் டிராப்ல அவர்தான் மன்னன்’ என்று அடுக்கடுக்காக போட்டு தாக்கிக் கொண்டிருக்க, அசடு வழிந்தார் ஆர்யா.

ஆர்ய காவியம் மாதிரி அமர காவியமும் சுவாரஸ்யமா இருக்கும்னு நம்புறேன் என்று அவர் பேசி முடித்துவிட்டு கிளம்பியதும், மேடைக்கு ஏற்றினார்கள் த்ரிஷாவையும் நயன்தாராவையும். நானே கேள்வி கேட்டுடுறேன், நீங்க பதில் சொல்லுங்க என்று கூறிய தொகுப்பாளினி ரம்யா, நீங்க உங்களோட படங்களின் விழாக்களுக்கே வர்றதில்ல. ஆனால் இதுக்கு மட்டும் வந்திருக்கீங்க, ஏன் அப்படி என்றார்.

இதற்கு பதிலளித்த நயன்தாரா, உண்மைதான். எதுக்கும் வர்றதில்லதான். ஆனால் இது என்னோட குடும்ப விழா. ஆர்யா என் குடும்பத்துல ஒருவர் என்றார். அதோடு விட்டாரா ரம்யா. உங்க ரெண்டு பேரையும் எப்படி பார்த்துப்பார்? வேளாவேளைக்கு சாப்ட்டீங்களா, உறங்குனீங்களான்னு கேட்பாரா ? என்று தொடர, அவர் எங்களை மட்டுமில்ல, எல்லா ஹீரோயின்களையும் அக்கறையா பார்த்துப்பார் என்றார் நயன்தாரா.

இந்த விழாவுக்கு வந்திருந்த மற்ற ஹீரோக்களுக்கும், வராமல் ஒற்றர்களை விட்டு விழாவை கவனித்த ஹீரோக்களுக்கும் ஒரு விஷயம் மட்டும் புரிந்திருக்கும். பொறந்தா ஆர்யாவா பொறந்திருக்கணும்… இல்லேன்னா? (அதை எப்படி எங்க வாயால சொல்றது)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சைவம்- விமர்சனம்

‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு...

Close